அனுபவச் சுவடுகள் – 11 கல்லூரிக் கனவு நனவானது?

class room
class roomImage credit - pixabay
Published on

சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியில் எனக்குக் கணக்குப் பாடம் எடுத்த ஆசிரியர் எஸ்.எம்.கே. என்கிற எஸ். முத்துக்குமாரசாமியைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு மாதம் முடிந்துவிட்டால், தப்பித் தவறிக்கூட ‘டியூஷன் ஃபீஸ் என்னாச்சு?’ என்று கேட்க மாட்டார்.

‘ஏன் பணம் கொண்டு வரலை?’ என்று முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் நிற்க வைக்க மாட்டார்.

நாமளே கொடுத்தால்தான் உண்டு. இந்தக் காலத்தில் இப்படி ஒருவரைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

நண்பன் பாஸ்கரனும் நானும் சேர்ந்து போவோம் டியூஷனுக்கு.  ரெட்டிராயர் குளக்கரையில் பால் டிப்போவுக்கு அருகில் அவனது வீடு. அப்போது என்னிடம் சைக்கிள் இல்லை. பெரும்பாலான நாட்களில் பாஸ்கரனே தன் சைக்கிளில் என்னைக் கூட்டிக்கொண்டு போவான். வெள்ளை வெளேர் என்று இருப்பான். சுருட்டை முடி. உருண்டை முகம். மறக்க முடியாத நண்பன் பாஸ்கரன்.  பணக்காரன். ஆனால், பணக்காரத்தனம் இல்லாமல் வெகு இயல்பாக நன்றாகப் பேசுவான்.

ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்
ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

ப்ளஸ் டூ முடித்த பிறகு, வீட்டுச் சூழ்நிலை கல்லூரிக்குப் போகும்படி இல்லை. ஏதாவது வேலைக்குப் போனால் உசிதம் என்பதுபோல் இருந்தது. ஆனால், என் வீட்டில் (நான்தான் கடைசி. நாலாவது) யாருமே கல்லூரிக்குப் போகவில்லை. நான் கல்லூரிக்குப் போய்ப் படிக்க வேண்டும் என்கிற ஆசை வீட்டில் எல்லோருக்கும் இருந்தது.

ஆசை இருந்து என்ன பயன்? ஃபீஸ் கட்ட வேண்டுமே! பணம் யார் தருவார்கள்?

அப்போது (பி.எஸ்ஸி. கணிதம்) முதல் வருடக் கட்டணம் 225 ரூபாய். புரோகிதத் தொழில் செய்துவரும் அப்பாவிடம் இத்தனை பெரிய தொகையைக் கேட்பதே உசிதமில்லை. வேறு எந்த வகையிலும் இந்தப் பணத்தைப் பெற முடியாது என்று உள்மனம் சொன்னது.

கல்லூரிக் கனவைத் துறந்துவிடலாம் என்று தீர்மானித்துவிட்டேன்.

இந்தச் சூழ்நிலையில் ஒரு நாள் கணக்கு ஆசிரியர் எஸ்.எம்.கே.வைப் பார்க்கத் தற்செயலாக அவரது இல்லம் சென்றேன்.

‘என்ன செய்யப் போகிறாய்?’ என்று கேட்டார்.

விஷயம் சொன்னேன்.

‘நல்லது. என் வாழ்த்துகள். கல்லூரியில் சேர்ந்து விடு’ என்றார்.

‘பணம் புரட்டுவது கஷ்டமாக இருக்கிறது சார்’ என்றேன்.

அடுத்த விநாடியே, ‘நான் உனக்கு 225 ரூபாய் தருகிறேன். உன்னால் எப்ப முடியுமோ, அப்ப குடு. கணக்கில் நல்ல மார்க் வாங்கி இருக்கே (உண்மை. 172/200). காலேஜ் சேர்ந்துடு’ என்றார் எஸ்.எம்.கே.!

அந்த மென்மையான குரல் இன்றைக்கும் என் மனதில் ஓடுகிறது.

ல்லூரி சேர்ந்தேன். பட்ட கடனை அடைக்க வேண்டுமே...

கல்லூரியில் படித்துக்கொண்டே எப்படி சம்பாதிப்பது? யோசித்தபோது என் நண்பர்கள் ஒரு ஐடியா சொன்னார்கள். அதாவது, புத்தக சர்க்குலேஷன்.

அப்போது புத்தக சர்க்குலேஷன் வெகு பிரபலமாக இருந்தது. வெறும் பத்து ரூபாய் கட்டிவிட்டால், எல்லா புத்தகங்களும் வீடு தேடி வரும். ஓரிரண்டு நாட்கள் வைத்துப் படித்து விட்டுத் திரும்பக் கொடுத்து விடுவார்கள்.

என்னைப் பற்றி, என் குடும்பத்தைப் பற்றித் தெரிந்த வீடுகளில் கேட்டேன்.

புத்தகத் தேவை ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு உதவ வேண்டும் என்பதற்காக மாதம் பத்து ரூபாய் செலுத்த ஒப்புக் கொண்டார்கள்.

என் சந்தாதாரர்கள் பட்டியலில் சுமார் இருபத்தைந்து பேர் வரை சேர்ந்தார்கள்.

தினமும் மாலை காலேஜ் விட்டு வந்ததும், சைக்கிளை எடுத்துக்கொள்வேன். ஹேண்டில்பாரின் இரு பக்கங்களில் புத்தகப் பையை மாட்டிக்கொண்டு சந்தாதாரர்கள் வீடுகளுக்குப் பயணிப்பேன்.

காந்தி பார்க் எதிரில் புத்தகக் கடை வைத்திருந்த மகாராஜன் எனக்குப் பெரிதும் உதவினான். பாளையங்கோட்டைக்காரன். அவன் பேசினாலே, அந்த திருநெல்வேலி பாஷை உச்சரிப்பைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். என்னென்ன புதுப் புத்தகமோ வாங்கிக் கொள்வேன். மாதம் ஒரு முறை கணக்குப் பார்த்துக் கொடுத்து விடுவேன்.

மறக்க முடியாதவன் மகாராஜன். கல்லூரி முடித்து சென்னைக்குப் பிழைக்க வந்தாலும், ஊருக்குப் போகும்போதெல்லாம் மறக்காமல் மகாராஜன் கடைக்குப் போவேன். அரை மணி நேரம் அவனுடன் பழைய நினைவுகளைப் பற்றிப் பேசுவேன். ஏதேனும் கூல் டிரிங்க்ஸ் கொடுப்பான்.

அப்படி ஒரு முறை கும்பகோணம் போனபோது மகாராஜன் கடைக்குப் போனேன். கடை பூட்டப்பட்டிருந்தது. அதிர்ச்சி ஆனேன். கடை பூட்டப்படுகிற நேரம் இல்லை. அருகில் விசாரித்தேன். எல்லாவற்றையும் விட்டு விட்டு ஊருக்கே போய் விட்டதாகச் சொன்னார்கள். காரணம் தெரியவில்லை.

ரண்டு வருடங்கள் தொடர்ந்து புத்தக சர்க்குலேஷன் போட்டேன். என்னுடைய வாடிக்கையாளர்கள் அண்ணா நகர், சோலையப்பன் தெரு, ரெட்டிராயர் குளக்கரை, காமாட்சி ஜோசியர் தெரு, கல்யாணராமன் தெரு என்று பல இடங்களில் இருந்தார்கள்.

சர்க்குலேஷன் போட்டு முடித்து விட்டுக் கல்யாணராமன் தெரு நண்பன் தியாகராஜன் வீட்டுக்கு அசதியுடன் வருவேன். அவனுடைய அம்மா ஜானகி, ‘‘வாடா சாமா... காபி குடிக்கிறியா?’’ என்று கேட்பார்கள்.

பசிக்கும்போது அவர் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன். அசதியாக இருந்தபோது அவர் வீட்டில் படுத்திருக்கிறேன்.

என்னைப் பெறாத இன்னொரு தாய் ஜானகி மாமி.

ர்க்குலேஷனில் கஷ்டப்பட்டு சிறுகச் சிறுகச் சேகரித்து ஆசிரியர் எஸ்.எம்.கேவிடம் வாங்கிய கடனை ஒரு வழியாக அடைத்தேன்.

நான் நீட்டிய பணத்தைக் கையில் வாங்காமல், ‘பரவாயில்லை... இப்ப குடுக்கணும்கிறது இல்லே... உனக்கு எப்ப முடியுமோ அப்ப குடு’ என்று அப்போதும் சொன்னார். அதுதான் அவரது பண்பு.

பின்னாட்களில் விகடனில் வேலைக்குச் சேர்ந்தேன்.

என்னுடைய முதல் நூல் ‘ஆலயம் தேடுவோம்’  விகடன் பிரசுரத்தில் வெளியானது.

‘இந்தப் புத்தகத்தை நீ யாருக்கேனும் சமர்ப்பணம் செய்யலாம்’ என்றார்கள் ஆசிரியர் குழுவில்.

எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது ஆசிரியர் எஸ்.எம்.கே.தான்! மறக்க முடியாத மாமனிதர்!

இடதுபுறம் சிரித்தபடி  நண்பன் மகாராஜன்...
இடதுபுறம் சிரித்தபடி நண்பன் மகாராஜன்...

அவருக்கே இந்த நூலை சமர்ப்பணம் செய்தேன். அடியேனின் முதல் நூல் இதுதான்.

புத்தகம் வெளியானபின் இதன் பிரதியை எடுத்துக்கொண்டு அவர் வீட்டுக்குப் போனேன். பழம் இத்யாதிகளோடு புத்தகத்தையும் அவரிடம் கொடுத்து, வணங்கினேன்.

ரொம்பப் பெருமையாக என்னைப் பார்த்தார். அப்போது என் கண்கள் கலங்கிவிட்டன.

என்னைப் புடம் போட்டு, எனக்குக் கல்லூரி முகவரி தந்த ஆசான் முத்துக்குமாரசாமி!

அவரது புன்னகையும், அதிர்ந்து பேசாத தன்மையையும் மறக்க முடியுமா..!

கும்பகோணத்தில் கல்லூரியில் படிக்கிறபோது ஏற்படுகிற பொருளாதார நிலையைச் சரிக்கட்ட பல தொழில்கள் புரிந்திருக்கிறேன்.

அதில் இன்னொன்று பொங்கல் சீஸனில் வாழ்த்து அட்டைகளை விற்பது! அதெல்லாம் ஒரு சுகமான காலம். வாட்ஸப், முகநூல், மொபைல் போன் என்று இன்றைக்குப் பல வடிவங்களில் வாழ்த்துகள் பரிமாறப்பட்டாலும், அந்த வாழ்த்து அட்டை வழங்குகிற இன்பமே தனி!

இதையும் படியுங்கள்:
அச்சத்தை அச்சமின்றி எதிர்கொள்ளுங்கள்!
class room

கார்டு, கவரில் போடுவது என்று விதம் விதமான வாழ்த்து அட்டைகள் உண்டு.

நான் காலேஜ் படிக்கிறபோது ஒரு கடை போட்டு பொங்கல் வாழ்த்து அட்டைகளைக் கும்பகோணத்தில் விற்றிருக்கிறேன்.

மதுரையில் கலைமகள் விலாஸ் என்று ஒரு ஹோல்சேல் கடைக்குப் போய் வாழ்த்து அட்டைகளை மொத்தமாக வாங்கி வந்து கும்பகோணத்தில் விற்றேன். இதற்கும் மகாராஜன்தான் உதவினான்.

தன் கடை வாசலில் எனக்கு ஒரு இடம் கொடுத்தான். அங்குதான் கடை விரித்தேன்.

சொந்தமாக சம்பாதித்து, அந்த வருமானத்தைக் கொண்டு கல்லூரியில் படிப்பது சாபம் என்று சிலர் சொல்வார்கள்.

உண்மையில் அது ஒரு வரம்!

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com