எப்பேர்பட்ட ஜோதிடனின் கணிதத் திறமையும் 99% மட்டுமே!

காஞ்சி மகா பெரியவா அருளிய பாரதக் கதை!
சகாதேவன்...
சகாதேவன்...
Published on

-தா. சரவணா

பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்கப் பெற்றது எப்படி என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

பஞ்ச பாண்டவர்களின் தந்தையான பாண்டு,  உயிர் பிரியும் தருணத்தில் தனது மகன்கள் ஐவரையும் அருகே அழைத்து, ''தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்ய வேண்டாம் என்றும், மாறாக பிய்த்து தின்று விடும்படியும், அப்படிச் செய்தால் முக்காலமும் உணரும் ஆற்றல் கிடைக்கும்'' என்று சொல்லிவிட்டு உயிர் துறக்கிறான். பாண்டவர்களும் அவர்களது தந்தை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும்போது அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார். விஷயத்தைக் கேட்டவுடன் பாண்டவர்களைத் திட்டுகிறார். ''சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகி விட்டதென்றால், உங்களுக்கு என்ன ஆனது? யாராவது பிணத்தைத் தின்பார்களா? வாருங்கள் விறகு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம்'' என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார்.

மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் தன் தந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்று விடுகிறான். உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி கிடைத்து விடுகிறது.

விறகுகளைக் கஷ்டப்பட்டுத் தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளைக் கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள். கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையைத் தூக்கி வருகிறார். ஆனால், விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது. அது மற்றவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை. சகாதேவனுக்கு மட்டும் அது தெரிகிறது.

கிருஷ்ணரும் மிகக் களைப்படைந்தவர்போல 'அப்பாடா' என்று விறகு கட்டை கீழே போட்டுவிட்டு அமர்கிறார். அவரருகில் சென்ற சகாதேவன், ''கண்ணா! எல்லோரும் விறகைச் சுமந்து வந்தார்கள். அவர்கள் களைப்பாறுவது நியாயம். உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது. நீ ஏன் களைத்ததுபோல நடிக்கிறாய்? '' என்று கேட்கிறான். உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது.

சகாதேவனை தனியே அழைத்துச் சென்று, அவர் விபரம் கேட்க, சகாதேவன் தனது தந்தை பாண்டுவின் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான். ‘எதிர்காலம் தேவ ரகசியம் என்றும், இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம்’ என்றும் கிருஷ்ணர் கூறுகிறார். சகாதேவன் தனக்குத் தெரிந்த எதிர்காலம் தொடர்பான விஷயங்களை எப்போதும், எவரிடமும் சொல்லகூடாது என்று சத்தியத்தை வாங்கிக்கொள்கிறார். ஆனால், தனக்கு முக்காலமும் உணரும் ஜோதிடக்கலை ஆற்றல் தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம் அதிகமாகி விடுகிறது.

துரியோதனன், பாண்டவர்களை அழிப்பதற்கு, போருக்கான சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம் கேட்க, சகாதேவனும் நாளைக் குறித்துக் கொடுக்கிறான். அந்தளவிற்கு அவன் ஜோதிடக்கலையில் உண்மையாக இருந்தான்.

இதையும் படியுங்கள்:
நல்லோரின் நல்ல நட்பே நம்மை உயர்த்தும்!
சகாதேவன்...

போரில் கர்ணன் இறக்கும் தருவாயில்தான், கர்ணன் தன் உடன்பிறந்தவன் என்ற உண்மை அவனுக்குத் தெரியவருகிறது. இதனால் தனக்குத் தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில் இந்த உண்மையைத் தெரிந்துகொள்ள முடியவில்லையே என்று ஜோதிடத்தில் நம்பிக்கை இழக்கிறான். 18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப் போர் முடிவடைந்தபின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, `கிருஷ்ணா! ஜோதிடம் என்பது பொய்தானே' என்று கேட்கிறான். அதற்கு கிருஷ்ணன், 'ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே இப்படிக் கூறலாமா?' என்கிறார். 'ஜோதிடத்தில் அனைவருடைய பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்துகொண்டேன். ஆனால், கர்ணன் என் உடன்பிறந்தவன் என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை. அப்படியென்றால் ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா?' என்று மீண்டும் கேள்வி எழுப்பினான் சகாதேவன். இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் ''அனைத்தையும் நீ ஜோதிடத்தில் தெரிந்துகொண்டால் பிறகு நான் எதற்கு?'' என்றார். இந்த பதிலைக் கேட்டவுடன் சகாதேவனுக்கு தூக்கி வாரிப்போட்டது. அடங்கியது அவன் கர்வம்.

எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் 99 சதவீதம் மட்டுமே தங்கள் கணிதத் திறமையை வெளிப்படுத்த முடியும். மீதி ஒரு சதவீதம் கடவுளின் பிடியில் மட்டுமே.

(இந்த பாரதக் கதை காஞ்சி மகா பெரியவரிடம் இருந்து உதிர்ந்தது.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com