கோபம் தவிர்!

கோபம் தவிர்!

ந்தப் பிரபஞ்சத்தில் கோபம் கொள்ளாதவர்கள் யார்? அந்தக் கோபத்தை யாரிடம் கொட்டுவது? அதை மனதிலேயே வைத்துக் கொண்டிருந்தால் உடம்புதான் கெட்டுப் போகும். கிராமத்தில் பேச்சுவாக்கில், ‘சுவரிடமாவது சொல்லி அழு’ என்பார்கள். அப்படிச் செய்து விட்டால் நம் மனதுக்கும் நிம்மதி. சம்பந்தப்பட்டவரின் மனதையும் நோகடிக்க மாட்டோம். உறவுகள் வலிமையாக சில விஷயங்களைச் செய்வதுதான் நல்லது.

ரு சமயம் ஆபிரகாம் லிங்கனிடம் வந்த ஒருவர், “எனக்கு ஒருவன் தீங்கு செய்து விட்டான். அதை என்னால் மறக்க முடியவில்லை. அவன் மேல் உள்ள என் கோபத்தை அடக்க முடியவில்லை” என்றார்.

உடனே ஆபிரகாம் லிங்கன், “உங்கள் கோபத்தை எல்லாம் கொட்டி ஒரு கடிதம் எழுதிக் கொண்டு வந்து என்னிடம் கொடுங்கள்” என்றார்.

அதேபோல், அந்த நபரும் ஒரு கடிதம் எழுதிக் கொண்டு வந்து லிங்கனிடம் காட்டி, “என் மனசில் இருக்கும் குமுறலை எல்லாம் கொட்டி இந்தக் கடிதத்தை எழுதி இருக்கிறேன். இதைத் தபாலில் சேர்த்து விடட்டுமா?’ என்று கேட்டார்.

அப்போது லிங்கன், “உங்கள் கோபம் குறைந்ததா? மனம் அமைதியாக இருக்கிறதா?’’ என்று கேட்க, அவர் “ஆம்” என்று கூறினார்.

“சரி… இப்போது அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போடுங்கள். அவரை மன்னித்துவிடுங்கள். உங்கள் மனச் சுமை குறையும். அதுதான் முக்கியம்” என்றார்.

கடிதம் எழுதிக் கொண்டு வந்த நபர், ஆபிரகாம் லிங்கனை ஆச்சரியத்தோடு பார்த்தார்.

அதைக் கண்ட லிங்கன் அவரிடம் புன்முறுவலுடன், “அவரை நீங்கள் திட்டலாம், கோபப்படலாம். அதனால் உங்கள் மனச்சுமைதான் அதிகரிக்கும். உங்களுக்குள் உள்ள உறவு நசிந்து விடும். இப்போது உங்களுக்குள் ஒரு அமைதி இருக்கிறது. இதுதான் நல்லது” என்றார்.

ஆம். பிறர் நமக்குச் செய்யும் தீங்குகளை மறப்பது, நம் மனதை அமைதியடையச் செய்யும். மனம் லேசாகும். லிங்கன் கூறியதைப் பின்பற்றினால் நம் மனம் எப்போதும் அமைதியாக இருக்கும். கோபம் என்பது பிறர் மேல் காட்ட அல்ல. நமக்குள்ளேயே அதை அழித்து, நம்மை அமைதியாக வைத்துக்கொள்ள. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதை நாம் அறிவோம்தானே. கோபத்தை மறந்து உறவுகளை வளர்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com