ஆசியாவின் மிகப்பெரிய பைரவர் கோயில்!

ஆசியாவின் மிகப்பெரிய பைரவர் கோயில்!

ரோடு மாவட்டம், காங்கேயம் சாலையில் அமைந்த அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றிப் பாளையத்தில் உருவாகி வருகிறது உலகிலேயே மிகப்பெரிய பைரவர் திருக்கோயில். அறுபத்துநான்கு பைரவ மூர்த்திகளுக்கும் இந்த ஒரே ஆலயத்தில் சிலை அமையவிருப்பது சிறப்பு. பொதுவாக, கோயிலின் நுழைவாயிலில் ராஜகோபுரம் அமைப்பது மரபு. இந்தக் கோயிலின் நுழைவாயில் ராஜகோபுரமாக 39 அடி உயரமுள்ள உலகின் மிக பிரம்மாண்டமான காலபைரவரே திகழ்வது சிறப்பு. அவர் வழியாகத்தான் இந்த ஆலயத்தின் உள்ளேயே செல்ல வேண்டும்.

சிவபெருமானின் அம்சம் பைரவ மூர்த்தி என்பது நம்பிக்கை. இவரது வாகனம் நாய். இந்தக்கோயில் காலபைரவரின் பின்னால் பிரம்மாண்டமான நாய் உருவம் ஒன்றும் உள்ளது. இந்த பிரம்மாண்ட கோயிலை அமைத்துவரும் விஜய் ஸ்ரீ சுவாமிகளிடம் இதுகுறித்து பேசியபோது, “எனது சிறு வயதிலேயே எனக்குள் பைரவர் நிறைந்து விட்டார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு என் மனதில் விழுந்த விதை தான் இன்று பைரவருக்கான இந்த பிரம்மாண்ட ஆலயமாக எழுந்து நிற்கிறது. பலரது அன்பாலும் கூட்டு முயற்சியாலும் ஒத்துழைப்பாலும் உதவிகளாலும்தான் இது நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இங்குள்ள 39 அடி உயர காலபைரவர் சிலை போல உலகில் வேறெங்கும் அமைக்கப்படவில்லை. எனவேதான், அது உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதுபோல, ஆசியாவிலேயே உயரமான 39 அடி கால பைரவரை நுழைவாயிலாகக் கொண்ட திருக்கோயில் இதுவே.

பொதுவாக, சிவாலயங்களில் தென் திசையில் சிறிதாக இரண்டு அடி உயரத்தில் ஒரு காலபைரவர் சிலை இருக்கும். ஆனால், பைரவருக்கு முதன்மையாக இவ்வளவு பெரிய ஆலயமும் மிகப்பெரிய சிலையும் உருவாகி உள்ளது இங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலின் கும்பாபிஷேக விழா வரும் 2023 மார்ச் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. இந்தக் கோயிலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அவல்பூந்துறை கிராமத்தில் உள்ள 300 ஆண்டுகால பழைமையான சிவன் கோயிலில் இருந்து ஆயிரம் பேர் குடமுழுக்குக்கான தீர்த்தத்தைக் கொண்டு வரவிருக்கிறார்கள்.

இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு அம்சம், இங்கே 650 கிலோ எடையுள்ள ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் சிலை ஒன்றும் உள்ளது. இது முழுக்க ஐம்பொன்னால் ஆனது. அதை வணங்குபவர்களுக்குப் பலன்களும் வளங்களும் கிடைத்து வருகின்றன. குடமுழுக்கின்போது மக்கள் அனைவரும் இந்தப் பெருமானுக்கு நெய் அபிஷேகம் செய்யலாம். திருக்குடமுழுக்குக்குப் பிறகு கருவறையில் இருக்கும் காலபைரவர் சிலையை பொதுமக்கள் தொட்டு வணங்கலாம். தாங்களே அர்ச்சனையும் அபிஷேகமும் செய்யலாம். இதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. அந்த வகையில், பொதுமக்களின் ஆலயமாக சாதி, மத, இன, வேறுபாடு இன்றி அனைவரும் வணங்கக்கூடிய ஆலயமாக இது உருவாகியிருக்கிறது.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com