தாமிரபரணிக் கரையில் பிறப்பு! கங்கைக் கரையில் ஸித்தி!

ஆன்மிகம்!
தாமிரபரணிக் கரையில் பிறப்பு! கங்கைக் கரையில் ஸித்தி!
Updated on

17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருந்தமிழ்ப் புலவர் ஸ்ரீகுமர குருபர ஸ்வாமிகள். திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரி அம்மையாருக்கும் மகனாய், திருச்செந்தூர் செந்தில் வேலவன் அருளால் பிறந்தவர் ஆவார்.

5 வயது ஆகியும் குழந்தைக்குப் பேச்சுத்திறன் இல்லாததைக் கண்ட பெற்றோர், செந்திலாண்டவனிடமே வேண்ட, பேசும் திறனை குமர குருபரர் அடைந்தார்.

முருகர் மீது ‘கந்தர் கலிவெண்பா’, ‘கயிலைக் கலம்பகம்’ போன்ற நூல்களை இயற்றிய பின் மதுரை மாநகரம் சென்றார். மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, ‘மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்’ இயற்றி காசி சென்றடைந்தார்.

காசி மாநகருக்கு இவர் சென்ற சமயம், அங்கே சிவன் கோயில்; அதன் சம்பிரதாயம் மற்றும் இந்து மதம் ஆகியவைகள் முகலாயர்களின் அடக்கு முறையால் மிகவும் ஷீணமடைந்திருந்தது. இதை மாற்ற எண்ணிய குமர குருபரர், முகலாய மன்னனிடம் பேசி சைவ மதத்தை மீட்க விரும்பினார். ஆனால், இந்துஸ்தானி மொழி தெரியாத காரணம் வருந்தியவர், சரஸ்வதி தேவியை வணங்கி ‘சகல கலா வல்லி மாலை’ என்கிற பாடல் தொகுப்பைப் பாட, தேவியின் அருள் கிடைத்து, வடமொழி பேசும் திறமையைப் பெற்றார்.

சுல்தான் பாதுஷாவின் இறுமாப்பை அடக்க, தனது சித்தாற்றலால், ஒரு சிங்கத்தை வசியம் செய்து அதன் மீதமர்ந்து, அரசவை சென்றார். வடமொழியில், தனது விருப்பத்தை எடுத்துக்கூற, சுல்தான் பாதுஷா, இவர் ஒரு சித்த புருஷரென எண்ணி வணங்கினார். பின்னர் குமர குருபரர் விரும்பியவாறே சிவன் கோயில் மடம் கட்ட அனுமதி அனுமதி அளித்தான்.

பல வருடங்கள் அங்கே தங்கியவர் சைவ சமயத்திற்காக பாடுபட்டு அநேக சேவைகள் செய்தார்.

காசி குமார சுவாமி மடத்தில்,  முகமதியரால் மறைவாக வைக்கப்பட்டிருந்த கேதார லிங்கத்தை வெளிக் கொணர்ந்து, கோயில் கட்டி பூஜை செய்தார்.

இவர் சைவநெறியை மிகவும் போற்றிய தருமபுரம் ஆதீனத்துடன் தொடர்பு கொண்டவர். திருப்பனந்தாழ் என்கிற இடத்திலும் காசி மடம் இருக்கிறது.

காசிக் கலம்பகம்; சிதம்பர மும்மணிக் கோவை; நீதிநெறி விளக்கம், குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், திருவாரூர் நான்மணி மாலை போன்ற பலவகையான நூல்களை இயற்றியுள்ளார்.

தாமிரபரணி நதிக்கரையில் 1625 ஆம் ஆண்டு ஜனித்து, 1688 இல் கங்கை நதிக்கரையில் வைகாசி மாதம் தேய்பிறை கிருஷ்ண பட்ச திரிதியை அன்று சமாதி அடைந்தார். இவ்வருடம் 06-06-2023 அன்று நினைவு கூறப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது.

இன்றைய நாளில் அநேகர் குமரகுருபரருக்கு குருபூஜை செய்வதுண்டு.

இந்தியத் தபால் துறை, இவரின் நினைவாக ஜூன் 27, 2010 அன்று தபால் தலையை வெளியிட்டது பெருமைக்குரிய விஷயமாகும்.

சமாதி அடைந்து இறைவனடி சேர்ந்த மகான் குமர குருபரரை நாமும் குருபூஜை தினம் போற்றி வணங்கி அருள் பெறுவோம்.

உபரித் தகவல்:

பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க, குமரகுருபரருக்கு தேவையான கலைகளை அருளிய சரஸ்வதி தேவியின் மீது, அவர் பாடிய சகலகலாவல்லி மாலையின் பத்து பாடல்களையும் பாடி, சரஸ்வதி தேவியை மனதார வழிபட, அன்னையின் அருள் கிடைக்குமென்பது நம்பிக்கை.

logo
Kalki Online
kalkionline.com