மகா பெரியவாளின் அத்யந்த பக்தை நிஷ்கலா!
பல வருடங்களுக்கு முன் நங்கநல்லூரில் ஒரு விநாயகர் கோயிலில் சொற்பொழிவாற்றச் சென்றபோது எனக்கு அறிமுகமானவர் நிஷ்கலா. கல்லூரிப் பேராசிரியை. சொற்பொழிவு முடிந்தது. அப்போது, பிள்ளையார் கோயிலில் இருந்து இரண்டு தெரு தள்ளி இருக்கிற தன் இல்லத்துக்கு வர வேண்டும் என்று அன்புடன் அழைத்தார் நிஷ்கலா. அன்றைய தினம் நானும் என் மனைவியும் சென்றிருந்தோம்.
அதன் பின் நங்கநல்லூர் மற்றும் சென்னையின் குறிப்பிட்ட சில இடங்களில் என் சொற்பொழிவுகள் நடக்கும்போதெல்லாம் தவறாமல் வந்து விடுவார். தரையில் அமர்ந்து கேட்பார். மகா பெரியவா சொற்பொழிவுகளைக் கேட்ட பின் தன் வாழ்க்கையில் பல நல்லமாற்றங்கள் ஏற்பட்டதாக அவ்வப்போது போனில் பகிர்ந்துகொள்வார்.
சமீபத்தில் இரண்டாவது குழந்தையை நிஷ்கலா வயிற்றில் தாங்கி இருந்தபோது, என் சொற்பொழிவுகளுக்கு அவ்வளவாக வர இயலவில்லை. எனவே, இல்லத்தில் இருந்தபடி எனது ‘மகா பெரியவா மகிமை’ சொற்பொழிவுகளை யூ டியூப்பில் கேட்பார்.
அந்த சொற்பொழிவைக் கேட்கும்போதெல்லாம் நிஷ்கலாவில் வயிற்றில் உள்ள குழந்தை சுற்றிக் கொண்டே இருக்கும். யூ டியூப்பில் என் பேச்சை ‘ஆஃப்’ செய்து விட்டால், குழந்தை சுற்றுவது அப்படியே அந்தக் கணமே நின்று விடும். மீண்டும் யூ டியூப்பை ‘ஆன்’ செய்தால் குழந்தை சுற்றத் தொடங்கி விடும். இது நிஷ்கலாவே நெகிழ்ந்து போய்ச் சொன்ன தகவல்.
இப்போது நிஷ்கலாவுக்குக் குழந்தையும் பிறந்துவிட்டது. எப்போது தெரியுமா? மகா பெரியவாளின் ஜயந்தி தினமான மே 19 ஞாயிறு அன்று அனுஷம் பிறந்த அதிகாலை வேளையில்.
இதைவிட இன்னொரு ஆச்சரியம் இந்த மருத்துவமனையில் டாக்டராக இருக்கும் புஷ்பா பாலசுப்ரமணியன் (சென்னை தி.நகர்) நிஷ்கலாவுக்கு குஞ்சிதபாதத்துடன் கூடிய மகா பெரியவா படத்தை பிரசவத்துக்கு முதல் நாள் பரிசாகக் கொடுத்திருக்கிறார். இது தற்செயலாக நடந்தது. யாரும் எதிர்பாராதவாறு அடுத்த நாள் அதிகாலையே அனுஷ நட்சத்திரத்தில் குழந்தை பிறந்துள்ளது.
நிஷ்கலா சொல்கிறார்: ‘‘இப்பேர்ப்பட்ட டாக்டர் புஷ்பா எனக்கு அமைந்ததும், மகா பெரியவா அருள்தான். தனது ஜயந்தி அன்றே என் மகனுக்கும் ஜனனத்தை அருளி இருக்கிறார்.’’
நிஷ்கலாவுக்கு முதல் குழந்தை பெண்.
மகா பெரியவா இன்றைக்கும் நம்முடன் வாழ்ந்து வருகிறார் என்பதற்கு இதைவிட என்ன நிரூபணம் வேண்டும்?!
டாக்டர் புஷ்பா பாலசுப்ரமணியன் பற்றி ஒரு சிறு தகவல்:
ஒரு முறை மகா பெரியவா பக்தை ஒருவர் தனக்குக் குழந்தைப் பேறு வாய்க்கவில்லை என்று காஞ்சி ஸ்ரீமடத்தில் மகா பெரியவா பிருந்தாவனத்தின் முன் நின்று பிரார்த்தனை செய்திருக்கிறார். அப்போது அங்கு யாரோ ஒரு பெண்மணி திடீரென வந்து ‘நேரா சென்னை தி.நகருக்குப் போ... அங்கே டாக்டர் புஷ்பா பாலசுப்ரமணியனைப் பாரு. உனக்குக் குழந்தை பிறக்கும்’ என்று விலாசமும் சொல்லி அகன்றுவிட்டார். எல்லாம் க்ஷண நேரத்தில் நடந்து முடிந்துள்ளது. நன்றி சொல்வதற்கு அந்தப் பெண்மணியை பெரியவா பக்தை தேடினால், காணவில்லை.
சென்னைக்கு வந்தார். டாக்டர் புஷ்பாவைப் பார்த்தார். அடுத்த ஒரு சில நாட்களிலேயே கருவுற்றார் அந்தப் பெரியவா பக்தை. உரிய காலத்தில் ஆண் குழந்தையும் பிறந்துவிட்டதாம்.
இந்தக் குழந்தையின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு கணிப்பதற்காக சில ஜோதிடர்களை அணுகி இருக்கிறார் அந்தப் பெரியவா பக்தை. பலரும் ஒரே பதிலைச் சொன்னார்களாம். இதுவும் ஆச்சரியமே! அந்த ஜோதிடர்கள் சொன்ன தகவல் ‘இந்த ஜாதகத்தை எங்களால் கணிக்க முடியவில்லை. இந்த ஜாதகர் ஒரு துறவியாக ஆவார்.’
என்னுடைய உபன்யாசங்களை அதிகம் விரும்பிக் கேட்கிறவர்கள் பட்டியலில் பாரதி என்ற பெண்ணும் இருந்தார். காஞ்சிபுரத்தில் வசித்து வந்தவர் இவர். மகா பெரியவாளின் அத்யந்த பக்தை. பெரும்பாலும் தினமும் ஸ்ரீமடத்துக்குச் சென்று மகா பெரியவாளை வணங்குவார்.
ஆரம்ப நாட்களில் சென்னையில் நடைபெறும் என்னுடைய உபன்யாசங்களுக்குக் காஞ்சிபுரத்தில் இருந்து வருவார் பாரதி. காஞ்சியில் இருந்து சென்னைக்கு வருவது என்ன பெரிய விஷயம்... அதான் பலரும் உத்தியோகம் என்று தினமும் வருகிறார்களே என்று தோன்றுகிறதா?
விஷயத்துக்கு வருகிறேன்...
இளம் வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல், சக்கர நாற்காலியே கதி என்று வாழ்ந்தவர் பாரதி. அந்த சக்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு பாரதியை அழைத்துச் செல்வதற்காக எப்போதும் உடன் இருப்பவர் சரவணன் என்ற இளைஞன். பாரதி எங்கு செல்ல வேண்டுமானாலும், சரவணன் உதவி அவசியம்.
அடியேனது முதல் சொற்பொழிவு அயோத்தியா மண்டபத்தில் 12.9.2012 அன்று நடந்தது. ‘மகா பெரியவா மகிமை’ என்ற தலைப்பில் நடக்க உள்ளது என்கிற தகவலைக் கேள்விப்பட்டவுடன், காஞ்சிபுரத்தில் இருந்து மேற்கு மாம்பலத்துக்கு ரயிலில் பயணித்து, அங்கிருந்து சக்கர நாற்காலியில் அயோத்தியா மண்டபம் வரை வந்து முழுக்க இருந்து பேச்சைக் கேட்டவர் பாரதி.
இந்தக் கட்டுரையில் காணப்படுகிற படத்தில் தரையில் அமர்ந்திருப்போரில் கடம் வித்வான் விக்கு விநாயக்ராம் மாமா, பிரதோஷம் மாமா குடும்பத்தைச் சேர்ந்த அகிலா கார்த்திகேயன், ஐ.ஏ.எஸ். ஆபீஸர் மூர்த்தி, அவரது துணைவியார் சித்ரா மூர்த்தி என்று பலரையும் பார்க்க முடிகிறது.
இவர்களோடு சக்கர நாற்காலியில் அமர்ந்து அடியேனின் மகா பெரியவா மகிமை சொற்பொழிவைக் கர்ம சிரத்தையாகக் கேட்கிற பெண்மணியைப் பார்க்கின்றீர்கள் அல்லவா? அவர்தான் பாரதி.
பாரதிக்கு வலப்புறம் தரையில் நெற்றியில் சிறிய விபூதிக் கீற்றோடு அமர்ந்திருக்கின்ற இளைஞன் சரவணன். பாரதி எங்கு செல்ல வேண்டும் என்றாலும், சரவணன்தான் அந்த சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு வருவார்.
2012க்குப் பிறகு எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் சரவணன் உதவியோடு சென்னையில் நடக்கிற என் சொற்பொழிவுக்கு வந்து விடுவார் பாரதி. இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு, அதுவும் சக்கர நாற்காலியில் வருவதைப் பார்க்கும்போது எனக்குக் கஷ்டமாக இருக்கும். ‘பாரதி... இவ்வளவு கஷ்டப்பட்டு காஞ்சிபுரத்தில் இருந்து நீங்க வருவதைப் பார்க்கறப்ப ரொம்ப சங்கடமா இருக்கு பாரதி... தயவுசெய்து மெனக்கெடாதீங்க’ என்று கெஞ்சலாகச் சொல்வேன் நான்.
இதற்கு, ‘நான் ஒண்ணும் மெனக்கெடலை சார்... உங்க உபன்யாசம் கேக்க பெரியவா என்னைக் கூட்டிண்டு வந்து கூட்டிண்டு போக ஏற்பாடு பண்றார்... இதோ, சரவணன் இருக்கானே’ என்பார் சிரித்துக்கொண்டே.
பின்னாட்களில் ஜீ டி.வி.யில் ‘தெய்வத்தின் குரல்’ என்ற தலைப்பில் மகா பெரியவாளைப் பற்றி பேச ஆரம்பித்தவுடன் ரொம்பவும் உற்சாகமானார் பாரதி.
‘சார்... இப்பல்லாம் தினமும் நீங்க எங்க வீட்டுக்கே வந்துடறேள் சார். வீட்லயே தினமும் உங்களைப் பாத்துடறேன் சார்’ என்பார் போனில் சிரித்துக்கொண்டே.
காஞ்சி ஸ்ரீமடம் செல்கின்றபோதெல்லாம் பெரும்பாலும் மகா பெரியவா திருச்சந்நிதியின் முன் பாரதியைப் பார்த்துவிடுவேன். பெரியவா பற்றி நிறைய பேசுவார்.
அதன்பின் அடிக்கடி என் மனைவியுடன் போனில் பேசுவார் பாரதி. என்னுடைய ஒவ்வொரு ‘மகா பெரியவா’ புத்தகம் வெளியாகும்போதும், பாரதியின் காஞ்சிபுரம் முகவரிக்கு கூரியரில் அனுப்புவதைத் தன் வழக்கமாகக் கொண்டவர் என் மனைவி.
சுமார் நான்கு வருடங்களுக்கு முன் ஒரு நாள் எனக்கு ஒரு போன் வந்தது. பேசியவர் மகா பெரியவா பக்தர். என் நிகழ்ச்சிகளை விரும்பிக் கேட்கிற ரசிகர். பேச்சின் நடுவே ‘உங்க ஃப்ரெண்டு காஞ்சிபுரம் பாரதி, எனக்குச் சொந்தம் சார்’ என்றார்.
உற்சாகமானேன். ‘அப்படியா சார்... பாரதி இப்ப எப்படி இருக்காங்க? மடத்துலயும் அவங்களை அவ்வளவா பார்க்க முடியறதில்லியே.. அவங்ககிட்ட பேசி ரொம்ப மாசம் ஆகுது...’ என்றேன்.
ஒரு சில விநாடிகள் அவரிடம் இருந்து பேச்சு வரவில்லை. பிறகு, ‘உங்களுக்கு விஷயம் தெரியாதா சார்?’ என்றார்.
‘தெரியாது... என்ன சார்?’ என்றேன் அதிர்ச்சியுடன்.
‘பாரதி காலமாகி ஒண்ணே முக்கால் வருஷம் ஆறது சார். 2018 டிசம்பர்ல பெரியவா திருவடிகள்ல போய்ச் சேர்ந்துட்டாங்க’ என்றார்.
தூக்கி வாரிப் போட்டது.
2018 டிசம்பருக்குப் பிறகு பல முறை காஞ்சிக்குச் சென்றிருக்கிறேன். ஏனோ, இது எனக்குத் தெரியாமலே போயிருக்கிறது. மூச்சுக்கு மூச்சு பெரியவா பெரியவா என்றே பேசுகிற அந்தப் பாரதியின் இயக்கம் எப்போதோ நின்று போயிருந்தாலும், இந்தத் தகவலைக் கேட்ட தினம் இரவில் இருந்து என்னாலும் என் மனைவியாலும் இயல்பாக இருக்க முடியவில்லை.
இறைவன் தனக்குக் கொடுத்த குறைபாடுகளை எந்த ஒரு காலத்திலும் குறையாகவே நினைத்ததில்லை பாரதி.
‘பாரதி இறந்து விட்டார்’ என்ற தகவலை ஜீரணிக்க முடியவில்லை.
உற்சாகமாகப் பேசுகிற பாரதியின் அந்தக் குரல் இன்னமும் என் நினைவில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
(தொடரும்)