வந்தவாசி தாலுகா, வழூர் கிராமத்தில் மரகதம் அம்மையார்-காமகோடி வரதராஜ சாஸ்திரிகள் தம்பதிக்கு மகனாய் காமகோடி சேஷாத்ரி சாஸ்திரி 1870ம் ஆண்டு ஜனவரி 22ம் நாள் சனிக்கிழமை ஹஸ்த நட்சத்திரத்தில் அவதரித்தார். காமகோடி சாஸ்திரி என்பது இவரது குடும்பப் பெயர்.
தனது பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக இவ்வுலகை நீத்து மறைந்தவுடன், வேறு பந்தம் ஒன்றும் இல்லாததால் சேஷாத்ரிக்கு இவ்வுலகக் கட்டிலிருந்து விடுதலையான உணர்வு மேலிட்டது. தனது தாயார் இறக்கும் தருவாயில், "அருணாசல, அருணாசல, அருணாசல!" என்று மூன்று முறை கூறிய வார்த்தைகள் இவர் உள்ளத்தைத் துளைத்து அங்கே குடியேறியது. அவர் திருவண்ணாமலைக்கே போய் சேர்ந்தார். ஏற்கெனவே வேதாந்த விசாரங்களைக் கற்றுத் தேறிய சேஷாத்ரிக்கு தினசரி பயிற்சியும், தியானமும் ஆத்ம பலத்தை மென்மேலும் கூட்டின. மற்றவர்களையும் ஜபம் செய்யத் தூண்டினார்.
"மந்திர ஜபம் மனசை சுத்தம் பண்ணும். மனசு சுத்தமாயிடுச்சுன்னா போதும். நீங்க என்ன கேட்டாலும் கிடைக்கும்" என்பார். "தினமும் ஒரு மணி நேரம் ஜபம் பண்ணினா, மனசு அமைதியாகும். கோபம் குறையும். சிரத்தையா பண்ண ஆரம்பிச்சுட்டா ஒரு மணி நேரம் போதாது. மனசுக்குப் பசிக்க ஆரம்பிச்சுடும். இன்னொரு மணி நேரம் பண்ணு, இன்னொரு மணி நேரம் பண்ணுன்னு அதுவா கேக்கும்."
"காலையில் ரெண்டு மணி நேரம், சாயந்தரம் ரெண்டு மணி நேரம் ஜபம் பண்ணினா காதுல இனிமையான சங்கீதம் கேட்கும். உடம்பு இறகு போல லேசா இருக்கும். நோய் உபத்திரவங்கள் இருக்காது. உணவை கவனமா சாப்பிடத் தோணும். ருசிக்கு நாக்கு அலையாது. உணவு குறையக் குறைய உள்ளம் பலமாகி விடும்."
"காலையில் மூன்று மணி நேரம், மாலையில மூன்று மணி நேரம் ஜபம் பண்ணினா கண் பார்வை கூர்மையாகும். உடம்பில் தேஜஸ் தெரியும். எட்டு மணி நேரம் ஜபம் பண்ணினா நீ வேறு மந்திரம் வேறு இல்ல. நீயே மந்திரமா மாறிடலாம். அதற்கப்புறம் நடப்பதெல்லாம் ஆனந்தக் குதியல்தான். எதைப் பார்த்தாலும் சந்தோஷமா இருக்கும். பசிக்காது, தூக்கம் வராது, யாரையும் அடையாளம் தெரியாது. இந்த உலகக் கட்டுகளிலிருந்து விலகி மனசு சுவாமி கிட்ட நெருக்கமா போயிடும். இன்னும் இன்னும்னு உக்கிரமா ஜபம் பண்ணப் பண்ண, அதுவே உன்னைக் கூட்டிண்டு போய் சுவாமிகிட்ட சரணாகதி செய்ய வச்சுடும்."
"எட்டு மணி நேர ஜபத்துக்கப்புறம் எல்லா நேரமும் ஜபம் பண்ணணும்னு தோணிடும். எட்டு இருபத்தி நாலா மாறிடும். அதுல இன்னும் உக்கிரம் வந்துடும். மந்திர ஜபம் என்பது கற்றுக்கொள்வதில் இல்லை. உள்ளிருந்து பீறிட்டு வர வேண்டும், சுவாசம் போல இயல்பாக மாறிய செயல்தான் உன்னத ஆன்ம நிலைக்கு அழைத்துச் செல்கிறது."
ஜபம் செய்வதைப் பற்றி பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் அளித்த விளக்கம்தான் இது.
ரமண மகரிஷியை அவர் பாதாள லிங்கக் கோயிலில் தவம் இருந்தபோது உலகுக்கு அடையாளம் காட்டியவர் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்தான். "இந்த திருவண்ணாமலையில் மூன்று பித்தர்கள் இருக்கிறார்கள், தெரியுமா?" என்பார்
ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் பக்தர்களைப் பார்த்து வேடிக்கையாக. "ஒண்ணு ரமணர், ரெண்டாவது நான். மூணாவது அந்த அருணாசலேஸ்வரர்" என்று கூறி சிரிப்பார்.
ஒரு பித்தனைப் போல திருவண்ணாமலையில் சுற்றித் திரிந்த ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளை வணங்கியவர்களுக்கும், தொழுதவர்களுக்கும் அவரின் பார்வையே பல வியாதிகளை, பாதிப்புகளை அவர்களிடமிருந்து விரட்டியது. ’தங்கக் கை சுவாமிகள்’ என்று பெயர் பெற்ற அவர், எந்தக் கடைக்குள் நுழைந்தாலும் அங்கே வியாபாரம் செழித்தோங்கியது. அவரது 'தங்கக் கை' பட்ட இடமெல்லாம் செல்வ வளம் தழைத்தது. திருவண்ணாமலையில் வாழ்ந்து அங்கேயே ஸித்தியானார்.
இவருடைய ஜன்ம நட்சத்திரமான ஹஸ்தம் பிப்ரவரி மாதம் 10ம் தேதியன்று வருகிறது. அன்று திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம், வழூர் மற்றும் மாடம்பக்கத்தில் உள்ள ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் சித்தர் பீடத்தில் விசேஷ ஹோமங்கள், பூஜைகள், ஆராதனைகள் நடைபெற உள்ளன. அன்று அவர் பாதம் பணிந்து அருள் பெறுவோம்.