சனிக்கிழமைகளில் அனுமனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபாடு!

சனிக்கிழமைகளில் அனுமனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபாடு!
Published on

ஞ்சனேயரை வழிபட ஒவ்வொரு சனிக்கிழமை தினமும் மிக உகந்த நாளாகும். ஆஞ்சனேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் ஒருசேர வழிபட்ட பலனைப் பெறலாம். மேலும், அனுமனை சனிக்கிழமைகளில் வழிபட்டால் சனியின் பிடியிலிருந்தும் நம்மை காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை. அதிலும் இத்தினத்தில் அனுமனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபடுவது என்பது மிகவும் விசேஷம். ஸ்ரீராமனின் பக்தன், சஞ்சீவி மலையைத் தூக்கியவன், பஞ்சபூதங்களையும் வென்றவன் என பல சிறப்புகளைக் கொண்ட அனுமனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்வது மிகவும் புண்ணியச் செயலாகும்.

ராவண வதத்துக்குப் பிறகு, இரண்டு அசுரர்கள் மட்டும் தப்பி ஓடி தவம் செய்து, வரங்களைப் பெற்று தேவர்களை மிரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களை எப்படி சமாளிப்பது? என்று தேவர்கள் பயந்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தேவர்கள் கூடி ஆலோசித்தபோது, அசுரர்களின் ஆணவத்தை அடக்கத் தகுதியானவர் அனுமன் ஒருவரே என்று முடிவு செய்யப்பட்டது. ஸ்ரீராம, ராவண யுத்தத்தின்போது அனுமனுக்கு ஸ்ரீராமர் வில்லையும், பிரம்மாவும், சிவபெருமானும் இன்னும் பிற கடவுள்களும் அனுமனுக்கு சக்தி வாய்ந்த ஆயுதங்களை அளித்தார்கள்.

தப்பிய அசுர வேட்டைக்காக அனுமன் ஸ்ரீராமரை வழிபட, ஸ்ரீராமர் தனது அடுத்த அவதாரமான கிருஷ்ணனுக்குப் பிடித்த வெண்ணெயை அனுமனிடம் அளித்து, ‘இந்த வெண்ணெய் உருகுவதற்குள் உனது காரியம் வெற்றியடையும்’ என்று கூறி ஆசீர்வதித்தார். அதன்படியே, அனுமன் அந்த வெண்ணெய் உருகுவதற்குள் இரண்டு அசுரர்களையும் அழித்து விட்டார்.

அதுபோல, நாமும் அனுமனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால், நாம் சாத்திய வெண்ணெய் உருகுவதற்குள் நாம் வேண்டிய காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்பதே இதன் உண்மைக் காரணமாகும்.

திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில், அனந்த பத்மநாபன் சன்னிதி முன்புறம் உள்ள ஆஞ்சனேயருக்கு முக்கியமான வழிபாடு வெண்ணெய் சாத்துவது ஆகும். இந்த வெண்ணெய் எவ்வளவு வெயில் அடித்தாலும் உருகுவது இல்லை. அதேபோல், எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப்போவதும் இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த அனுமனை சனிக்கிழமைகளில் வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்து வாழ்வில் வளம் பெறுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com