ஸ்ரீ வைணவத்தில் தலைசிறந்த ஞானி, மகாமேதை, மாமுனிவர் ஸ்ரீ ராமானுஜர். இவர் பாஷ்யகாரர், உடையவர், எதிராசர், எம்பெருமானார் என பல பெயர்களில் புகழப்படுகிறார். இவர் பரமபதம் செல்கையில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் கடைபிடிக்க வேண்டியவை பற்றி விரிவாகக் கூறியுள்ளார். ஸ்ரீ வைணவத்துக்கு எதிரான ஆறு எதிரிகளையும் வென்று வரும் பக்தன், தாம் கூறும் பத்து கட்டளைகளையும் பின்பற்றினால் பரமபதம் அடைவது உறுதி என்கிறார் ஸ்ரீ ராமானுஜர்.
ஸ்ரீ ராமானுஜர் கூறும் ஆறு எதிரிகள்: ஸ்ரீமந் நாராயணனே சரணம் என்று இருக்கும் பக்தனுக்கு ஆறு எதிரிகள் உண்டு என்றும், அவற்றிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் உபதேசிக்கிறார். அவை: ஆச்ரயணம், ச்ரவணம், அனுபவம், ஸ்வரூபம், பரத்வம், ப்ராப்தி என்பவையாகும்.
ஆச்ரயணம்: இது முதல் எதிரியாகும். ஆச்ரயணம் என்றால் அகங்காரம், மமகாரம் கொள்ளுதல், பகவத் சேவைக்கு பலன் வேண்டல், பிராட்டியை மட்டமாக எண்ணுதல் ஆகியனவாகும்.
ச்ரவணம்: இது இரண்டாவது எதிரியாகும். ச்ரவண விரோதம் என்றால் பிற தெய்வங்களின் கதைகளைக் கேட்பது ஆகும். அது கூடாது.
அனுபவம்: ஸ்ரீமந் நாராயணனுக்கு பத்தியுடன் சமர்ப்பிக்க வேண்டிய உயர்ந்த பொருட்களை தானே பயன்படுத்திக்கொள்ளும் செயலையே, ‘அனுபவ எதிரி’ என்று மூன்றாவதாகக் கூறுகிறார்.
ஸ்வரூபம்: ஸ்ரீமந் நாராயணனுக்கே தானும் தன் குலமும் என்றென்றும் அடிமை என்ற நற்சிந்தனை இன்றி, தான் சுதந்திர மனிதன் எனும் மாயையில் சிக்கி வழி தவறிப்போகும் மனப்பான்மை அடுத்த எதிரி ஆகும்.
பரத்வம்: ஸ்ரீமந் நாராயணனோடு பிற தெய்வங்களை இணைத்து வைத்து முதன்மையாக எண்ணும் எண்ணமே, ‘பரத்வ விரோதம்’ ஆகும்.
ப்ராப்தி: ஸ்ரீமந் நாராயணன் என்று நினைக்காத, பேசாத, எழுதாத, கேவலர்கள் பாகவத அபச்சாரம் செய்பவர்களோடு உறவு, நட்பு கொள்வது ப்ரப்தி விரோதி என்னும் ஆறாவது எதிரியாகும்.
மேற்சொன்ன ஆறு விரோதிகளையும் வென்று வரும் பக்தன், பக்தியோடு கீழ்க்காணும் பத்து கட்டளைகளையும் ஒழுங்காகப் பின்பற்றினால் பரமபதம் அடைவது உறுதி என்கிறார் ஸ்ரீராமானுஜர்.
பத்து கட்டளைகள்:
முதல் கட்டளை: ஸ்ரீமந் நாராயணனை பூரண சரணாகதி அடைந்த பிறகு எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது. இறைவனை உறுதியாக நம்ப வேண்டும். எத்தனை துன்பம் வந்தாலும் முழு நம்பிக்கை வேண்டும்.
இரண்டாவது கட்டளை: பூரண சரணாகதி அடைந்த பிறகு வரும் நன்மை, தீமை, இன்ப, துன்பங்கள் எல்லாம் முன்வினப் பயனே என்று எண்ண வேண்டும்.
மூன்றாம் கட்டளை: மோட்சத்தை அடைவதற்கு சாதனம் என்று வேறு எந்தச் செயலையும் செய்யக் கூடாது.
நான்காம் கட்டளை: ஸ்ரீ பாஷ்யத்தை அர்த்தத்துடன் முதலில் முறையாகக் கற்க வேண்டும். பிறகு கற்றதன்படி நிற்க வேண்டும். மேலும், தகுதியுள்ள ஸ்ரீ வைணவ பெருமக்களுக்குக் கற்றுத் தர வேண்டும்.
ஐந்தாம் கட்டளை: நான்காவது கட்டளையை செய்ய முடியாவிடின், நம்மாழ்வாரின் திருவாய்மொழியை பொருளுடன் கற்க வேண்டும். பிறருக்குக் கற்றுத் தரவும் வேண்டும்.
ஆறாவது கட்டளை: மேற்கண்ட நான்கு அல்லது ஐந்தாவது கட்டளையை செய்ய முடியாவிட்டால் குறைந்த பட்சம் ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய புனிதமான நூல்களைக் கற்றல் மற்றும் சொற்பொழிவு செய்தல் வேண்டும்.
ஏழாவது கட்டளை: 108 ஸ்ரீவைணவ திவ்ய தேசங்களுக்கு யாத்திரை செல்லுதல் மற்ற வைணவத் திருத்தலங்களுக்கு யாத்திரை செய்தல், அங்கெல்லாம் இறைப்பணி ஆற்றுதல், வைணவ அடியார்களுக்கு சேவை செய்தல் வேண்டும்.
எட்டாவது கட்டளை: ஸ்ரீரங்கம், திருமலை திருப்பதி, திருக்காஞ்சிபுரம், திருநாராயணபுரம் ஆகிய ஏதாவதொரு திருத்தலத்தில் ஒரு குடிசையையாவது ஏற்படுத்தி, தினமும் அர்ச்சாவதார மூர்த்தியைக் கண்குளிர தரிசிக்க வேண்டும். அல்லது 108 திவ்ய தேசங்களில் ஏதாவது ஓரிடத்தில் தங்கி வாழ வேண்டும்.
ஒன்பதாவது கட்டளை: எட்டாவது கட்டளையை செய்ய முடியாவிட்டால் தான் வாழும் இடத்தில் இருந்துகொண்டே பகவான் மீதும் ஆசாரியன் மீதும் எல்லாப் பாரங்களையும் போட்டுவிட்டு எப்போதும் அவர்களிருவரையும் வணங்கி வாழ வேண்டும்.
பத்தாவது கட்டளை: அனைத்து வைணவ லட்சணங்களும் கைக்கொண்டு அகங்காரம், மமகாரம் இன்றி அனைத்து உயிர்களும் அன்புடன் வாழக் கருணைக்கொண்டு உதாரண புருஷனாக வைணவனாக வாழ வேண்டும்!