‘அசந்தா ஆடி, தப்புனா தை, மறந்தா மாசி!’

‘அசந்தா ஆடி, தப்புனா தை, மறந்தா மாசி!’
Published on

‘ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்’ எனக் கூறுவது வழக்கம். அத்தகைய ஆடி மாதத்தில் ஏற்படும் சூரைக் காற்றினை, அம்மனின் அருட்காற்று அரவணைத்து அருள்பாலிக்கும். பார்வதி தேவி தவத்தினை மெச்சிய சிவபெருமான் ஆடி மாதத்தை, ‘அம்மன் மாதமாக’ விளங்க வருமருள, தட்சினாயணம் ஆரம்பமாகும் இம்மாதத்தில் அம்மனின் அருட்காற்று அதிகமாகவே இருக்குமெனக் கூறப்படுகிறது.

ஆடி மாத முதல் நாளில் தென்னிந்தியாவில் இருக்கும் பல ஊர்களில் தேங்காய்களின் மேற்புறமுள்ள கண்களில் துளையிட்டு அதனுள் வெல்லம், பச்சரிசி மாவு, நெய், ஏலக்காய் ஆகியவற்றை மெதுவாகப் போட்டு மூடி, அதனுள் நீண்ட குச்சி அல்லது கம்பியைச் சொருகி, நெருப்பில் சுட்டெடுத்து அம்மனுக்கு நிவேதனம் செய்து, அதை பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிப்பது வழக்கமாக உள்ளது. ஆடி மாத முதல் நாளில், புதிதாக மணமுடித்த தம்பதிகளை வீட்டுக்கு அழைத்து உபசரித்து, விரும்தோம்பல் செய்து பரிசுகள் அளிப்பது பெண் வீட்டார் வழக்கம்.

ஆடிச் செவ்வாய்க்கிழமைகளில் அநேக பெண்கள் ஔவையார் நோன்பு கடைப்பிடிப்பது உண்டு. பொதுவாக, ஔவையார் நோன்பு ஆடி, தை, மாசி மாதங்களில் தொடர்ந்து ஏதேனும் மூன்று செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்படுகிறது. ‘அசந்தா ஆடியிலும், தப்புனா தையிலும், மறந்தா மாசியிலும்’ என்கிற சொல்லாடலுடன் இந்த வழிபாடு வழங்கி வருகிறது. நல்ல வரன், குழந்தை பாக்கியம், குடும்ப நலன் போன்றவற்றை அருளும் ஔவையார் விரதம். அம்மன் கோயில்களில் இம்மாதம் தீ மிதி விழா, கூழ் வார்த்தல் போன்ற நிகழ்வுகள் விமரிசையாக நடைபெறும்.

முன்னோர்களை மனதார நினைத்து, பூஜை மற்றும் தர்ப்பணம் செய்து, ஏழை எளியவர்களுக்கு தானம் கொடுக்கும் தினம் ஆடி அமாவாசை ஆகும். ஆடி மாதம் 18ம் தேதி வரும் பதினெட்டாம் பெருக்கு அல்லது ஆடி 18 அன்று விதவிதமான கலந்த சாதங்களை தயாரித்து ஆற்றங்கரை அல்லது மொட்டை மாடியில் குடும்பத்தினர், நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது மனதுக்கு நிறைவை அளிப்பதாகும். ஆடிச் செவ்வாய் போலவே, ஆடி வெள்ளியும் விசேஷமானது. அம்மனுக்கு வண்ண வண்ண வளையல்களை அணிவித்து, அழகான புடைவை சாத்தி வளைகாப்பு நடத்தும் நாள் ஆடிப்பூரம். அதேபோல், ஆடி கிருத்திகை முருகப்பெருமானுக்கு மிக உகந்த தினம். ஆடிப் பௌர்ணமியன்று ஆடித்தபசு விழா அருள்மிகு சங்கரநாராயணர் – கோமதி அம்மன் கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆதிசக்தி கோமதியம்மனாக தவமிருந்த நிகழ்வினைக் குறிக்கும் திருவிழா ஆடித்தபசு.

தமிழ் மாதங்களில், ‘ஆடி’ மாதத்தில் மட்டுமே வரும் அதிகமான விழாக்களாகிய ஆடி முதல் நாள், ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி பௌர்ணமி, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடித்தபசு, ஆடி பதினெட்டு என அனைத்துத் திருநாட்களும் அமர்க்களமாகக் கொண்டாடப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com