

ஒடிசா மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயில் பற்றி அறிமுகம் யாருக்கும் தேவை இல்லை. இந்த கோயில் மகாவிஷ்ணுவின் ஒரு வடிவமான ஜெகநாதருக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டது. அந்தக் கோயிலின் அருகில் பிரபலமான பேடி ஹனுமான் கோயில் உள்ளது. 'பேடி' என்றால் சங்கிலி என்று பொருள். பூரி ஜெகநாதர் கோயிலின் காவல் தெய்வமான ஶ்ரீ ஹனுமான் இங்கு சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளார். ஹனுமானை எதற்காகச் சங்கிலியால் பிணைத்துள்ளனர்? என்ற காரணத்தையும், அதன் பின்னால் உள்ள சுவாரசியமான புராணத்தையும், இங்கே பார்ப்போம்.
வரலாற்று ரீதியாக பேடி ஹனுமான் கோயிலை மன்னர் இந்திரத்யும்னன் கட்டியுள்ளார். உலகின் மிகப் புனிதமான ஏழு நகரங்களில் ஒன்றான பூரியை பாதுகாக்கும் பொறுப்பை ஹனுமானிடம் ஜெகநாதர் ஒப்படைத்தார். இந்த கோயிலின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஹனுமான் பாதுகாக்கிறார்.
பூரி ஜெகநாதர் கோயில் கடலின் அருகாமையில் இருந்ததால், கடல் சீற்றம் அடையாமல் கடலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை ஹனுமான் கவனித்துக் கொண்டார். ஆனால், ஒருநாள் கடல் சீற்றம் அடைந்து ஜெகநாதர் கோயில் சேதமாகி மீண்டும் கட்டப்பட்டது. ஒரு முறை வருணன் ஜெகநாதரைத் தரிசிக்க கோயிலுக்குள் வந்த போது, அவருடன் கடல் நீரூம் சேர்ந்து வந்தது. இதனால் கோயிலுக்கும் நகருக்கும் சேதம் ஏற்பட்டது.
ஹனுமான் காவலுக்கு இருக்கும் போது எவ்வாறு இப்படி நடந்தது? என்று கேள்வி வரலாம். தலைவனுக்கு எப்போதும் ஒரு பிரச்சனை உண்டு, உலகில் யாரேனும் ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்தாலோ, ராமாயணத்தை பாராயணம் செய்ய ஆரம்பித்தாலோ, ஹனுமான் அந்த இடத்திற்கு சென்று மெய்மறந்து விடுவார். இதைப் போல அடிக்கடி அயோத்திக்கு பறந்து சென்று விடுவார் ஹனுமான். அப்படியொரு சமயம்தான் மேற்படி நடந்தது.
இதை அறிந்து கோபமுற்ற ஜெகநாதர், ஹனுமானின் கைகளையும் கால்களையும் ஒரு சங்கிலியால் கட்டி, இரவும் பகலும் கடற்கரையில் இருந்து பூரியை பாதுகாக்க உத்தரவிட்டார்.
அன்றிலிருந்து ஹனுமான் பூரியின் எல்லையை தாண்டாமல் கோயிலை பாதுகாத்து வருகிறார். இதனால் இந்த கோயிலுக்கு 'தரியா மகாவீர் கோயில்' என்றும் பெயர் உண்டு. ஒடியா மொழியில் 'தரியா' என்றால் கடல் என்று பொருள்.
கடல் சீற்றத்தில் இருந்து ஜெகநாதர் கோயிலை பாதுகாப்பதால் ஹனுமனுக்கு இந்தப் பெயர் வந்தது. இந்தக் கோயில் உள்ளே கடல் அலைகளின் சத்தம் சுத்தமாக கேட்காது. வாயு புத்திரனான ஹனுமான் காற்றையும், ஒலியையும் கட்டுப்படுத்தி கோயிலின் உள்ளே அமைதியை உருவாக்குகிறார்.
முன்பு, கடல் அலைகளின் சத்தத்தால் ஜெகநாதருக்கு தூக்கம் கெட்டுப் போனதாம். அதனால், ஹனுமான் உள்ளே இரைச்சல் கூட வராமல் அமைதியைப் பாதுகாக்கிறார்.
பேடி ஹனுமான் கோயில் (Bedi hanuman mandir) அமைந்துள்ள இடம் 'சக்ர தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. ஜெகநாதரின் ஆயுதமான சுதர்சன சக்கரம் இங்கு விழுந்த காரணத்தினால், இந்தப் பெயரைப் பெற்றுள்ளது. இங்குள்ள புனித நீரில் நீராடி ஹனுமானை வழிபட்டால், நம்மைப் பிடித்துள்ள கர்ம வினைகள் மற்றும் துன்பங்கள் என்ற சங்கிலிகள் அறுபடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தக் கோயிலில் 4 அடி உயரமுள்ள ஹனுமான் விக்கிரகம் நிறுவப்பட்டுள்ளது. ஒரு கையில் கதையும், மறு கையில் லட்டையும் ஹனுமான் ஏந்தியுள்ளார். ஒரு கையில் மகிழ்ச்சியையும், மறு கையில் நம் பாதுகாப்பையும் அவர் வைத்துள்ளார். இந்தச் சிலை கடல் அமைந்துள்ள கிழக்குத் திசை நோக்கியவாறு அமைந்துள்ளது. இதன் அர்த்தம் அவர் எப்போதும் விழிப்புடன் கடலைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்பது தான்.