மகான்களின் ஜீவ சமாதிகள் கும்பகோணத்திலும் அதைச் சுற்றியுள்ள பல ஊர்களிலும் அதிகம் உண்டு.
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் திருவிடைமருதூர் தாண்டியதும் கோவிந்தபுரம் வரும். இந்த ஊரில் போதேந்திராள் பிருந்தாவனம் அமைந்துள்ளது. காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த பீடாதிபதி இவர்.
கோவிந்தபுரத்தின் பிரதான சாலையிலேயே மகா பெரியவா தபோவனம் அமைந்துள்ளது. காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த அனைத்து ஆச்சார்யர்களும் இங்கே லிங்க சொரூபமாக அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதானமாக மகா பெரியவாளுக்கு ஒரு சன்னிதி.
தினமும் பகல் வேளையில் மகா பெரியவா திருமேனிக்கும், சுற்றியுள்ள ஆச்சார்யர்கள் திருமேனிகளுக்கும் அபிஷேகம் நடக்கும். மிகவும் ரம்மியமான இடம். ஏகாந்தமான சூழ்நிலை. மகா பெரியவா தபோவன வளாகத்தின் உள்ளேயே மேட்டூர் ஸ்வாமிகளின் அதிர்ஷ்டானம் அமைந்துள்ளது.
ராஜகோபாலன் என்கிற பூர்வாஸ்ரம பெயர் கொண்ட இவர், பெரியவாளின் பக்தர். மேட்டூர் கெமிக்கல் நிறுவனத்தில் பணி புரிந்தார். மகான் மீது கொண்ட பக்தி காரணமாக அனைத்தையும் துறந்து, பெரியவா கைங்கர்யத்துக்குக் காஞ்சிபுரம் வந்துவிட்டார். அதன் பின் எல்லாமே பெரியவா என்று ஆனது. அப்பேர்ப்பட்ட மேட்டூர் ஸ்வாமிகள் அதிர்ஷ்டானம் கொண்டிருக்கும் இந்த இடம், அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று.
மேட்டூர் ஸ்வாமிகள் பக்தர் ஒருவர் சொன்னது இது:
‘நான் 120 வருடங்கள் இருப்பேன் என்று மகா பெரியவா ஒரு முறை அருளி இருக்கிறார். ஆனால், மகா பெரியவா 100 வயதில் ஸித்தி ஆகி விட்டார். பெரியவா ஸித்தி ஆகி 20 வருடங்கள் கழித்துதான் மேட்டூர் ஸ்வாமிகள் ஸித்தி ஆகி இருக்கிறார். எனவே, மேட்டூர் ஸ்வாமிகளாகவே மகா பெரியவா வாழ்ந்திருக்கிறார்.’
மேட்டூர் ஸ்வாமிகளது அதிர்ஷ்டானத்தில் சுத்த பத்தமாக பூஜைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. விறகு அடுப்பில்தான் சுத்த அன்னம் நிவேதனம்.
2013 தீபாவளி தினத்தன்று மேட்டூர் ஸ்வாமிகள் ஸித்தி ஆனார்.
தீபாவளியன்று புத்தாடை அணிந்து வீதியில் பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருந்தபோது நண்பர் ஒருவர் இந்தத் தகவலை போனில் என்னிடம் சொன்னார். அடுத்த கால் மணி நேரத்தில் டிராவல்ஸ் வண்டியை வரவழைத்தேன். கோவிந்தபுரம் புறப்பட்டேன். ஸித்தி ஆன மேட்டூர் ஸ்வாமிகள் ஜீவ சமாதி கொள்வதற்கு முன்னதாக அவரை ஒரு முறை தரிசித்து விட வேண்டும் என்று மனம் அடித்துக்கொண்டது.
நான் மகா பெரியவாளை பார்த்ததில்லை; சிவன் சாரைப் பார்த்ததில்லை. ஆனால், இந்த இருவரையும் இவருக்குள் தரிசிக்க முடியும் என்பது என் திடமான நம்பிக்கை. அதை நான் அனுபவித்தேன்.
நான்கு மணி நேரப் பயணத்தில் கோவிந்தபுரத்தை அடைந்து விட்டேன்.
தபோவனத்துக்குள் நுழைந்ததும் திரளாகக் கூடி இருந்த பக்தர்கள் கூட்டத்தில் இருந்து ஒரு நண்பர். அங்கு பணி புரிபவர் என்னிடம் வந்தார் (தாம்பரத்தில் வசிப்பவர். என் மாமனாரிடம் ஷார்ட் ஹேண்ட் பயின்றவர்).
‘சுவாமிநாதன் சார்... உங்களுக்கு ஞாபகம் இருக்கா? முதல் தடவை நீங்க மேட்டூர் ஸ்வாமிகளை தரிசிக்க வந்தப்ப, பெரியவாளைப் பத்தி நீங்க ஜாக்கிரதையா எழுதணுமேங்கிற எண்ணத்துல உங்ககிட்ட கொஞ்சம் கண்டிப்போட பேசினார். அவர் இப்படிப் பேசினதுனால சுரத்தில்லாம இங்கிருந்து கிளம்பினேள். அப்புறம், உங்க எழுத்தை மேட்டூர் ஸ்வாமிகள் படிச்ச பிறகு அவருக்கும் சந்தோஷமாச்சு. பிறகு, ஒவ்வொரு தடவையும் நீங்க இங்கே வரும்போதெல்லாம் கூப்பிட்டுப் பேசிண்டிருந்தார்’ என்றார்.
ஸித்தியான மேட்டூர் ஸ்வாமிகளுக்கு அன்றைய தினம் நடந்த அபிஷேகக் காட்சிகளைப் பார்த்தபோது அவர் ஸித்தி ஆகி விட்டார் என்பதை நம்ப முடியவில்லை.
மகா பெரியவா சொன்ன எளிமையைக் கடைசிவரை சிரமேற்கொண்டு, தன் புகைப்படம்கூட வெளி வராமல் பார்த்துக்கொண்டார். புலன் அடக்கத்துடன் வாழ்ந்து, தன் காலத்தை மிகவும் அமைதியாக கோவிந்தபுரத்தில் மகா ஸ்வாமிகள் தபோவனத்தின் ஓரமாக ஓர் அறையில் கழித்தவர் மேட்டூர் ஸ்வாமிகள்.
மேட்டூர் ஸ்வாமிகளை நான் முதன்முதலாக சந்தித்த அனுபவம் சுவாரஸ்யமானது. மேட்டூர் ஸ்வாமிகளின் அன்பாலும் அரவணைப்பாலும் பின்னாளில் பெரிதும் கவரப்பட்டது நான் பெற்ற பேறு என்றே சொல்ல வேண்டும்.
நான் ஆசிரியராக இருந்த ‘திரிசக்தி’ இதழில் ‘மகா பெரியவா’ குறித்து பக்தர்களின் அனுபவங்களை ஒரு தொடராக எழுத ஆரம்பித்திருந்த நேரம்... ‘சிவ சாகரம்’ சிவராமன் ஒரு முறை சொன்னதன் பேரில் கும்பகோணம் சென்றிருந்த நான் கோவிந்தபுரம் போய் மேட்டூர் ஸ்வாமிகளிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ‘திரிசக்தி’ இதழ்களையும் கொடுத்தேன் (அதுவரை அவர் எனக்கு அறிமுகம் இல்லை).
‘மகா பெரியவா குறித்த செய்திகளை அவரது பக்தர்களிடம் இருந்து திரட்டி தொடர் எழுதி வருகிறேன்’ என்று சொன்னேன்.
‘ரொம்ப கவனமா எழுதுங்கோ... ஆதாரமானதை மட்டும் எழுதுங்கோ’ என்று என் மேல் நம்பிக்கை இல்லாமலே பேசிக்கொண்டிருந்தார். அரை மணி நேரத்துக்கு இதே கோணத்திலேயே பேசிக்கொண்டிருந்தார்.
‘ஆத்மார்த்தமாகவும் ஓரளவு ஆதாரத்துடனும்தானே எழுதி வருகிறோம்... இவர் இப்படிச் சொல்கிறாரே?’ என்று ஒரு குழப்பத்துடன் நமஸ்காரம் செய்துவிட்டு, திருப்தி இல்லாமலே சென்னை திரும்பினேன்.
இது நடந்து இரண்டு மூன்று மாதங்கள் கழித்து கோவிந்தபுரம் மகா ஸ்வாமிகள் தபோவனத்தை தரிசிக்கக் குடும்பத்துடன் போயிருந்தேன்.
ஆச்சார்ய புருஷர்களை தரிசித்துக்கொண்டிருக்கும்போது அங்குள்ள அர்ச்சகர், ‘நீங்க திரிசக்தி ஆசிரியர் சுவாமிநாதன்தானே... நீங்க எப்ப வந்தாலும், ஸ்வாமிகளைப் பாத்துட்டுப் போகுமாறு சொல்லி இருக்கார். உங்களைப் பத்தி ‘வந்தாரா? வந்தாரா?’னு அடிக்கடி கேட்டுண்டே இருப்பார். ஸ்வாமிகளை அவசியம் பாத்துட்டுப் போங்கோ’ என்று சொன்னார்.
இது இரண்டாவது தரிசனம். மனதில் உற்சாகத்துடன் ஸ்வாமிகளைப் போய் தரிசித்தேன்.
புன்னகையுடன் வரவேற்றார். ‘நீங்க கொடுத்துட்டுப் போன திரிசக்தி இதழ்கள்ல ‘மகா பெரியவா’ தொடரைப் படிச்சேன். நன்னா வந்திருக்கு. தொடர்ந்து நிறைய எழுதுங்கோ’ என்று மலர்ந்த முகத்துடன் ஆசிர்வதித்தார்.
முதல் தரிசனத்தில் துவண்டு போயிருந்த என்னை இரண்டாவது தரிசனத்தில் தட்டிக் கொடுத்துப் பாராட்டியது பூரிப்படைய வைத்தது. என்னைப் பொறுத்தவரை மகா பெரியவாளின் ஆசிகளாகவே இவரது வார்த்தைகளை எடுத்துக்கொண்டேன். அன்றைய தினம் சுமார் 40 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார். அடுத்தடுத்த மாதங்களில் போனபோது இதுபோல் முக்கால் மணி நேரம் பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.
இந்த நிலையில்தான் ஒரு முறை திரு ரங்கன் கௌடா வெளியிட்ட ‘மொமெண்ட்ஸ் ஆஃப் எ லைஃப்டைம்’ என்கிற ஆங்கில நூலை என்னிடம் தந்தார் மேட்டூர் ஸ்வாமிகள். மகா பெரியவாளின் பக்தர்கள் அனுபவங்கள் அடங்கிய அருமையான நூல் அது.
‘இதைப் படித்துப் பாருங்கள். உங்களுக்கு மேலும் பல நல்ல விஷயங்கள் கிடைக்கும்’ என்றார்.
சென்னை வந்த பின் ஓரளவு படித்தேன். ‘இந்த அருமையான புத்தகத்தை தமிழில் நான் மொழி பெயர்த்து (எனது ‘மகா பெரியவா’ நூல் வெளிவருவதற்கு முன்) நானே வெளியிடலாமா?’ என்று யதேச்சையாக ஒரு நாள் சிவராமனிடம் கேட்டேன்.
‘தாராளமா பண்ணலாம். எதுக்கும் மேட்டூர் ஸ்வாமிகளிடம் ஒரு தடவை சொல்லிடுங்கோ’ என்றார்.
அதை அடுத்து இதற்கென்றே ஒரு முறை கோவிந்தபுரம் போய் மேட்டூர் ஸ்வாமிகளிடம் விவரம் தெரிவித்தேன். ‘தாராளமா பண்ணுங்கோ... திரிசக்தில ஒங்க எழுத்தைப் பார்த்தேன். நீங்களே பண்ணா இன்னும் நன்னா இருக்கும்’ என்றார்.
‘நானே எழுதி இதை பப்ளிஷ் செய்யும்போது பின்னாளில் உரிமைப் பிரச்னை என்று சட்டச் சிக்கல் ஏதாவது வந்து விடுமோ?’ என்று எழுத்தாளருக்கே உண்டான சந்தேக புத்தியில் மேட்டூர் ஸ்வாமிகளிடம் கேட்டேன்.
புன்னகைத்தபடி, ‘போடுங்கோ... போடுங்கோ’ என்று வாய்மொழி உத்தரவு கொடுத்தார்.
மிகவும் சந்தோஷமாக சென்னை திரும்பி, தமிழாக்கம் செய்யும் பணி துவங்கியது.
என்னிடம் ஸ்வாமிகள் கொடுத்த ஆங்கிலப் புத்தகத்தில் சில பக்கங்கள் விடுபட்டுப் போயிருந்தன. சிலவற்றின் தொடர்ச்சி இல்லை. எனவே, அடுத்த ஓரிரு மாதங்களில் கோவிந்தபுரம் போய் இதைச் சொன்னேன். ‘ஆமாம்... பழைய புத்தகத்தில் இந்தக் குறை இருப்பதாகப் பலரும் சொன்னார்கள். அப்புறம் அடிச்ச வேற புத்தகம் தர்றேன்’ என்று திருத்தப்பட்ட ஒரு புத்தகம் கொடுத்தார்.
தமிழாக்கம் செய்யும் பணி வேகமாக நடந்தேறியது. ஆனால், அது முழுமை பெறவில்லை என்பது எனக்குப் பெரும் வருத்தமே!
இன்றைக்கும் சில ‘அந்த மொழியாக்க நூல் வந்து விட்டதா?’ என்று கேட்பார்கள். ‘இல்லை’ என்ற பதிலை சங்கடத்துடனே சொல்வேன்.
இதற்குக் காரணம் ‘நேரமின்மை’ என்று நான் சொன்னாலும், ‘அனுக்ரஹம் வரவில்லையோ?’ என்றும் தோன்றும்!
(முற்றும்)