பகவானின் இரட்டை நிலைப்பாடு!

பகவானின் இரட்டை நிலைப்பாடு!
Published on

‘சமயத்துக்கேற்றபடி இரண்டு பேரிடம் இரண்டுவிதமாகப் பேசுவதை, ‘இரட்டை நிலைப்பாடு’ என்று கூறுகிறோம். இது, இன்றைய மனிதரிடத்தில் பலரிடமும் உள்ள விஷயம்தான். மனிதர்கள் கொண்ட இந்த இரட்டை நிலைப்பாடு தவறானது. ஆனால், இறைவனும் கூட சில சமயங்களில் இரட்டை நிலைப்பாடோடு இருக்கிறார். அது, அன்புபூர்வமானது, கருணைமயமானது என்பதை விளக்குவதாகத் திகழ்ந்தது
வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசம். அந்த உபன்யாசத்தில் அவர்…

“இரட்டை நிலைப்பாடு - அதாவது double standard என்பது தப்புதானே. ஒருத்தர் ஒரு நிலைப்பாடாக இருக்கவேண்டும். இரண்டுவிதமாக நடந்துகொள்ளக் கூடாது… இங்கு இப்படி, அங்கு அப்படி என்று. இரட்டை நிலைப்பாடு கூடாது என்று சொல்வார்கள். ஆனால், பகவான் இரட்டை நிலைப்பாடு உடையவராகத்தான் இருக்கிறார். எப்படி என்று சொல்கிறேன். பகவானிடத்தில் அது குற்றமில்லை. அதுதான் அவருக்குப் பெருமை. ஒருத்தனை தண்டிக்க வேண்டும் - ஹிரண்யகசிபு போன்றவர்கள். மற்றொருத்தனை ஏற்றுக்கொள்ள வேண்டும் - விபீஷணன் போன்றவர்கள். இந்த இரண்டு இடங்களிலேயும் ஒரே நிலைப்பாட்டைத்தானே பகவான் பயன்படுத்த வேண்டும். ஏற்றுக்கொள்வதானால் இன்ன விதிமுறைகள், கைவிட்டு தண்டிப்பதானால் இன்ன விதிமுறைகள். ஆனால், இந்த இரண்டு இடத்தில் பகவான் இரண்டு நிலைப்பாடுகளைப் பயன்படுத்துகிறார். தண்டிக்கும்போது அவனது குற்றம் என்னவென்று பார்க்கிறார். குற்றம் மூவகைப்படலாம். உள்ளத்தால், பேச்சால், உடலால். ஒருத்தனை அடிக்கிறோம்… தப்பு. கண்டபடிக்குப் பேசுகிறோம்… தவறு. உளமாற கெட்டுப்போக வேண்டும் என்று நினைக்கிறோம்… பெருந்தவறு.

உள்ளத்தால் அபசாரப்படுவதுதான் இருக்கிறதிலேயே மோசம். கடுமையானது. கையால் அடித்தால் கூட, ‘ஏதோ கோபத்தில் செய்தேன். அடித்து விட்டேன்’ என்று கூறி விடலாம். ஆனால், பேசினால்… ‘பேச்சோடு சண்டை நிற்க வேண்டியதுதானே. ஏன் கை ஓங்கினாய்?’ என்று கை ஓங்குவதைத்தான் கடைசியாக நினைப்போம். இது உலக இயல்பு. ஆனால், ஆன்மிகத்தில் கை ஓங்குவது, அடிப்பது சிறு தவறு. வாக்கால் அபசாரப்படுவது இன்னும் குற்றம். மனத்தால் படுவது பெருங்குற்றம். ஹிரண்யகசிபுவை நரசிங்கப் பெருமான் அவன் நெஞ்சை கிழிப்பார். கை விரல்களை உள்ளே விட்டு அவனது மனத்தில், இதயத்தில் தேடித் தேடிப் பார்க்கிறார். ‘எங்கேயாவது ஒரு மூலையில் நம்மைப் பற்றிய ஒரு நல்ல எண்ணம் இருக்குமா? கைளால் அடித்து விட்டான், சண்டை போட்டாகி விட்டது, வாயால் கண்டபடிக்கு ஏசிவிட்டான். அவற்றையெல்லாம்கூட பொறுத்து விடுவேன். ‘உளம் தொட்டு’ என்பது பாசுரம். அவன் உள்ளத்தைத் தொட்டு அங்கும் நம்மைப் பற்றி தப்பாகத்தான் நினைத்திருக்கிறானா அல்லது ஏதாவது நல்ல எண்ணம் இருக்கிறதா’ என்று தேடிப்பார்த்தாராம்.

உள்ளத்திலேயும் அபசாரம்தான். உள்ளத்தாலும் குற்றம்தான் புரிந்தான் என்று தெரிந்த பிற்பாடுதான் கொல்கிறார். அதனால் தண்டனை கொடுக்கும்போது, ரொம்பவும் தேடிப்பார்த்து, உள்ளத்தாலேயும் குற்றம் புரிந்திருந்தால், மனம், மொழி, மெய் மூன்றாலும் குற்றம் செய்திருந்தால் தண்டிக்கலாம். இது ஒரு நிலைப்பாடு. இதேபோல, விபீஷணன் சரணம் என்று வந்தான். அவனை ஏற்க வேண்டியது. அப்போது என்ன செய்ய வேண்டும்? உள்ளத்தால், உடலால், மொழியால் மூன்றாலும் சரணாகதி பண்ணியிருக்க வேண்டும். அப்படி பகவான் எதிர்பார்ப்பதில்லை. அங்கு உளமார சரணாகதி பண்ணுகிறானா என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ‘நண்பன் என்று வேஷமிட்டுக்கொண்டு வந்தாலும் போதும். அவன் உள்ளத்தாலே நட்பு காட்ட வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. வாயால் நட்பு என்று சொல்லட்டுமே, கையை கூப்பட்டுமே ஏற்றுக்கொண்டு விடுகிறேன். பாவனை கூட போதும். நிஜமே வேண்டாம்’ என பகவான் நினைக்கிறார். ஆக, அந்த இடத்தில் வெறுமனே கீழே விழுந்து நமஸ்கரித்தாலோ, வாயாற சரணம் என்று சொன்னால் கூட ஏற்றுக்கொண்டு விடுவார். உளமாற சரணாகதி பண்ணினானா என்றெல்லாம் பார்ப்பதில்லை. நம்மில் எத்தனை பேர் உண்மையாக சரணாகதி பண்ணியிருக்கோம். ஒருத்தரும் இல்லை.

‘திருமாலி ருஞ்சோலை மலையென்றே னென்ன,
திருமால்வந் தென்னெஞ்சு நிறையப் புகுந்தான்’

என்பது நம்மாழ்வார் பாசுரம். ‘திருமாலிருஞ்சோலை மலை என்று ஏதோ வாய் வார்த்தையாகச் சொன்னேன். உடனே என் நெஞ்சுக்குள் வந்து அமர்ந்துவிட்டன். நான் என்ன என் நெஞ்சில் பட்டு, உள்ளத்தில் பட்டா திருமாலிருஞ்சோலை மலை என்று சொன்னேன். இல்லையே’ என்று ஆழ்வார் சொல்கிறார். அதனால் ஏற்றுக்கொள்ளும்போது, கை பற்றும்போது உளமாற நட்பு காட்டினானா, சரணம் என்று வந்தானா என்று பகவான் பார்ப்பதில்லை. ஆனால், கைவிடும்போது, தண்டிக்கும்போது மட்டும் மனம், மொழி, மெய் எல்லாவற்றினாலும் குற்றம் செய்திருக்கிறானா என்று பார்த்துதான் தண்டிக்கிறார். பகவானின் இந்த இரட்டை நிலைப்பாடு கூடுமா? இங்கிருப்பதுபோல்தானே அங்கிருக்க வேண்டும்? கைவிடுவதென்றாலும் முக்கரணங்களாலும் குற்றம்; கைப்பிடிப்பதானாலும் முக்கரணங்களாலும் சரணாகதி என்று இருந்திருக்க வேண்டும். அப்படிக் காணோம். நல்லவேளை, அவர் இரட்டை நிலைப்பாடோடு இருக்கிறார். அவர் மட்டும் நம்மிடத்திலும் முக்கரணங்களாலும் சரணாகதி என்று எதிர்ப்பார்த்துதான் கைபிடிப்பேன் என்று சொல்லியிருந்தால் நாம் எங்கு போவோம்? அவர் இரட்டை நிலைப்பாட்டோடே இருக்கட்டும்.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com