ஆஷாட நவராத்திரி ஆரம்பம்!

ஆஷாட நவராத்திரி ஆரம்பம்!
Published on

ஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி அன்னை வாராகி வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. இந்த நாளில் செய்யும் வேண்டுதல்களை அனைத்தும் நிச்சயம் ஸித்திக்கும் என்கிறது பிரம்மாண்ட புராணம். நவராத்திரி என்றால் நமக்கு புரட்டாசி நவராத்திரிதான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், 12 மாதங்களிலும் அம்பிகையை நினைத்து 12 நவராத்திரிகள் கொண்டாடிய காலம் உண்டு. இப்பொழுது பிரதானமாக நான்கு நவராத்திரிகள் இருக்கின்றன. அவை, வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி ஆகியவையாகும். அம்பிகை வழிபாட்டு விழாக்களில் நவராத்திரி மிகவும் முக்கியமானது.

ஆஷாட மாதம் என்பது சந்திரமான முறையில் ஆனி மாத அமாவாசையில் தொடங்கி, ஆடி மாத அமாவாசை தினத்தோடு முடிவடையும். ஆனி மாத அமாவாசைக்கு மறு தினம் தொடங்கி ஒன்பது நாட்கள் இந்த நவராத்திரி விழா நடைபெறும். ஆஷாட நவராத்திரி இன்று ஜூன் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 27ம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த நவராத்திரி விழா ஹிமாச்சலப் பிரதேசத்தில் குஹ்ய நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. விஜயவாடா கனக துர்கா கோயிலில் ஆஷாட நவராத்திரி, ‘ஷாகம்பரி உத்ஸவம் அல்லது ஷாகம்பரி திருவிழா’வாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் வாராகி நவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது.

ஆஷாட நவராத்திரிக்கு உரிய தெய்வமாக வாராகி அம்மன் கொண்டாடப்படுகிறார். வாராகி அம்மன் சப்த மாதர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். கிராமங்கள் தோறும் அனைத்து கோயில்களிலும் சப்த மாதர்களுக்கு என வழிபாட்டு முறைகள் இருக்கும். காரணம், மனித வாழ்க்கைக்கு தேவையானவற்றை அருள்பவர்கள் இவர்கள் என்பது நம்பிக்கை. பொதுவாகவே, ஆனி, ஆடி மாதங்கள் விவசாயத்துக்கு உகந்தவை. இந்த மாதங்களில்தான் புதிய மழை பெய்து நிலம் விதைப்புக்கு உகந்ததாக இருக்கும். எனவே, இந்தக் காலத்தில் வழிபட வேண்டிய தெய்வம் வாராகி அம்மன்.

ஆகவேதான் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை பெரிய கோயிலில் அன்னைக்கு தனிச்சன்னிதி கொண்டு வழிபட்டான் மன்னன் ராஜராஜன். தஞ்சை பெரிய கோயிலில் இப்போதும் ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு இந்த நாட்களில் நவதானிய அலங்காரம், தேங்காய் பூ, சந்தனம், குங்கும அலங்காரம் என தினமும் ஒரு பொருளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபடுவார்கள். இந்த வழிபாட்டில் அன்னை வராக முகத்தோடு காட்சி தருவாள். வாராகியை வழிபட உகந்த திதி பஞ்சமி. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என இரு காலங்களிலும் வாராகியை வழிபட வேண்டும் என்றாலும், நவராத்திரி வரும் பஞ்சமி திதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வாராகிக்குரிய அர்ச்சனை மந்திரங்களில், ‘ஆஷாட பஞ்சமி பூஜன பிரியாயை நமஹ’ என்று ஒரு வரி வரும். பஞ்சமியில் செய்யப்படும் பூஜையை பிரியமுடன் ஏற்பவள் அன்னை வாராஹி என்பது இதன் பொருள்.

நவராத்திரியில் பஞ்சமி திதி நடுநாயகமான தினம். அதனாலேயே அன்னைக்கு பஞ்சமி வழிபாடும் ஏற்பட்டது. அன்னைக்கே பஞ்சமி என்ற திருநாமமும் உண்டு. அதற்கு பஞ்சமி திதிக்கு உரிய இவள் என்றும் பஞ்சம் போக்குபவள் என்றும் பொருள் கொள்ளலாம். வீட்டில் பஞ்சமி அன்று பூஜை அறையில் விளக்கேற்றி திருக்கோலமிட்டு அதை தானியங்களை கொண்டு அலங்கரித்து, அன்னை வாராகியை வழிபட்டால் வீட்டில் எப்போதும் தானியங்கள் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

‘சதுரங்கச் சேனா நாய்கா’ என்ற ஒரு திருநாமம் அன்னைக்கு உண்டு. அதாவது, லலிதாம்பிகையின் நால்வகை படைகளுக்கும் சேனாதிபதியாக திகழ்பவள் என்பது இதன் பொருள். எனவே, அன்னையை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகளால் உண்டாகும் பயங்களும் பிரச்னைகளும் இல்லாமல்போகும். ‘வாராகி காரனிடம் வாதாடாதே’ என்று ஒரு சொல்லாடல் முன்பு இருந்தது. காரணம், வாராகியை வழிபடுபவர்கள் சகல வித்தைகளிலும் சிறந்து விளங்குவார்கள் என்பதை இதை குறிப்பதாக நம்பிக்கை.

பிரம்ம புராணம் வாராகி தேவியின் மகிமைகளை விளக்குகிறது. பண்டாசுர வதத்துக்கு லலிதாம்பிகை புறப்படும்போது, தேவி வாராகியும் தன் கிரிசக்கரத்தில் எழுந்தருளினாள். அப்போது சுற்றி இருந்த தேவதைகள் வாராகி துவாதச நாமங்களைச் சொல்லி துதித்தனர். துவாதசம் என்றால் 12 . இந்த 12 நாமங்களைச் சொல்லி துதித்து அன்னையை வழிபட்டால் சகல காரியங்களும் ஸித்தியடையும் என்கிறது பிரம்மாண்ட புராணம். பஞ்சமி, தண்டநாதா, சங்கேதா, சயமேஸ்வரி, சமய சங்கேதா, வாராஹி, போத்ரினி, சிவா, வார்த்தாளி, மகா சேனா, ஆக்ஞாசக்ரேஸ்வரி, அரிக்ஞை என்பது அந்த நாமங்கள். இந்த 12 நாமங்களையும் ஒவ்வொரு பஞ்சமியன்றும் அன்னையின் சன்னிதியில் அல்லது வீட்டில் அம்பிகையின் படத்துக்கு முன் நின்று சொல்லி வணங்க, தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி ஆகும். பூமி தொடர்பான தீர்க்க முடியாத பிரச்னைகள் நிச்சயம் தீரும்.

வாராகி மலைகளின் தலைவி அதனால் மலைகளில் மலரும் குறிஞ்சி மலர்கள் முதலான அனைத்து மலர்களையும் சூட்டி மகிழ்கின்றனர். அனைத்து மலர்களுமே அவளுடைய வழிபாட்டுக்கு உரியது என்றாலும், தாமரை, அல்லி, செம்பருத்தி, அலரி போன்ற மலர்களைக் கொண்டு வழிபாடு செய்கின்றனர். செவ்வரளி, செம்பருத்தி, மாதுளம் பூக்கள் போன்றவற்றை தொடுத்து அணிவித்து வழிபடுகின்றனர். அமைதியையும் மன மகிழ்ச்சியையும் வேண்டுபவர் நந்தியாவர்த்தம், பவளமல்லி, முல்லை, மல்லிகை போன்ற மலர்களைச் சூட்டி வழிபாடு செய்கின்றனர். வளமான வாழ்வை வேண்டுபவர்கள் அருகம்புல், மரு, பவளம், மனோரஞ்சிதம் போன்ற மலர்களைக் கொண்டு வழிபடுகின்றனர். செல்வம் வேண்டுவோர், செவ்வந்தி, ஒன்றை சாமந்தி, மஞ்சள் நிற விருட்சி மலர் மாலைகளை அணிவித்து, அவற்றால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். பகையை வெல்ல கள்ளிப்பூக்கள், தாழைமலர், பொற்றாமரை மலர் இதழ்களைக் கொண்டு வழிபடுகின்றனர். ஆஷாட நவராத்திரியில் அன்னை வாராஹியை வழிபட்டு அருள் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com