நம்பினோர் கைவிடப்படுவதில்லை!

Motivation Image
Motivation ImageImage credit - pixabay.com

-தா சரவணா

ர் ஏழைக் குடியானவன்,  ஒரு கிருஷ்ணர் பொம்மையை வாங்கி வந்து வீட்டு அலமாரியின் கீழ்த்தட்டில் வைத்தான். அதன்முன் அமர்ந்து தனது ஏழ்மையைப் போக்கும்படி மனமுருகி வேண்டினான். 

இதே செயலை அவன் பலநாட்கள் பலமுறை செய்தும் அவன் வறுமை போகவில்லை. அவனுக்கு கிருஷ்ணர் மேல் பயங்கர கோபம் ஏற்பட்டது.

அவன் மீண்டும் கடைக்குப்போய் முருகன் பொம்மை ஒன்றை வாங்கி வந்தான். கிருஷ்ணர் பொம்மையை எடுத்து அலமாரியின் மேல்தட்டில் வைத்துவிட்டு முருகன் பொம்மையை கீழ்தட்டில் வைத்தான்.

முருகன் முன்பு தன் எளிமையான பூஜையைத் தொடங்கினான். அப்போது அவன் ஏற்றி வைத்த ஊதுபத்திப்புகை மெல்ல மெல்ல மேலேறிப் போவதைக் கண்டான்.

“கிருஷ்ணா! இவ்வளவு நாட்கள் பூஜை செய்தபோது நீ கண் திறக்கவில்லை. ஆனால், இப்போது முருகனுக்கு ஏற்றி வைத்த ஊதுபத்திப் புகையை மட்டும் நீ அனுபவிக்கிறாயா?” என்று சொல்லி சிறிது பஞ்சை எடுத்து கிருஷ்ணர் பொம்மையின் மூக்கில் அடைத்தான்.

அப்போதே அந்தக்கணமே கிருஷ்ணர் அவன்முன் காட்சியளித்தார். “பக்தனே, என்னை மண்ணாகப் பாவிக்காமல் உயிருள்ளவன் என்று எண்ணி பஞ்சை என் மூக்கினில் அடைத்தாய். மெச்சினேன் உன்னை. என்ன வேண்டும் கேள் தருகிறேன்” என்றார்.

வெறும் கல்லாகக் கருதாமல் இறைவனை நிஜம் என்று நினைத்தாலே போதும். அவன் எங்கிருந்தாலும் நமக்காக ஓடி வருவான்! அதுதாங்க பக்தியின் ரகசியம்.

ஆனால், நம்மில் பலரும் கோயிலுக்குச் செல்லும் போது கூட வெளியே கழற்றி விடப்பட்ட செருப்பு பத்திரமாக இருக்கிறதா? என்ற எண்ணத்தோடுதான் சுவாமி கும்பிடுவோம். அதேபோல சுவாமிக்கு என்ன ஆடை அலங்காரம் பண்ணப்பட்டுள்ளது? சுவாமி கழுத்தில் அணிந்துள்ள நகையின் அழகு ஆகியவற்றுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, சுவாமி கும்பிடுவதற்கும் தியானத்திற்கும் காட்ட மாட்டோம்.

மேலும், கோயில்களில் யாரையும் கோபப்படுத்தும் விதமாக பேசக்கூடாது_ சத்தமாக பேசக்கூடாது, அமைதியாக சுவாமியுடன் மனதார பேசி நம் வேண்டுதல் களைக் கூற வேண்டும். ஆனால், இதையெல்லாம் யாரும் பின்பற்றுவதே கிடையாது. ஏதோ கடமைக்காக கோயிலுக்குச் செல்பவர்கள் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது.  

இதையும் படியுங்கள்:
பலாப்பழம் வைத்து சுவையான இரண்டு வகை ஸ்வீட்!
Motivation Image

கோயில் என்பது ஆண்டியும் அரசனும் ஒன்று என்பதை புரிந்துகொள்ளக்கூடிய இடமாகும். ஆனால், நம்மில் பலர் சுவாமியைப் பார்ப்பதற்கு வரிசையில் செல்வதற்குக்கூட பொறுமை இல்லாமல் கட்டண தரிசனத்தில் சுவாமியை சென்று பார்த்து வருகிறோம். இதனால் வரிசையில் வரும் பக்தர்களின் கோபத்துக்கும், சாபத்திற்கும் நாம் ஆளாவோம் என்பதை உணர வேண்டும்.

நாம் இப்படிப்பட்ட நிலையில் சுவாமி தரிசனம் செய்தால் நம் வேண்டுதல்களை ஆண்டவன் எப்படி நிறைவேற்றுவார்? முதலில் அவரை நம்ப வேண்டும் அவரை முழுமையாக நம்பி, நம் வேண்டுதல்களை தெரிவிக்க வேண்டும்.  அப்போதுதான் இறைவன் நம்மிடம் இறங்கி வருவார். நம்பினோர் கைவிடப்படுவதில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com