
நெல்லை மாவட்டத்தில் பிரம்மதேசம் என்ற ஊரில் புகழ்பெற்ற சிவன் கோவில் (Brahmadesam Kailasanathar Temple) உள்ளது. இந்தக் கோவில் ராஜராஜ சோழன் என்ற மன்னரால் கட்டப்பட்ட கலைநயம் மிக்க கோவிலாகும். கட்டிடக்கலைக்கு சிறந்து விளங்குகிறது. முதன் முதலில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டு பின்னர் விஜயநகர பேரரசர்களால் விரிவுபடுத்தப்பட்டது. இந்த கோவில் தேவார பாடல் பெற்ற ஸ்தலமாகும். மூன்று கோபுரங்களும் ஏழு விமானங்களும் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது.
ராஜ கோபுரத்தின் நிழல் எதிரில் உள்ள தெப்பக்குளத்தில் விழும்படி கட்டப்பட்டுள்ளது சிறப்பானதாகும். சூரிய ஒளி சிவன் மீது படுமாறு அமையப்பெற்றுள்ளது சிறப்பு.
இந்த கோவிலில் வழிபடுவது காசிக்கு சென்று வழிபடுவதற்கு சமமாகும். திருநெல்வேலியில் இருந்து 45 கிலோமீட்டர் அம்பாசமுத்திரத்தில் இருந்து நாலு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சிவன் பெயர் கைலாசநாதர். அம்பாள் பெயர் பெரிய நாயகி அம்மன்.
ஒரு சமயம் பிரம்மகத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்ட பிரம்மனின் பேரன் ரோமச மகரிஷி என்பவர் இங்கு வந்து இலந்தை மரத்தடியில் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை பூஜை செய்து அதன் மூலம் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதாக வரலாறு. இதனை அகஸ்தியர் ரோமச மகரிஷிக்கு அறிவுரை கூறி இங்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த இடம் பிரம்மதேசம் என அழைக்கப்படுகிறது.
தஞ்சை ஆண்ட ராஜராஜ சோழன் பாண்டியநாட்டின் மீது போர் தொடுப்பதற்கு முன்பாக இங்குள்ள ஆலயத்திற்கு வந்து சிவன் அம்மனை வணங்கி பூஜை செய்து அதன் பின்னர் போரில் வெற்றி பெற்றதாக கல்வெட்டு உள்ளது. அதனால் மன்னர் ராஜ ராஜ சோழன் இந்த ஊரை அந்தணர்களுக்கு காணிக்கையாக வழங்கியதாகவும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த ஊர் ஆதி காலத்தில் சதுர்வேதிமங்கலம் அல்லது பிரம்மதாயம் எனப்பட்டது. பின்னர் பிரமாதாயம் என்பது மருவி பிரம்மதேசம் என அழைக்கப்பட்டது
கோவில் உள்ளே ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி சிலை நம்மை வரவேற்கிறது. மரத்தினால் செய்யப்பட்ட மேற்கூரை வேலைப்பாடுகளுடன் அருமையாக உள்ளது. பிரமிக்க வைக்கும் வகையில் இந்த மேற்கூரை அமைந்துள்ளது. நடராஜர் சன்னதிக்கு மார்கழி மாதம் புனுகு பூஜை சிறப்பாக நடைபெறும். கருவறையில் கைலாசநாதர் பெரியநாயகி அம்பாள் வீற்றி இருக்கிறார்கள். இங்குள்ள கடனா நதி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி கைலாசநாதரை சுற்றி வலம் வருவதால் இதில் நீராடி சிவனை வழிபட்டால் காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும்.
இங்குள்ள கங்காள நாதரை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. அயனீஸ்வரம் என்பது வரலாற்றுப் பெயர் ஆகும். தக்ஷன் நடத்தும் யாகத்தில் சிவன் பிரம்மாவிற்கு அழைப்பு அனுப்பாமல் இருந்தும் அவர்கள் கலந்து கொண்ட பாவத்தை போக்குவதற்காக இங்கு உள்ள தீர்த்த குளத்தில் நீராடி தங்களது பாவத்தை போக்கியதாக புராணம் கூறுகிறது. எனவே இங்குள்ள குளத்தை பிரம்ம தீர்த்த குளம் என்று அழைக்கின்றனர்.
இக்கோவில் ஆதி கைலாயம் எனவும் போற்றப்படுகிறது. தல வருசம் இலந்த மரம் ஆகும். இந்த மரத்தின் கீழ் சிவன் சுயம்புவாக காட்சி அளித்ததால் சிவனுக்கு இலந்தையடிநாதர் என்ற தனி சன்னதி உள்ளது. ராஜராஜ சோழன் போரில் தனது 4000 வீரர்களை இந்த இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தார். அதன் நினைவாக நாலாயிரத் அம்மன் என்ற கோவில் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரம்மதேசம் கோவிலுக்கு வந்து பிரம்மஹத்தி தோஷம் பித்ரு தோஷம் நீங்க பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.
பிரம்மஹத்தி தோஷம் பித்ரு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் அவர்கள் பிரச்சனை தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.