ஆன்மிகக் கதை - உயிர் பெற்ற பொம்மை குழந்தை!

ஓவியம்; சேகர்
ஓவியம்; சேகர்

-பொன்னம்மாள்

யிலாயத்தில் உமா தேவியார் பூப்பறிக்க நந்தவனம் சென்றார். அங்கே, ருத்ர கணங்கள் அம்பிகை வந்ததை கவனிக்காமல் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட அம்பிகை, "சஞ்சல புத்திக்காரர்களே! க்ஷணமும் நிற்காமல் துள்ளும் மீன்களாகுங்கள்" என சபித்தார். அதன்படி, அவர்கள் அயிரை மீன்களாகி கடலில் அலைந்தனர். வாலகில்லி யாசுரன் சுறா மீனாய் மாறி அயிரை மீன்களை உண்ண முற்பட்டான்.

''ஓம் நமசிவாய! அபயம்... அபயம்" என அலறின மீன்கள். திரிசூலத்தால் அசுரனை சம்ஹரித்தார் கங்காதரன். "சுவாமி! எங்களுக்கு சாப விமோசனம் எப்போது?" என மீன்கள் தொழுதன.

"நாளை மொத்தமாக ஒரு வலையில் சிக்குங்கள். தேவி பார்வைபட்டு விரைவில் கயிலை வருவீர்கள்" என வரமளித்தார் ஈசன். அதன்படி, மறுநாள் மொத்த அயிரைகளும் ஒரு மீனவனின் வலையில் அகப்பட, அப்படியே வாங்கிக்கொண்டான் அரவிந்தன் என்ற பக்தன். அவன் மீன்களைக் காயவைத்துப் பொதியில் ஏற்றி, மதுரை சந்தைக்குப் புறப்பட்டான். வழியில் ஒரு குளக்கரையில் அவன் ஓய்வெடுத்த வேளையில் அம்பிகை சிறுமியாக வந்து அவனிடம், "பொதியில் என்ன இருக்கிறது?" என்று கேட்டாள்.

''காய வைத்த மீன்கள். சந்தைக்கு விற்கக் கெரண்டு போகிறேன்" என்றான் அரவிந்தன்.

"இந்த மீன்களைக் குளத்தில் போட்டு விட்டு கற்களை நிரப்பிக் கொண்டு போ. இந்த மீன்கள் காயவில்லை" என்றாள் சிறுமி.

சிறுமி கூறியபடி, பொதியில் துள்ளிய மீன்களை குளத்து நீரில் கவிழ்த்தான். 'சிறுமியாக வந்தது அம்பாளே என்றும், உரைத்தது தெய்வ வாக்கே' என நம்பினான். 'காய வைத்த மீன்கள் உயிர் பெற்று அசையுமானால், இந்தக் கற்களும் நவரத்தினங்களாகலாம்' என்ற நம்பிக்கையோடு, கல் பொதியோடு மதுரை வந்தான். சந்தையில் பொதியை அவிழ்க்க, கற்களெல்லாம் தங்கக் கட்டிகளாக மாறியிருந்தன. 'அம்பாள் மேல் நான் கொண்ட பக்தியால், எனக்குக் கிடைத்த பரிசு இது' என மகிழ்ந்தான்.

சந்தையில் அரசுக் காவலர்கள் அவனை விசாரிக்க, நடந்ததைச் சொன்னான் அரவிந்தன். ஆறில் ஒரு பங்கை வரியாகக் கேட்டனர். செலுத்தினான்.

வீர சேன பாண்டியன், "தாயே! இவனிடம், 'காய வைத்த மீன் உயிர் பெற்று விடும். குளத்தில் கொட்டிவிட்டு கற்களை அள்ளிக் கொண்டு போ' என்றிருக்கிறாய். சொன்னபடி செய்தான். கற்களைத் தங்கக்கட்டி யாக்கியிருக்கிறாய். நானும் திருக்கோகர்ணம் ஈசனை பூஜித்தேன், விரதமிருந்தேன். ஒரு ஆண் பொம்மையைக் கொடுத்து, அரண்மனையில் வைத்திரு.காலம் வரும்போது பிள்ளைளைத் தருகிறேன் என்றருளினாய். பொம்மைப் பிள்ளை நிஜப் பிள்ளையாக வேண்டும்" என்று பிரார்த்தித்தான்.

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் எந்த வித வண்ணங்களில் உடை அணிந்தால் இதமாக இருக்கும் தெரியுமா?
ஓவியம்; சேகர்

பின்னர் பட்டத்தரசி, பரிவாரங்களுடன் காளையார் கோயில் சென்று பொம்மைப் பிள்ளையை ருத்ர தீர்த்தத்தில் இட்டான். அது, 'அம்மா... அப்பா' என்று கூறிக்கொண்டு வெளியே வந்தது. அதை வாரியெடுத்த அரசனும் அரசியும். சொர்ணவல்லியம்மை கொடுத்த பரிசானதால் வீரசேன பொற்பாண்டியன் என்று பெயர் சூட்டி வளர்த்தனர். அவன் பெரியவனாகி மதுரையை ஆண்டான்.

காளையார்கோயில் பிரம்மோத்ஸவத்தில் ஏழாம் திருநாள் பொய்ப்பிள்ளையை மெய்ப்பிள்ளையாக்குகிற விழா. பிள்ளை வரம் வேண்டுபவர்கள், குழந்தை பிறந்தபின் இத்திருவிழாவில் பொம்மை வாங்கிக் குளத்தில் விடுவார்கள். குழந்தை இல்லாதவர்கள் அதை எடுத்துச் சென்று வீட்டில் வைத்தால் விரைவில் மகப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com