பிருந்தாவனமும் ரங்காஜி மந்திரும்!

பிருந்தாவனமும் ரங்காஜி மந்திரும்!

த்தரப்பிரதேசத்தில் இருக்கும் மதுராவுக்கு வடக்கே சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது பிருந்தாவனம். பிருந்தாவனத்தை வடக்கத்தியர்கள் ‘வ்ருந்தாவன்’ என்கிறார்கள். ‘பிருந்தா’ என்றால் துளசி என்று பொருள். புனிதமான துளசிச் செடிகள் அடர்ந்து வளர்ந்த பன்னிரண்டு காடுகளில்தான் ஆநிரைகளைக் கண்ணன் மேய்த்து வந்தான். பிறந்தது மதுரா என்றாலும், குட்டிக் கண்ணன் ஓடி ஆடி விளையாடித் திரிந்தது பிருந்தாவனத்தில்தான். கிருஷ்ண லீலைகள் பலவும் நடந்த திருத்தலம் இதுதான். கண்ணனின் குழல் ஓசை மாந்தர்களை மட்டும் அல்லாமல் பறவைகள், பசுக் கூட்டங்களையும் மயக்கிய மாயலோகமும் இதுதான்! கிருஷ்ண ஜயந்தி அன்று பிருந்தாவனம் கோலாகலமாக் காட்சி அளிக்குமாம்.

கண்ணனின் குழந்தைப் பருவம் மற்றும் இளமைக்கால லீலைகள் ஆகியவற்றோடு பின்னிப் பிணைந்த இடத்தை, ’விரஜ பூமி’ என்கிறார்கள். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பகுதியும், ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் சிறிய பரப்பளவிலும் இந்த விரஜ பூமி இருக்கிறது. விரஜ பூமி முழுவதையும் தரிசிக்க முடியாதவர்கள் பிருந்தாவனத்தை மட்டுமே வலம் வருவார்களாம். கிருஷ்ணரின் அவதார தலமான மதுரா, ராதையின் அவதார ஸ்தலமாகிய பர்ஸானா ஆகியன இருப்பது விரஜ பூமியில்தான். யமுனை ஆற்றிலே நீராடிய பிறகு பிருந்தாவன ஆலயங்களைச் சேவிப்பது சிறப்பு.

மதுரா, பிருந்தாவனம் மற்றும் கோவர்த்தனம் ஆகிய மூன்றையும் சேர்த்து. ’மதுரா’ என்ற ஒரே திவ்ய தேசமாக அறியப்படுகிறது. பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்ககையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய ஆழ்வார்கள் மொத்தம் 50 பாசுரங்கள் பாடிய வைணவ திவ்ய தேசம், ’வடமதுரை’ எனப்படும் மதுரா ஆகும். ராதா ரமண் மந்திர், பாங்கே விஹாரி மந்திர், கேசி காட், கோவிந்த்ஜி மந்திர் எனப் பல ஆலயங்கள் இருப்பதால், ‘திவ்ய தேசம்’ என்று சொன்னால் அங்குள்ள உள்ளூர்வாசிகளுக்கு அதிகமாகத் தெரிவது இல்லை. வைணவ திவ்ய தேசம் என்ற வகையில், பிருந்தாவனத்தில் இருக்கும் கோயிலை, ‘ரங்காஜி மந்திர்’ என்றால்தான் எல்லோருக்கும் தெரிகிறது. எனவே, உள்ளூர் மக்கள் பேச்சிலேயே நீங்களும் விசாரித்தால்தான் இந்த வைணவ திவ்ய தேசத்தை எளிதாக அடையாளம் கண்டு தரிசிக்க முடியும். ஒரு வழிகாட்டியை அமர்த்திக்கொண்டால் அவருக்கு ஐம்பது ரூபாய் கட்டணம்.

னி, ’ரங்காஜி மந்திர்’ ஆலயத்துக்குள்ளே நுழைவோம். பொதுவாக, தென்னிந்தியக் கோயில்களைப் போல பிரம்மாண்டமான கோபுரங்கள், பிராகாரங்கள், சுற்றுச்சுவர், தெப்பக்குளம் போன்றவற்றை வட இந்தியக் கோயில்களில் பார்க்க முடியாது. ஆனால், ரங்காஜி மந்திர் இதற்கு விதிவிலக்கு. அச்சு அசலாகத் தமிழ்நாட்டில் இருக்கும் வைணவ ஆலயத்தின் முகப்புத் தோற்றம் நம்மை அருளோடு அழைக்கிறது. வெளிப்புறத் தோற்றம் மட்டுமல்ல, ஆலயத்தின் உள்ளே நிலவும் தமிழ்நாட்டு பாணி, நம்மை பக்தி கலந்த வியப்பில் ஆழ்த்துகிறது. சிகரம் வைத்தாற்போல தமிழ்நாட்டு அர்ச்சகர்கள்தான் இங்கேயும் கைங்கரியம் செய்கிறார்கள்.

ஆழ்வார்களால் பாடப்பெற்ற கோயில்கள் இப்போது இல்லை. இப்போது இருக்கும் இந்த ரங்காஜி மந்திரைக் கட்டிய ஆண்டு 1845. கட்டுமானச் செலவு 45 லட்சம் ரூபாயாம். கட்டி முடிக்க ஆறு ஆண்டுகள் ஆயினவாம். கட்டியவர் ல‌ஷ்மி சந்த் ஜெயின் என்று வழிகாட்டி சொன்னார். பக்கத்தில் வந்த இன்னொரு வழிகாட்டி, கட்டியவர் பெயர் சேட் கோவிந்த் தாஸ் என்கிறார்.

ழு அடுக்குகள் கொண்ட ராஜகோபுரம் வெண்மை நிறத்தில் பிரமிப்பூட்டுகிறது. தூண்களில் புராண நிகழ்வுகள் பலவும் செதுக்கப்பட்டு உள்ளன. கோயிலுக்குள்ளேயே துளசிச் செடிகள் நிறைய இருக்கின்றன. வேலி அமைத்து அவற்றைப் பராமரிக்கிறார்கள். ஆதிசேஷப் படுக்கையில் அனந்த சயனம் கொண்டிருக்கும் அரங்கனைக் காணக் கண் கோடி வேண்டும். உடன் பூதேவி, ஸ்ரீதேவி தாயர்களும் தரிசனம் தருகிறார்கள்.

பிராகாரத்தின் வலப்பக்கம் சொர்க்க வாசல் கதவு இருக்கிறது. ஸ்ரீ ரங்கமன்னார், ஆண்டாள், கருடன் ஆகியோர் மூலவர்களாக இருந்து அனுக்கிரஹம் செய்யும் சன்னிதி முன் மெய்மறந்து நிற்கலாம். பெரிய தெப்பக்குளம் கோயில் வளாகத்திலேயே இருக்கிறது. ஜூலை மாத பௌர்ணமியில் கஜேந்திர மோட்ச விழா இங்கே மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறதாம். கோயில் வளாகத்திலேயே திருப்பதி வெங்கடாசலபதி உருவில் சீனுவாசன் சன்னிதி தனியே இருக்கிறது.

பிருந்தாவனத்தில் தங்கும் வசதிகள் மிக அதிகமாக இருக்கின்றன. அவரவர் வசதிக்கு ஏற்ப, சொற்பக் கட்டணத்தில் இருந்து 1,000 ரூபாய் வரை அறைகள் வாடகைக்குக் கிடைக்கின்றன. வழியில் இருக்கும் பிர்லா மந்திரை நிர்வகிப்பவர்களே மிகத் தூய்மையாகத் தங்கும் விடுதிகளையும் பராமரிக்கிறார்கள். இவை தவிர, பல மடங்களும், குறைந்த கட்டணம் வசூலித்துக்கொண்டு தங்கும் வசதியை அளிக்கின்றன.

ஆசை தீர அரங்கனை சேவித்து ஆலயத்துக்கு வெளியே வரும்போது கண்ணனின் குழல் ஓசை காதினில் ஒலிப்பது போல ஓர் உணர்வு நம்மை ஆட்கொள்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com