
"எங்கள் வீட்டில் பகவதி சேவை பூஜை செய்யப் போகிறோம். நீங்கள் வாருங்கள்" என்று எனது தோழி லலிதா அழைப்பு அனுப்பியிருந்தாள். ஆன்மீக விஷயங்களில், லலிதா மிகவும் ஈடுபாடு கொண்டவள். பகவதி சேவை பூஜைக்கு சென்றேன். சுமார் மூன்று மணி நேரங்கள் அருமையாக பூஜை நடைபெற்றது. அங்கே தெய்வீக சக்தி நிரம்பியிருந்ததை உணர்ந்தேன்.
பகவதி சேவை குறித்து லலிதாவிடம் கேட்கையில், அவள் கூறிய விபரங்கள்...
பொதுவாக கேரள மக்கள் பகவதி அம்மனை வணங்கி பூஜிப்பது வழக்கம். அதிலும் பாலக்காடு வாசிகளுக்கு பகவதி அம்மன் குலதெய்வமாகும். மணப்புள்ளிக்காவு பகவதி, பல்லசேனா பகவதி, மீன் குளத்திக் காவு பகவதி, புதுக்கோடு பகவதி என அநேக கோவில்கள் பாலக்காடு தாலுகாவில் அமைந்துள்ளன.
மலையாள மாதமாகிய கர்க்கடக மாதம் (ஆடி மாதம்) வெள்ளிக்கிழமை பகவதி சேவை செய்ய உகந்தது. கோவில் மற்றும் வீடுகளில் பகவதி சேவை பூஜையை செய்யலாம். நல்ல நட்சத்திரத்தன்று, வீடுகளில் செய்பவர்களும் உண்டு. பகவதி சேவை பூஜையைச் செய்ய தனிப்பட்ட வாத்தியார்கள்/குருமார்கள் உண்டு.
இப்பூஜையின் 'பததி', அதாவது முறைப்படி நடத்தும் வழியை இவர்கள் மட்டுமே அறிவார்கள். வேறு குருமார்களால் பகவதி சேவையை செய்ய இயலாது. செய்யவும் வரமாட்டார்கள். மேலும், இந்த பூஜையை மாலை நேரத்தில் தான் மேற்கொள்ள வேண்டும்.
பகவதி சேவை முன்னேற்பாடு
முதலில் இரண்டு விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, ஒன்றில் தேவியின் முகமும், மற்றொன்றில் கணபதியின் முகமும் வைக்கப்படும்.
அரிசிமாவு, மஞ்சள்பொடி, குங்குமம் ஆகியவைகளை உபயோகித்து 'பத்மம்' (தாமரை வடிவம்) கோலத்தை வாத்தியார் தான் வரைவார். தேவியின் பத்மம் பெரிதாகவும், கணபதியின் பத்மம் சிறியதாகவும் இருக்கும். அலங்கரிக்கப்பட்ட விளக்குகள் பத்மத்தின் நடுவே வைக்கப்படும்.
வாத்யார், தேவியின் விளக்கில், ஐந்து பஞ்சுத் திரிகளை ஐந்து முகங்களிலும், கணபதியின் விளக்கில் இரண்டு பஞ்சுத் திரிகளை இரு முகங்களிலும் போட்டு, எண்ணெய் விட்டு தயாராக வைப்பார்.
வாத்யார் மறுபடியும் ஸ்நானம் செய்து, பட்டு வஸ்திரமணிந்து வந்து ஸுக்த மந்திரங்களைக் கூறி இரண்டு விளக்குகளையும் ஏற்றி தேவியை ஆவாஹனம் செய்வார். தேவிக்கு நெய் பாயாசம் நிவேதனம் செய்யப்படும். நெய் பாயாசம் செய்பவர்களும் குளித்துவிட்டு சுத்தமாக இருப்பது முக்கியம்.
பகவதி சேவை பூஜை
பகவதி சேவை பூஜையை, வாத்யார் லலிதா ஸஹஸ்ரநாம ஸ்லோகத்தில் ஆரம்பித்து, லலிதா அஷ்டோத்ர சதநாமாவளி, லலிதா திரிசக்தி, துர்க ஸப்த ஸதி கூறி, குங்கும அர்ச்சனைகளை முறையாகச் செய்கையில், பூக்களால் அர்ச்சிப்பார். அர்ச்சனை செய்யும் விதத்தில், பூக்களை அழகான, நேர்த்தியான டிஸைனாக உருவாக்கி விடுவார்.
பிறகு ஒவ்வொரு கடவுளுக்குரிய ஸ்லோகங்களைக் கூறுகையில், நமஸ்காரம் செய்து-செய்து எழவேண்டும்.
வடை, தித்திப்பான பால், திரிமதுரம் போன்றவைகளை நிவேதனம் செய்தபின், பஞ்ச ஆரத்தி, கற்பூர ஆரத்தி காட்டியபிறகு, அந்த வீட்டில் யாருக்காக பூஜை செய்தாரோ, அவர்களின் கைகளில் பிரஸாதத்தை அளிப்பார்.
ஆரத்தி மாதிரி விளக்கொழியல் செய்தபின், வாத்யார் கைகளில் பூக்களை ஏந்தி, அங்கிருக்கும் அனைவருக்கும் மூன்று முறை திருஷ்டி சுற்றிப் போடுவார்.
சங்கு தீர்த்தத்தை தெளித்து பிரஸாதமாக தீர்த்தத்தை எல்லோர் கைகளிலும் விட்டு அருந்தக் கூறுவார்.
இறுதியில், வாத்யார் இரண்டு விளக்குகளையும் பத்மத்திலிருந்து சற்றே நகர்த்தி, பத்மப் பொடியை எடுத்து குடும்பத்தினரின் கரங்களில் கொடுப்பார். பின்னர், விளக்குகளின் திரிகளை ஒன்றாக்கி உள்ளே இழுத்து அணைத்துவிட்டு, ஒரு முகமாக மறுபடியும் ஏற்றி விடுவார்.
துர்க ஸப்த ஸதி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம். பாதுகாப்பு, வளர்ச்சி, முன்னேற்றம் என வேண்டியவை அனைத்தையும் அளிக்கக் கூடிய மந்திரம்.
நமோ தேவ்யை;
மகா தேவ்யை;
சிவாயை சததம் நம : !"
பகவதி சேவை பூஜைக்கு என்னை அழைத்ததோடு, அது குறித்து விபரமாக கூறிய சிநேகிதி லலிதாவிற்கு நன்றி தெரிவித்து, பகவதி அம்மனை மனதில் பதியவைத்து, மன நிறைவோடு வீடு திரும்பினேன்.