ஆராவமுதாழ்வார்!

ஆராவமுதாழ்வார்!

வீகவானுக்கு எத்தனை எத்தனையோ திருக்கோலங்கள். நின்ற கோலம், அமர்ந்த கோலம், நடந்த கோலம், கிடந்த கோலம் என்று அவற்றை வகைப்படுத்தினாலும் அதிலும் பல வித்தியாசங்கள். கிடந்த கோலம் என்று சொன்னால், அரங்கத் தில் புஜங்க சயனம்; திருப்புல்லாணியில் தர்ப்ப சயனம், கடல் மல்லையில் தல சயனம்;

சிறுபுலியூரில் பால சயனம்... இந்த வரிசையில், உத்தான சயனம் அல்லது உத்யோக சயனத்தில் பெருமாளை நாம் தரிசிப்பது திருக்குடந்தையில்.

இதற்குக் காரணம், திருமழிசையாழ்வார் எழுப்பிய கேள்வி: “ஏம்பா படுத்திருக்கே? சீதாப்பிராட்டியைத் தேடி நடந்தியே.. அதனால கால் களைச்சுப் போச்சா? உலகம் நடுங்கறமாதிரி வராஹவதாரம் எடுத்து ஹிரண்யாட்சனோட போர் செய்தியே... அதனால் உண்டான களைப்பா?”

ஆழ்வார் கேட்டவுடனே, பதில் சொல்ல எழுந்திருக்க முற்பட்டான் பகவான். ஆழ்வார் பார்த்தார். ‘என்னடா இது! நமக்குப் பதில் சொல்ல பகவான் எழுந்திருக்கணுமா’ன்னு நினைத்தார். ‘வேண்டாம் அப்படியே பதில் சொல்லு’ன்னு

சொல்லிட்டார் போலிருக்கு. அதனால படுத்த மாதிரியும் இல்லாம, எழுந்த மாதிரியும் இல்லாம, எழுந்திருக்கிற மாதிரியான சயனத் திருக்கோலம் உத்தான சயனம். உத்யோக சயனம்னு சொல்றது இதைத்தான்!

ஹேம ரிஷியோட பெண்ணா அவதாரம் செய்து, ‘கோமளவல்லி’ங்கற பேர்ல இங்கே வளர்ந்து வந்தா பிராட்டி. அவளைக் கல்யாணம் செய்துகொள்ள, வைகுண்டத்துல இருந்து ரதத்திலே வந்தான் பகவான். அதனால, ரதத்தைப் போலவே அமைந்த மூலஸ்தானம். அதுமட்டுமல்ல; பகவான் நேரடியா வைகுண்டத்துல இருந்து வந்ததால பரமபத வாசல் இங்கே கிடையாது!

ஆழ்வார்களின் அருளிச் செயல்களான பிரபந்தங்கள் காலவெள்ளத்தில் மறைந்து போயின. அதில் கிடைத்தது, இந்தப் பெருமாளைப் பத்தின ஒரே ஒரு பதிகம்தான். ‘ஆராவமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே’ என்று நம்மாழ்வார் பாடின இந்தப் பதிகம்தான் நாதமுனிகளுக்குக் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர் திருக்குருகூர் போய், நம்மாழ்வார் மூலமாக நாலாயிரத்தையும் மீண்டும் வெளிக் கொணர்ந்தார். ஆக, நாலாயிரம் கிடைக்கக் காரணம் இந்த ஆராவமுதன்தான். அதனாலே, ‘ஆராவமுதாழ்வார்’ என்றும் இந்தப் பெருமாளுக்கு ஒரு திருநாமம் உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com