கும்பகோணம் அருகே கொட்டையூர் கோடி விநாயகரை வழிபட்டு பின் மற்ற தெய்வங்களை வழிபட்டால் கோடி செல்வங்கள் சேரும் என்பது ஐதீகம்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலருகே உள்ள கீழ் ஆவணி மூல வீதி பைரவர் கோயிலுள்ள சோம சூரிய கணபதியை அமாவாசை நாளில் வேண்டிக் கொள்ள கிரக, நாக தோஷம் விலகும்.
காரைக்குடி அருகே உள்ள மாத்தூரிலும், சிவகங்கை மாவட்டம் பி. அழகாபுரியிலும் கலங்காத கண்ட விநாயகர் கோயில்கள் உள்ளது. கடன் பிரச்னையால் வாடுபவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொள்ள கடன் பிரச்னைகள் தீரும்.
சென்னை சவுகார்பேட்டையிலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள சகோதர விநாயகரை வணங்கிட பிரிந்திருக்கும் சகோதரர்கள் ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சுவாமி சன்னதி செல்லும் வழியில் ஒரு தூணில் விநாயக தாரணி எனப்படும் பெண் வடிவ விநாயகியைப் பார்க்கலாம். இவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து வேண்டிக் கொள்ள திருமண தோஷம் விலகும்.
திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் போல திருத்துறைப் பூண்டி அருகில் இடும்பாவனம் சற்குணநாதர் கோயிலிலும் கடல் நுரையிலான வெள்ளை விநாயகர் அருள்கிறார்.இவருக்கு பால் பன்னீர் அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்கும்.
சுவாமிமலை கோயிலின் கொடிமரம் அருகே தெற்கு நோக்கி அமைந்துள்ள கண் கொடுத்த விநாயகரை அங்குள்ள புஷ்கரணியில் 48நாட்கள் நீராடி வணங்கி வர எப்பேர்பட்ட கண் சம்பந்தப்பட்ட நோயாக இருந்தாலும் குணமாகிவிடும் என்பது ஜதீகம்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயிலுள்ள விநாயகரை புரமோஷன் விநாயகர் என்றழைக்கின்றனர். இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வேண்டிட பணி உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுள்ள மும்முடி விநாயகரை வேண்டிக் கொள்ள முன்னோர்கள் ஆத்மா சாந்தியடையும். நினைத்த பேறுகள் கிட்டும் என்பது ஐதீகம்.
கோவை மாவட்டம் நெகமம் அருகிலுள்ள தேவனாம் பாளையத்தில் உள்ள அமணீஸ்வரர் கோயிலுள்ள அம்பாள் பாதத்தின் கீழ் உள்ள சதுர் விநாயகர்களை வணங்கினால் கணவன், மனைவியரிடையே உள்ள மனக்கசப்பு நீங்கும்.
வேலூர் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயிலில் மூலஸ்தானத்தில் சுயம்பு மூர்த்தியாக 11விநாயகர்கள் தன் அருகிலேயே கொடிமரமும் கொண்டு அருள் பாலிக்கின்றனர். திருமணத்தடை, குழந்தைப் பேறின்மை பிரச்னை உள்ளவர்கள் சங்கடஹர சதுர்த்தி அன்று விரதமிருந்து தீபமேற்றி வழிபட நல்ல பலன்களைப் பெறலாம்.
தேனி மாவட்டம் கம்பம் அருகில் சுருளிமலை அருவியின் அடிவாரத்தில் உள்ள பூதநாராயணன் பெருமாள் கோவிலில் தனி சந்நிதியில் கால் நடைகளை காக்கும் கணபதி உள்ளார். பால் சுரப்பதில் குறைபாடு, மற்றும் அனைத்து கால்நடை பிரச்னைகளுக்கு இவரை வேண்டிக் கொள்ள குறைபாடு நீங்கி குணம் கிடைக்கிறது.
விநாயகர் நர்த்தன கோலம் மிகவும் விசேஷமான ஒன்று. இப்படிப்பட்ட கோலத்தை திருப்பூர் அருகேயுள்ள ஊத்துக்குளி பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் கோயிலில் காணலாம். இவரை வழிபட்டு இனிப்பு நைவேத்யம் படைத்திட இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம் என்று நம்புகின்றனர்.