அனுமார் கோயிலில் தங்கிய ஐயப்பன்!

அனுமார் கோயிலில் தங்கிய ஐயப்பன்!

பரிமலை கோயில் மூலஸ்தானத்தில் பரசுராமர், சுவாமி ஐயப்பன் சிலையை பிரதிஷ்டை செய்தார் என்பது ஐதீகம். கி.பி.1950ல் சபரிமலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐயப்பன் சிலை சேதம் அடைந்தது. புதிய சிலையை நிர்மாணம் செய்ய, கேரளாவின் பிரசன்ன ஜோதிடம் சபரிமலை ஐயப்பன் சன்னிதியில் நடைபெற்றது. குடவோலை முறையில் பலரது பெயர்கள் எழுதி பிரசன்னம் பார்க்கப்பட்டது. இதில் மதுரையை சேர்ந்த நவாப் ராஜமாணிக்கம் மற்றும் பி.டி.ராஜன் ஆகியோர் பெயர்களைத் தேர்வு செய்து, புதிய ஐயப்பன் சிலையை வடிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. இவர்கள் இருவரும் தஞ்சை மாவட்ட, சுவாமிமலையில் வசித்து வந்த புகழ் பெற்ற ஸ்தபதி ராமசாமி எனும் சிற்ப கலைஞரிடம், ஐம்பொன்னாலான ஐயப்பன் சிலையை வடிக்கும் பொறுப்பை ஒப்படைத்தனர். இந்த ஸ்தபதி தேசிய விருது பெற்ற கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நல்ல நாளில் சுவாமிமலையில் இருந்து ஐம்பொன்னாலான ஐயப்பன் சிலையை நவாப் ராஜமாணிக்கம் மற்றும் பி.டி.ராஜன் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டு சபரிமலை செல்லும் வழியில், தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள மூலை அனுமார் கோயிலில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்திய பின்னர் சபரிமலைக்கு எடுத்துச் சென்றார்கள் என்பது வரலாறு. தஞ்சை மூலை அனுமார், பங்காரு காமாட்சி அம்மனுக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்து பெருமை பெற்றவர் என்பதால், சபரிமலை ஐயப்பன் சிலையை இங்கு வைத்து வழிபட்டு எடுத்துச் சென்றார்கள்.

இதன் காரணமாக, இக்கோயிலில் சபரிமலை ஐயப்பன் சிலையை வைத்து அபிஷேகம் நடைபெற்ற இடத்தில் ஒரு ஐயப்பன் படம் வைக்கப்பட்டது. அன்றிலிருந்து கார்த்திகை மாதம் முதல், தை மாதம் மகர ஜோதி வரையில் இங்கு தினமும் இரவு 7 மணிக்கு ஐயப்பன் படத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இங்குள்ள ஐயப்பன் சன்னிதியில் பிரதி மாதம் உத்திரம் நட்சத்திரம் அன்று இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. அன்றிலிருந்து புனித யாத்திரையாக சபரிமலை செல்லும் பக்தர்கள், இக்கோயில் சன்னிதியில் மாலை அணிந்தும், இருமுடி கட்டியும் பயணம் மேற்கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது. அது இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

கார்த்திகை மாதம் மாலை அணிந்து, விரதமிருந்து யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள் அவசியம் தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மூலை அனுமார் கோயில் சன்னிதி ஐயப்பன் படத்தை தரிசனம் செய்து வழிபடுவது, பல நன்மைகளைப் பெற்றுத் தரும் என்பது பக்தர்கள் பலரது நம்பிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com