பகவான் நாம ஜபம் நமக்கருளும் உயர்ந்த உபகாரம்!

பகவான் நாம ஜபம் நமக்கருளும் உயர்ந்த உபகாரம்!
Published on

ண்டரிபுரத்தில் அருள்பாலிக்கும் பாண்டுரங்க பக்தர்களின் கதைகள் ஒவ்வொன்றும் பக்திப் பரவசத்தைத் தூண்டுவதாகவே அமைந்திருக்கும். அப்படிப்பட்ட பக்தர்களில் முக்கியமானவர் சாந்த் நாமதேவர் ஆவார்.  இவர்,  இறைவனின் திருநாமத்தைப் புகழ்ந்து பாடியும், புகழ்ந்து பேசியுமே மோட்சப் பிராப்தியை அடைந்துவிட முடியும் என உலகுக்கு உணர்த்தியவர்.

இவர், 'விட்டல விட்டல' என்று சதா சர்வ நேரமும் பாண்டுரங்கனின் திருநாமத்தையே ஜபித்த வண்ணம் பஜனைகள் செய்துகொண்டிருப்பதையே வாடிக்கையாகக் கொண்டவர். நாமதேவரின் மனைவி ராஜாய்க்கு தனது கணவரின் உயிர் மூச்சே விட்டலன் நாமம்தான் என்று நன்கு புரிந்து இருந்தது. அதனால் தனது கணவரை அவர் என்றைக்குமே தொந்தரவு செய்தது இல்லை. நேரம், காலம் பாராமல் எப்பொழுதும் ஆழ்ந்த பக்தியில் ஈடுபட்டிருக்கும் கணவரைப் பார்க்கும் பொழுதெல்லாம், ‘இவருக்கு எப்படித்தான் இப்படி ஒரு பொறுமையும் பக்தி சிந்தனையும் இருக்கிறதோ’ என்று வியந்து போற்றியவள்.

ஒரு நாள், வீட்டில்  தனது கணவனைக் காணாத ராஜாய்க்கு, ‘எங்கு சென்றிருப்பாரோ தெரியவில்லையே’ என்கிற ஒரு எண்ணம் எழுந்தது. பொதுவாக, கூட்டத்துடன் சேர்ந்து பஜனை செய்வது, பண்டரிபுரம் கோயிலில் இருக்கும் விட்டலனை தரிசிக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த அவர், எங்காவது  சென்றிருப்பார் என்கிற எண்ணம் அவரது மனைவிக்குத் தோன்றியது.

அன்றைய பொழுது கழிந்தது. இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் என்று நாட்கள்தான் நகர்ந்தனவே தவிர, வீட்டை விட்டுச் சென்ற கணவர் திரும்பி வரவே இல்லை. ‘எங்கு சென்றிருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? ஆகாரம் செய்தாரா இல்லையா’ போன்ற கேள்விகள் மனதில் எழ, எதுவுமே விளங்காமல் இருந்ததால், ராஜாயின் மனது தத்தளித்தது. எப்படி இருந்தாலும் ஊர் எல்லையை விட்டு எங்குமே வெளியில் சென்றிருக்க மாட்டார் என்கிற ஒரு திடமான எண்ணத்துடன், வீட்டில் இருந்த மாவை எடுத்து சில ரொட்டிகள் தயார் செய்து கொண்டு, தொட்டுக் கொள்வதற்கு கொஞ்சம் சர்க்கரை நெய்யை குழைத்து ஒரு தூக்கில் போட்டுக் கொண்டு, சாப்பிடுவதற்கு தோதாக ஒரு இலையையும் எடுத்து வைத்துக்கொண்டு கணவருக்கு கொடுக்கலாம் என்கிற எண்ணத்தில் அவரைப் பற்றி விசாரித்துக் கொண்டே, வனப்பகுதி போல் இருந்த ஊர் எல்லை வரை சென்றார்.

ஊர் எல்லைக் கோடியில் ஒரு பெரிய மரத்தின் கீழே அமர்ந்திருந்த நாமதேவர்,   தன்னை மறந்த நிலையில் விட்டலன் நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார். 'மூன்று நாட்கள் ஆகின்றன. ஆகாரம் கூட உண்ணாமல் இப்படி பகவானை நினைத்து பஜனை செய்து கொண்டிருக்கிறாரே. இவரை எப்படியாவது தன் நிலைக்குக் கொண்டு வந்து ரொட்டிகளைச் சாப்பிட வைக்க வேண்டும்' என்கிற எண்ணம் கொண்டார் மனைவி. எத்தனையோ முயன்றும் அவர் கண் விழித்துப் பார்க்கவும் இல்லை. ரொட்டிகளைச் சாப்பிடவும் இல்லை. ராஜாய்க்கு மிகவும் வேதனையாக இருந்தது. ஆனால், கொண்டு வந்த ரொட்டிகளைத் திருப்பி எடுத்துச் செல்லவும் மனதில்லை. அந்த  ரொட்டிகளை கொண்டு வந்த இலையின் மேல் வைத்துவிட்டு, அருகில் இருந்த மரத்திலிருந்து வேறு ஒரு இலையைப் பறித்து, அதன் மேல் கவிழ்த்து மூடி வைத்துவிட்டு தனது இருப்பிடம் திரும்பினார் மனைவி ராஜாய்.

ராஜாய் சென்ற சிறிது நேரத்தில் நாம தேவர் கண் விழித்தபொழுது, நாய் ஒன்று அவருக்கான ரொட்டிகளை வாயில் கவ்விக் கொண்டிருந்ததைக் கண்டார். நாம தேவர் கண் விழித்துப் பார்த்ததைக் கண்ட அந்த நாய், ரொட்டிகளைக் கவ்வியபடி ஓட்டம் எடுத்தது. நாம தேவருக்கு மனது மிகவும் வேதனையாகப் போய்விட்டது. ‘தான் கண் திறந்ததால்தானே நாய் பயந்து ஓடுகிறது. பயத்தில் ரொட்டிகளைச் சாப்பிடாமல் கீழே போட்டு விட்டுப் போய் விடுமோ? அதனால் அந்த நாய்க்கு உணவில்லாமல் போய்விடுமோ’ என்கிற எண்ணமும் கூடவே எழுந்தது.

"விட்டலா, ஓடாதே. என்னையும் ஓட வைக்காதே. என்னால் ஓடி வர முடியவில்லை.  புரிந்துகொள். ரொட்டிக்கு தொட்டுக்கொள்ள சர்க்கரை என்னிடம் உள்ளது. ஒன்றுமில்லாமல் வெறும் ரொட்டியைச் சாப்பிடாதே  விட்டலா. இரு… இதை வாங்கிக் கொள்" என்று கூறியபடி நாயை துரத்திக்கொண்டு சென்றார்  நாமதேவர். ஒருவழியாக நாயைத்  துரத்திப் பிடித்தார். அதன் கழுத்தை ஒரு கையால் அழுத்தியபடி, மற்றொரு கையால் ரொட்டியின் முன்புறமும் பின்புறமும் சர்க்கரைக் கலவையை எடுத்து நன்றாகத் தடவினார். 'இனி ஆனந்தமாகச் சாப்பிடு' என்று கூறியவண்ணம், கழுத்தில் வைத்திருந்த கையை மெதுவாக எடுத்தார். அவரிடமிருந்து விலகிய நாய்,  சற்று தொலைவில் போய் நின்றது. அங்கே நாயைக் காணவில்லை. பட்டு பீதாம்பரத்துடன் விட்டலன் இடுப்பில் கைகளை வைத்தபடி நின்று கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான்.

“பண்டரிநாதா… பாண்டுரங்கா… விட்டலா… நீயா நாயாக வந்தாய்?'’ என்று கூறி தொழுதார்.

‘'நாமதேவா, நீ எத்தனை சிறந்த பக்தனாக இருந்தால் ரொட்டிகளை எடுக்க வந்த நாயைக் கூட உனது விட்டலன்தான் என எண்ணி கண்களைத் திறந்து பார்த்தாய். காணும் வஸ்து எல்லாமே விட்டலன் என்கிற மனோபாவம் உனக்கு உண்டாகி விட்டது. தொட்டுக்கொள்ள ஒன்றும் இல்லாமல் ரொட்டிகளை நான் தின்றுவிடப் போகிறேனே என்று எத்தனை அக்கறையாய் எனக்காக சர்க்கரைக் குழைவை எடுத்துக்கொண்டு ஓடி வந்தாய்? உனது பக்தி சிறந்த பக்தி நாம தேவா. உன் பக்தியை நான் மெச்சுகிறேன்” என்று கூறி மறைந்தான் விட்டலன்.

ஆம்… பக்தர்களின் உண்மையான பக்திக்கு பகவான் மனமிரங்கி, தானே நேராக வந்து அருள் புரிவான் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியுமா என்ன? இந்தக் கலியுகத்தில் பகவான் நாமத்தைக் கூறிக்கொண்டிருப்பது ஒன்று மட்டுமே நமது மோட்ச பிராப்திக்கு வழிகாட்டும் என்பதை தெரியாமலா ஆன்றோர்கள் கூறியிருக்கிறார்கள்?

சரி… பகவான் நாமத்தைக் கூறிக்கொண்டிருந்தால் மட்டுமே மோட்ச பிராப்தி கிடைத்துவிடுமா? இதற்கு, ஸ்ரீ  உ.வே.முக்கூர் லக்ஷ்மி நரஸிம்ஹாச்சார்யார் என்ன கூறியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம். ‘ஒருவர் கூறும் நாம ஜபம் மட்டுமே மோட்சத்துக்கு வழி ஆகாது. பகவான் நாமத்தைக் கூறக் கூற, பகவானிடம் பக்தி அதீதமாகும். அவ்வாறு பக்தி அதிகம் ஆகும்பொழுது, பக்தன், ‘இந்த ஆன்மா தன்னுடையது அல்ல. பகவானுடையது’ என்பதைப் புரிந்து கொண்டு, தன்னை முழுவதுமாக பகவானின் திருப்பாதத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்வான். இதுவே பகவான் நாமம் நமக்குச் செய்யும் மிக உயர்ந்த உபகாரமாகும்" என்று கூறுகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com