அருள்மிகு வான்மீகி முனிவர் கோயில் கும்பாபிஷேகம்!

அருள்மிகு வான்மீகி முனிவர் கோயில் கும்பாபிஷேகம்!
Published on

டமொழியில் ‘வான்மீகம்’ என்றால் கரையான் புற்று என்று பொருள். ஒரு சமயம் வால்மீகி முனிவர் ஆழ்ந்த தவத்தில் இருந்தபோது கரையான் புற்று அவரை மூடியது.  அதற்குள்ளேயிருந்து அவர் கண்டெடுக்கப்பட்ட இடம்தான் தற்போது கிழக்குக் கடற்கரைசாலையில் அமைந்த திருவான்மியூர். இந்த நிகழ்வு சம்பந்தமாக ஒரு புராணக்கதை உண்டு.

ஒரு சமயம் ரிஷிகளில் முதன்மையானவராகக் கருதப்படும் அமரத்துவம் பெற்ற வான்மீகரைக் காண, அழியா வரம் பெற்ற சிரஞ்சீவியான மார்க்கண்டேயர் வந்தார்.  அப்போது சிவபக்தரான மார்க்கண்டேயர் வான்மீகியிடம் சிவ பூஜை செய்வதன் மேன்மையைக் கூறினார். அதைத் தொடர்ந்து வான்மீகர் தாமும் சிவதரிசனம் செய்ய வேண்டும் என்று ஆவல் கொண்டார். அதற்கான வழியை மார்க்கண்டேயரும் அவருக்குக் கூறினார். “தாங்கள் தென்னகத்துக்குச் செல்லும்பொழுது ஓரிடத்தில், ‘நான் இங்கு இருக்கிறேன்’ என்று அசரீரி கேட்கும். அந்த இடத்தில் தவமியற்றினால் விரைவில் சிவ தரிசனம் பெறலாம்” என்றார்.

அதன்படியே தென்னகம் வந்த வான்மீகிக்கு, 'நான் இங்கு இருக்கிறேன்' என உணர்த்தி இறைவன் அருள்பாலித்த திருத்தலம்தான் திருவான்மியூர் ஆகும்.  இங்குள்ள ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயில் சிவன் சுயம்பு லிங்கம். இங்கே ஓரிடத்தில் தினமும் பசு ஒன்று வந்து பாலை சொரிந்து விட்டுப் போவது பார்க்கப்பட்டு அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஈஸ்வரனே திருவான்மீயூர் திருத்தலத்தில் மருந்தீசுவரராக அருள்பாலிக்கிறார். இவருக்கு பால்வண்ணநாதர் என்னும் திருப்பெயரும் உண்டு. இது ஒரு பாடல் பெற்ற திருத்தலமாகும்.

வால்மீகி ராமாயணத்தை எழுதிய ஸ்ரீ வால்மீகி முனிவருக்கு ஒரு கோயில் சென்னை திருவான்மியூரில் உள்ளது. சிறு மண்டபம் போல் அமைந்துள்ள இந்தக் கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழைமையானது. இதில் ஸ்ரீ வால்மீகி முனிவர் சன்னிதி மட்டுமே உள்ளது. இந்தக் கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கோயில் திருவான்மியூர் பேருந்து நிலையத்துக்கு அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. அதே சாலையின் மறுபுறம் இக்கோயிலுக்கு எதிர்ப்புறம் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் உள்ளது. ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயில் நிர்வாகத்தின் கீழ்தான் இந்தக் கோயிலும் வருகிறது. வால்மீகி முனிவர் பெயராலேயே இந்தக் கோயில் அமைந்துள்ள பகுதி திருவான்மீயூர் எனப் பெயர் பெற்றது.

போக்குவரத்து நெரிசலான கிழக்குக் கடற்கரைச் சாலையின் நடுவே இக்கோயில் அமைந்துள்ளதால், ஒரு சமயம் சாலை விரிவுபடுத்தும் திட்டத்தின் கீழ் அகற்றப்படும் சிக்கலுக்கு உள்ளானது. ஆனால், கோயில் நிர்வாகத்தின் முயற்சியால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. இந்தக் கோயில் அமைந்துள்ள இடத்தில் சாலையை இரண்டாகப் பிரித்து போக்குவரத்தை ஒருவழிப்படுத்தும் இடைப்பிரிவாக, போக்குவரத்துக்கு இடைஞ்சலின்றி இருக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அருள்மிகு மருந்தீஸ்வரர் கோயிலில் நடைபெறும் அனைத்து விசேஷ நாட்களிலும் இந்தக் கோயிலிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். அதேபோல, பிரம்மோத்ஸவத்தின்போது இங்கேயும் உத்ஸவம் நடைபெறும்.

அருள்மிகு வான்மீகி முனிவர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நாளை (07.07.2023) வெள்ளிக்கிழமையன்று பஞ்சமி திதி, சதய நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 8.45 மணியிலிருந்து 9.45 மணிக்குள் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் இந்தக் கும்பாபிஷேகப் பெருவிழாவில் கலந்துகொண்டு அருள்மிகு வான்மீகி முனிவரை தரிசித்து குருவின் திருவருளைக் குறைவின்றிப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com