பிரம்மாண்ட போஜேஸ்வரர்!

மூலவர்
மூலவர்
Published on

த்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது போஜ்பூர். இப்பகுதியை ஆண்டு வந்த மன்னன் போஜராஜன் மிகவும் பிரபலமாகத் திகழ்ந்தான். இவன் ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டு விளங்கினான். அடிக்கடி அறிஞர்களை கூட்டி வைத்து விவாதிப்பான். இம்மன்னன் 104 நூல்களை எழுதியுள்ளான். அதோடு, 104 கோயில்களையும் கட்டியுள்ளான். அவற்றில் ஒன்றுதான் போஜ்பூர் ஸ்ரீ போஜேஸ்வரர் திருக்கோயில்.

11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் ஏனோ முடிக்கப்படவில்லை. இக்கோயில் சார்ந்த கல்வெட்டுகளும் ஏதும் இல்லை. ஆனால், இதே பாணியில் போஜ்பூரில் ஒரு சமணர் கோயில் உள்ளது. அது அச்சு அசலாக இந்தக் கோயில் பாணியிலேயே அமைந்துள்ளது. அந்தக் கோயிலுக்கான கல்வெட்டு அங்கு உள்ளது. அதுதான் இப்போது இந்தக் கோயிலுக்கான ஆதாரமாகவும் திகழ்கிறது. மேற்கு திசை நோக்கி அமைந்திருக்கும் இந்த போஜேஸ்வரர் திருக்கோயில் பிரபலமாகத் திகழ்வதற்கான காரணத்தைக் காண்போம்.

கோயில் வெளித் தோற்றம்
கோயில் வெளித் தோற்றம்BERNARD GAGNON

கேட்பாரற்றுக் கிடந்த இந்தக் கோயிலை 1951ல் மத்திய அரசு தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தது. ‘பேத்வா’ நதிக்கரையில் அமைந்த இந்த முடிக்கப்படாத கோயிலை அவர்கள் சுத்தம் செய்து பராமரித்தார்கள். பேத்வா நதிக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது, இந்த நதியில்தான் குந்தி தேவி தனது மகன் கர்ணனை தண்ணீரில் விட்டதாகக் கூறப்படுகிறது. 1990ல் தொல்லியல் துறை, உடைந்திருந்த இக்கோயிலில் வாசற்படிகளைக் பழுதுபார்த்தது. சிதிலமடைந்திருந்த வடமேற்கு மூலையையும் சரிசெய்தது. கோயிலுக்கு முன்பு மேற்கூரை கிடையாது. அதனையும் நிறைவேற்றியது. ஆனால், கோபுரம் எதுவும் கட்டவில்லை.

கோயிலுக்கு சற்று முன்னால், தாழி மற்றும் தூண்களுடன் கூடிய இரு அலங்கார சிறு மண்டபங்கள் உள்ளன. அதனைக் கடந்து கோயிலுக்குள் சென்றால், பெரிய கோட்டையின் வாயில் எப்படி இருக்குமோ அப்படியொரு பிரம்மாண்ட வாசல். முன்பக்க சுவர்களில் குபேரன், கங்கை, அப்சரஸ் ஆகியோரின் சிற்பங்களைக் காணலாம். கோயிலின் வெளிப்புற பக்கவாட்டு சுவர்களில் சிற்பங்கள் எதுவும் காணப்படவில்லை.

கருவறை விதானம்
கருவறை விதானம்

சுமார் 25 படிகள் ஏறினால் கோயிலின் முன் வாசலை அடையலாம். அதையும் தாண்டி உள்ளே சென்றால் கர்ப்பக்கிரகத்துடன் இணைந்த மிக நீண்ட மண்டபம். அதன் பக்கவாட்டில் இருபுறமும் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பால்கனிகள். அதன் உள்ளே நான்கு பக்க மூலைகளிலும் சிவ-பார்வதி, பிரம்மா-சரஸ்வதி, ராமர்-சீதை, விஷ்ணு-லக்ஷ்மி என தம்பதி சமேத இறை மூர்த்தங்களை தரிசிக்கலாம்.

கர்ப்பக்கிரகத்துக்கு முன் பிரம்மாண்டமான நான்கு தூண்கள் உள்ளன. கர்ப்பக்கிரகத்தின் அருகே இரண்டு பிரம்மாண்ட தந்தங்கள் நிறுத்தி வைத்துள்ளது போல் இருபுறமும் வரவேறுவு வளைவு தூண்கள் உள்ளன. கருவறையின் உள்ளே உயர்த்தப்பட்ட மேடையில் மூலவர் சிவபெருமானை தரிசிக்கலாம். 115 அடி நீளம், 82 அடி அகலம், 13 அடி உயரம் கொண்ட அடியோனி பீடம். அதன் மேல் இருபத்தி ஒன்றரை அடி சதுர வடிவில் அமைந்த பீடம். அதற்கு மேல் ஏழரை அடி உயரத்தில 18 அடி சுற்றளவில் சலவைக் கல்லால் ஆன சிவலிங்கத்தை தரிசிக்கலாம்.

இதனால்தான் இந்த போஜேஸ்வரரை, தஞ்சை பெரிய கோயிலில் அருளும் சிவபெருமானை விட அதிக உயரம் கொண்டவர் எனப் போற்றுகின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் புஷ்பங்கள், இனிப்புகளை மூலவரின் அடியில் வைத்துதான் பிரார்த்தனை செய்ய வேண்டும். சிறப்பு அபிஷேகமும் உண்டு. மூலவருக்கு மேலே வட்ட வடிவமான கூரை மற்றும் சுவர்களில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. இவை தவிர, கோயிலுக்கு வெளியே ஏராளமான சிற்பங்கள் பொருத்தப்படாமல் கிடக்கின்றன. தற்போது அவை முழுவதும் சேகரிக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

கோயில் சிற்பங்கள்
கோயில் சிற்பங்கள்

ந்தக் கோயில் சார்ந்து பல தகவல்கள் உள்ளன. கோயிலுக்கு வெளியே பின்புறம் கோபுரம் எழுப்புவதற்கும் அதற்குத் தேவையான பொருட்களை ஏற்றவும் வசதியாய் ஒரு சரிவு மேடை அமைந்துள்ளது. கோயில் மேல் தளம் எழுப்பப்பட்டபோது அது சில தவறான கணக்குகளால் கீழே நழுவி விழுந்திருக்கலாம். அதனால் வேலை நிறுத்தப்பட்டிருக்கலாம் என்பது ஒரு கணிப்பு. இன்னும் சிலர், இது நீத்தார் நினைவிடம் என்றும் கூறுகிறார்கள். போஜராஜனின் தந்தை மற்றும் மாமா ஆகியோர் யுத்தத்தில் எதிர்பாராமல் இறந்து விடுகின்றனர். அவர்கள் முக்தி அடைய வேண்டும் என எண்ணி எழுப்பப்பட்ட கோயில் என்றும், இத்தகைய கோயில்கள் இப்படித்தான் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

எது எப்படியோ, கோயில் அதன் பிரம்மாண்டம் மற்றும் புகழின் காரணமாக மிகவும் பிரபலமாக உள்ளது. இதற்காகவே மக்கள் பலரும் இந்தக் கோயிலுக்கு வருகை தருகின்றனர். இந்தக் கோயிலில் சிவராத்திரி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அந்தச் சமயம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலில் கூடுகின்றனர்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com