அனுபவச் சுவடுகள் - 22 ஒற்றைச் சுவரும் சைக்கிள் டாக்டரும்!

ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்
ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்
Published on

கிராமத்து அக்ரஹாரங்களில் வீடுகள் வரிசையாகக் காணப்படும் அழகே தனி. எல்லா வீடுகளும் ஒன்றுபோலவே இருக்கும். வீட்டின் பரப்பளவில் வேண்டுமானால் வேறுபடலாம்.

‘உன் வீட்டைவிட உசத்தியாக என் வீட்டைக் கட்டுகிறேன் பார்’ என்கிற போட்டி மனப்பான்மை அப்போது யாருக்கும் கிடையாது. வீட்டை விதம்விதமாகக் கட்டுவதற்கு கிராமங்களில் ஆர்க்கிடெக்டுகள் கிடையாது. எல்லாம் உள்ளூர் கொத்தனார்கள், மேஸ்திரிகள்தான்.

தெருவில் அதிகம் குப்பையே சேராது. காரணம், ‘குப்பை’ பொருட்கள் அப்போது கிராமவாசிகள் பயன்பாட்டில் இல்லை. இருந்தாலும், காசு கொடுத்து அதை வாங்குவதற்குக் கிராமத்துவாசிகளிடம் வசதி இருக்காது.

பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலிதீன் கவர்கள் போன்ற அசுரன்கள் எட்டிப் பார்க்காத காலம் அது.

இன்றைக்கு எந்த ஒரு பொருளாக இருந்தாலும், மேலே சொன்ன இந்த இரண்டு அசுரன்களில் ஒருவன்தான் அந்தப் பொருளை நம் இல்லத்துக்குத் தாங்கி வருகிறான்.

விஞ்ஞான வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் இன்றைக்கு நாம் காணும் அனைத்தும் வசதிகள் அல்ல. மனித குலத்தின் வளர்ச்சிக்கு எதிராக நடக்கின்ற சதிகள். இந்த சதியின் சண்டித்தனம் தெரியாமல் ‘இதுதான் கதி’ என்று இருந்து வருகிறோம்.

எந்த விதமான மாசும் கிராமங்களில் கிடையாது. வண்டி, வாகனங்களே வராது. எல்லாம் மாட்டு வண்டிகள், டூ வீலர்கள்... அவ்வளவுதான்!

கிராமங்களில் ஒரு கார் தற்செயலாக வந்து விட்டால் போதும்... தெருவில் இருக்கிற நண்டு சுண்டுகளில் இருந்து பெரியவர்கள் வரை எல்லோரும் காரைச் சுற்றிக் கூடி விடுவார்கள். பளபளப்பான காரை முன்னும் பின்னும் தடவிப் பார்ப்பார்கள்.

கார் என்பது அன்றைய தேதியில் கிராமத்து அதிசயம்.

திருப்புறம்பயம் அக்ரஹாரத்தில் முருக்கங்குடி ஜோசியர் என்ற பெயரில் ஒரு அந்தணர் இருந்தார். அத்தனை துல்லியமாக ஜோதிடம் பார்த்துச் சொல்வார். அவர் வீட்டுக்குத்தான் கார்கள் அவ்வப்போது வரும்.

இன்றைக்கு நகரங்களில் வீட்டுக்கு ஒரு கார் இருக்கிறது.

கிராமங்களில் ஒளிவுமறைவு என்பதே கிடையாது. எந்த ஒரு விஷயத்தையும் மறைக்க முடியாது. ரகசியம் என்பதே இல்லை.

இன்றைக்கு ஒரு வீடு என்றால், அந்த வீட்டின் இரு பக்கத்திலும் ஒரு நடைபாதை -  அதாவது சந்து இருக்கும். வீடுகளை இன்றைக்குத் தனிமைப்படுத்துகிறோம். மற்றவர்களிடம் இருந்து நாம் தனித்திருக்கிறோம்.

ஆனால், அப்போது திருப்புறம்பயத்தில் தனித் தனி வீடுகள் கிடையாது. அதாவது, ஒரு வீட்டின் சுவர்தான் அடுத்த வீட்டுக்கும். இரண்டு வீடுகளையும் பிரிப்பது ஒரே சுவர்தான்.

வீடுகள் வரிசையாக...
வீடுகள் வரிசையாக...Image credit - the hindu

எங்கள் வீட்டுச் சுவரில் ஒரு படம் மாட்ட ஆணி அடித்தால், பக்கத்து வீட்டில் இருந்து கணக்குப் பிள்ளை ரங்கநாதன் ஐயங்கார் குரல் கொடுப்பார்: ‘என்ன மாமா... சுவத்துல ஆணி அடிக்கிறேளா...?’

‘ஆமாம் மாமா...’ என்று இங்கிருந்து குரல் கொடுப்போம்.

பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள் நேருக்கு நேர் பார்க்காமலேயே பல விஷயங்களை அவரவர்கள் வீட்டுச் சுவர் அருகே இருந்தபடியே குரல் உயர்த்திப் பேசிக்கொள்வார்கள்.

ரகசியம் என்பதே கிடையாது. எல்லாமே வெளிப்படைதான்.

றைவனுக்கு அடுத்த இடத்தில் இன்றைக்கு வைத்துப் போற்றப்படுகிறவர்கள் மருத்துவர்கள்!

பயத்தையும் நோயையும் போக்கி உயிர் காக்கும் அந்த உத்தமர்கள் அனைவரையும் இந்த வேளையில் வணங்குகிறேன். அவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

மனிதர்களுடைய நோய் மற்றும் உபாதைகளை பிரார்த்தனைகள் மூலமாக இறைவனிடம் தீர்த்துக்கொள்கிறோம்.

என்றாலும், சில வேளைகளில் மருந்துகளும் மாத்திரைகளும் மனிதர்களுக்குத் தேவைப்படுகின்றன.

எனவேதான், உயிரைக் காக்கின்றவர்களாக தெய்வங்களையும் மருத்துவர்களையும் கருதுகிறோம்.

இந்த நேரத்தில் எனது அரை டிராயர் பருவத்தில் திருப்புறம்பயத்தில் இருந்தபோது என்னைக் கவர்ந்த ஒரு டாக்டர் நினைவுக்கு வருகிறார். அவர்தான் எங்கள் ஊருக்கே டாக்டர்.

டாக்டர் என்றால், நீங்கள் நினைப்பதுபோல் இவர் எம்.பி.பி.எஸ். அல்ல! பத்துக்குப் பத்து சைஸில் ஓர் அறைக்குள் ஸ்டெதாஸ்கோப்புடன் உட்கார்ந்திருப்பவர் அல்ல.

இதையும் படியுங்கள்:
மனிதநேயத்தை தேடிச் சொல்லும் நிலைதான் உள்ளது!
ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

சைக்கிள் டாக்டர்.

கும்பகோணத்தில் தேர்ந்த ஒரு டாக்டரிடம் பணி புரிந்த கம்பவுண்டர். கும்பகோணத்தில் வாசம். பெயர் ராமசந்திர ராவ்!

எங்கள் ஊருக்கு காலை பத்து பதினோரு மணி வாக்கில் சைக்கிளில் வருவார். சைக்கிள் பெல் அடித்துக்கொண்டே திருப்புறம்பயத்தில் இருக்கிற அத்தனை தெரு வழியாகவும் ஒரு ரவுண்டு வருவார். பார்வை மட்டும் இரண்டு பக்கங்களிலும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். வீட்டுக்கு வெளியே வந்து யாராவது தன்னை அழைக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டே மெதுவாக சைக்கிளை மிதிப்பார்.

இவர் வருகிற நேரம் தெரிந்து வைத்திருக்கிற உள்ளூர்வாசிகள் வீட்டு வாசலில் இவரது வருகைக்காகக் காத்திருப்பார்கள்.

ராமசந்திர ராவ், ரொம்பவும் கைராசியானவர். ஊசியும் போடுவார். மருந்து மாத்திரைகளும் தருவார். தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் எதுவாக இருந்தாலும் இவரது கை பட்டுவிட்டால், சரியாகி விடும். ஃபீஸ் என்பது நாம் கொடுப்பதுதான்.

வேஷ்டி, அயர்ன் செய்த வெள்ளை கதர் சட்டையோடு கூடிய அந்த நெடிய உருவம் இத்தனை வருடங்கள் கழித்தும் என் நினைவில் பசுமையாக நிற்கிறது என்றால், இறைவனுக்கு அடுத்த இடத்தில் எங்கள் ஊரில் அவரை வைத்துப் பார்த்தோம் என்பதே காரணம்!

இதுபோல் பல கிராமங்களிலும் அன்றைக்கு ஒரு ராமசந்திர ராவ் நிச்சயம் இருந்திருப்பார்.

முகத்தில் ஒரு புன்னகை. என்ன வியாதி சொன்னாலும், சிரித்தபடியே அதற்கு மருந்து, மாத்திரை தருவார்.

பெரும்பாலும் இவரது கையால் மருந்து, மாத்திரை வாங்கியவர்கள் அடுத்த ஓரிரு நாட்களில் குணம் பெற்று விடுவார்கள்.

ரொம்ப தாகமாக இருக்கிறது என்றால், சிலரது வீட்டுத் திண்ணையில் உரிமையுடன் அமர்ந்து மோர் கொண்டு வரச் சொல்லுவார். ஆசை என்பதே இவரிடம் கிடையாது.

பல வருடங்களுக்குப் பின் எங்கள் ஊருக்கு ஒரு டாக்டர் கும்பகோணத்தில் இருந்து தினமும் வர ஆரம்பித்த பின்னர்தான், ராமசந்திர ராவின் வருகையும் நின்று போனது.

அதற்கு அவரது முதுமையும் ஒரு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும்.

கிராமத்து சுகமே தனி. அதற்கு ஈடு இணை கிடையவே கிடையாது.

கிராமத்தில் இயற்கையாக மலரும் புன்னகை, நகரத்தில் செயற்கையாகத்தான் மலருகிறது.

மொத்தத்தில் கைநாட்டு கல்ச்சர் கிராமத்தில். கார்ப்பரேட் கல்ச்சர் நகரத்தில்.

நான் அடிக்கடி கும்பகோணம் செல்வதே, அருகில் இருக்கும் பல கிராமங்களின் வழியே பயணிக்கும் சுகத்தை அனுபவிப்பதற்காகத்தான். அங்கே இருக்கும் ஆலயங்களைத் தரிசிப்பதற்காகத்தான்! அங்கே இருக்கும் மனிதர்களின் முகங்களைப் பார்ப்பதற்காகத்தான்!

வருடத்தில் ஒருமுறை அல்லது இருமுறை எப்படி ஏதேனும் உல்லாச டூர் போகிறோமோ, அதுபோல் வருடத்தில் ஒரு முறை பிள்ளைக் குட்டிகளுடன் சொந்த கிராமத்துக்குப் போய் வாருங்கள்.

தோப்பு நிழல் வாசம், பம்ப் செட் குளியல், இலை போட்டுச் சாப்பிடுவது, கிராமக் கோயில் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வது, பழைய பாச உறவுகளைப் பார்த்துப் பேசுவது என்று ஒரு நாலைந்து நாள் இருந்து பாருங்கள்...

அந்த உற்சாகம் அடுத்த ஆறு மாதத்துக்கு கியாரண்டி!

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com