அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அவதாரத் திருநாள்!

இராமலிங்க சுவாமிகள் அவதாரத் திருநாள்
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அவதாரத் திருநாள்!

னித குலத்தின் நன்மைக்காகப் பாடுபட்டு, உலகம் உள்ளவரை மக்கள் மனங்களில் நிலைத்து வாழும் மகான்கள் வரிசையில் இராமலிங்க வள்ளலாரும் ஒருவர். மனித வாழ்வின் மகத்துவத்தை போதித்து, ஆன்மிகத்திலும்  மனித மனங்களின் வேறுபாட்டைக் களைந்து சன்மார்க்க வழியில் தன்னை நாடி வருபவர்களை மேன்மை பெற வைக்கும் பேரருளாளர் வள்ளலாரின் அவதாரத் திருநாள் இன்று. அவரைக் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களோடு அவரது நினைவைப் போற்றுவோம்.

தமிழகத்தின் கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூர் கிராமத்தில் இராமய்யா - சின்னம்மை தம்பதிக்கு ஐந்தாவது மகவாய் அக்டோபர் திங்கள் ஐந்தாம் நாள், (5.10.1823) புரட்டாசி மாதம் 21ம் தேதி அவதரித்தார் இராமலிங்கம். இம்மகானின் பிறப்பு இறைவன் அருளால் நிகழ்ந்த ஒன்று. ஆம், சிவபெருமானே சிவனடியாராக இல்லம் தேடி வந்து, தாய் சின்னம்மையின் கைகளால் உணவு உண்டு, உலக உயிர்களின் பசி போக்கும்  ஞானக் குழந்தையாக அவதரித்தார்.

சிறு வயதிலேயே தந்தையை இழந்த இராமலிங்கத்துக்கு குருகுலக் கல்வியில் நாட்டம் ஏற்படவில்லை. இவரது சகோதரர் சபாபதி, மெத்தப்படித்து சமயச் சொற்பொழிவுகள் செய்து, அதன் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அவர் தம்மைப் போலவே தனது தம்பியும் நன்கு கல்வி கற்க வேண்டுமென விரும்பி, அக்கால முறைப்படி தமிழ்க் கல்வி கற்பிக்க திவாகரம், நிகண்டு, சதகம், அந்தாதி போன்றவற்றை அவருக்குக் கற்பித்தார். அதுமட்டுமின்றி, தனக்குக் கல்வி போதித்த குருநாதரிடம் கல்வி பயில அவரையும் அனுப்பி வைத்தார். ஆனால், இராமலிங்கத்துக்கு ஆன்மிகத்தில் நாட்டம் மிகுந்து இருந்ததால், கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவதிலேயே தம்மை நாள் முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். ஒரு சமயம் இராமலிங்கம் பாடிய பாடல்களைக் கேட்டு இவரது ஆசிரியர் இயல்பிலேயே புலமை கொண்டிருக்கும் இராமலிங்கத்துக்கு ஏட்டுக்கல்வி தேவையில்லை என்றுணர்ந்தார். ஆனால், இராமலிங்கம் ‘தாம் கல்வியின் சிறப்பால் பாடத் தொடங்கவில்லை என்றும், கடவுளின் அருளால்தான் தம்மால் பாட முடிகிறது’ என்றும் குறிப்பிட்டார்.

1850ல், இராமலிங்கம் தனது இருபத்தேழாவது வயதில் தனது அக்கா உண்ணாமுலையின் மகள் தனக்கோடியைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இறைவன் மீது கொண்ட பற்றும், ஆன்மிக சேவையும் மட்டுமே அவர் சிந்தை முழுவதும் நிறைந்திருந்ததால் விரைவிலேயே தனது இல்லற வாழ்வைத் துறந்தார்.

இறை வழிபாடு, உருவ வழிபாடாக சிறந்திருந்த அந்நாட்களில் இறைவன் பெயரால் நடைபெற்ற மூடப்பழக்கங்களில் இருந்து மக்களை விழிப்புணர்வு பெற வைத்ததில் இராமலிங்க அடிகளாருக்கு பெரும்பங்கு உண்டு. கடவுள் ஒருவரே, அக்கடவுளை ஒளி வடிவில் வழிபட வேண்டும், சிறுதெய்வ வழிபாடு கூடாது, தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கூடாது, புலால் உண்ணக் கூடாது, சாதி சமய வேறுபாடுகள் கூடாது, அனைத்துயிரையும் தன்னுயிர் போல எண்ண வேண்டும், ஆன்ம நேய ஒருமைப்பாட்டுணர்வைக் கைக்கொள்ள வேண்டும், பசி தீர்த்தல் முதலிய ஜீவகாருண்யமே பேரின்ப வீடு பேறடைய வழி என்பது போன்ற சமரச சுத்த சன்மார்க்க நெறிகளை மக்களுக்கு போதித்தார். பெண்களின் சம உரிமைக்காக அன்றே குரல் கொடுத்ததோடு, கணவன் இறந்தால் பெண்கள் தங்கள் மாங்கல்யத்தை எடுக்கக்கூடாது என்றும், ஆண்களுக்கு இணையான உரிமைகளை பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் பேசியவர் இராமலிங்க வள்ளலார்.

பசியால் வாடும் சக உயிரின் வயிற்றுப்பசியைப் போக்குவதே முதல் கடமை எனும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, 1865ல் வடலூரில், ‘சன்மார்க்க சத்திய சங்கத்தை’த் துவங்கினார். தனது கொள்கைகளை உலக மக்கள் அனைவரும் வாழ்வில் பின்பற்றி மகிழ வேண்டும் என்பதற்காகவே சாதி, சமயம், இனம், மொழி, நாடு எனும் பேதங்களற்ற பொதுவான மார்க்கமாக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

மனித ஒழுக்கத்துக்கு முக்கியமான நான்கு கடமைகளாக இந்திரிய ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் ஆகியவற்றை கடைபிடித்தால் மனித நிலையைக் கடந்து இறை நிலையை அடைய முடியும் எனும் கருத்தைக் வலியுறுத்தி இவர் படைத்த, ‘ஜீவகாருண்யம்’ எனும் உரைநடை நூல் மக்கள் மத்தியில் இன்று வரை பெரும் வரவேற்பு பெற்றதுள்ளது.

சைவ உணவே சிறந்தது என்பது போன்ற சில கோட்பாடுகளை உணவு முறையில் புகுத்தியவர். மரணம் என்பது செயற்கையான விஷயங்களால்தான் என்பதையும், மரணத்தை வெல்லும் வழிகளை ஆராய்ந்து, தானும் மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்து காட்டியவர்.

ஞானக் கல்வியில் சிறந்து விளங்கிய வள்ளல் பெருமான், உரைநடை நூல்கள் அதிகம் இயற்றப்படாத அந்தக் காலத்தில் மனு முறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம், ஒழிவியல் ஒடுக்கம், சின்மயபீதிகை, தொண்டைமண்டல சதகத்தின் கடவுள் வாழ்த்துப்பாடல் உரைநடை போன்றவற்றை எழுதி வெளியிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளராகவும் இவர் அறியப்படுகிறார். முதன் முதலில் திருக்குறளுக்கு வகுப்புகள் நடத்தியவர் என்ற பெருமையும் இராமலிங்க அடிகளாரையே சேரும். ஆசிரியராக, உரை ஆசிரியராக, பதிப்பாசிரியராக, ஞான ஆசிரியராக, போதக ஆசிரியராக, உடல் நலன் காக்கும் சித்த மருத்துவராக, அனைத்துக்கும் மேலாக கருணை முகம் கொண்ட கடவுள் நிலை அறிந்த அருளாளராக பன்முகத்தன்மை கொண்டு விளங்கிய வள்ளலார் சுவாமிகள் சுமார் ஆறாயிரம் அருட்பாடல்களை உலக நன்மை கருதி தந்துள்ளார் என்பது சிறப்பு.

தாம் மக்களுக்குச் சொல்லியவற்றின் முகவரியாக வாழ்ந்தும் காட்டிய வள்ளலார் பெருமான், வடலூருக்கு தெற்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேட்டுக்குப்பம் கிராமம் சென்று அதனையே தனது இருப்பிடமாக்கிக் கொண்டார். அங்கு அவர் தங்கியிருந்த இடம், ‘சித்தி வளாகத் திருமாளிகை’ என்று அழைக்கப்படுகிறது. காரணம் தனது 51ம் வயதில் 30.1.1874ம் ஆண்டு தை மாதம் பத்தொன்பதாம் நாள் வெள்ளிகிழமையன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த நிலையில், ‘நான் இப்போது இந்த அறைக்குச் சென்று இறையோடு கலக்கப் போகிறேன். நீங்கள் பார்த்து அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். இந்தக் கதவை சாத்திக்கொள்ளுங்கள். மீறி யாராவது என்னைப் பார்க்க வேண்டும் என்று நேர்ந்தாலும் கடவுள் என்னைக் காட்டித் தர மாட்டார். வெறும் அறையாகத்தான் அது இருக்கும்’ என்று சொல்லி அந்த அறைக்குள் சென்று இறைவனுடன் இரண்டறக் கலந்து ஜோதியில் ஐக்கியமானார். வீதி தோறும் அவர் ஏற்றி வைத்த பசி போக்கும் புண்ணிய அன்னதானம் பெருமளவில் தற்போது நாடெங்கும் பல சேவை அமைப்புகளாலும் நடைபெற்று வருகிறது.

வள்ளல் பெருமான் சித்தி அடையும் முன்பு அறிவுறுத்தியது போல், அனைவரும் வாழ்வில் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாது, ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணையாளரான இராமலிங்க வள்ளல் பெருமான் வழியைப் பின்பற்றி, பேரின்ப ஆன்ம லாபத்தை இந்த மனிதப் பிறவியிலேயே பெற்று உய்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com