கோயிலில் சனி பகவானை நேராக நின்று வணங்கலாமா?

கோயிலில் சனி பகவானை நேராக நின்று வணங்கலாமா?

னி பகவான் என்று மட்டும் இல்லை, கோயிலில் உள்ள எந்த தெய்வத்தையும் நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது. அந்த தெய்வத்தின் பார்வையையும் சக்தியையும் நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. சன்னிதியின் இரு பக்கவாட்டிலும் நின்றே சாமியை தரிசிக்க வேண்டும். தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தி நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற தெய்வ வாகனங்களுக்கு மட்டுமே உண்டு.

நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. இதை ஸ்தான பலம், ஸம்யோக பலம், திருஷ்டி பலம் என்று சொல்வார்கள். இயற்கையிலேயே அசுப கிரகமான சனி கிரகத்தின் 3, 7, 10ம் பார்வை பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால், ஆலயங்களிலும், சனீஸ்வரன் சன்னிதியில் நேருக்கு நேர் நின்று சனி பகவானை தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள்.

நவக்கிரகங்களை தனது கட்டுப்பாட்டில் வேலைக்காரர்களாக வைத்து கொடுமைப்படுத்தி வந்தான் இலங்கை வேந்தன் ராவணன். இவன் சூரியன், சந்திரன், செவ்வாய் முதலான ஒன்பது கிரகங்களையும் தனது சிம்மாசனத்தின் கீழே அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளில் படுக்கவைத்து, தான் அரியணையில் ஏறும்போதும் இறங்கும்போதும் அவர்களின் மார்பின் மீது கால்களை வைத்து மிதித்துக்கொண்டு அரியனை ஏறும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். இதற்காக நவக்கிரகங்கள் ஒன்பதும் ஒவ்வொரு படிகளில் வரிசையாக மேல்நோக்கி படுக்கவைக்கப்பட்டிருந்து. ஆனால், சனி கிரகம் மட்டும், தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதால் மேல் நோக்கிப் பார்க்காமல், கீழ் நோக்கி குப்புறப் படுத்திருந்தது.

ராவணனின் கொடுமைக்கு முடிவு கட்ட நினைத்த நாரதர், ராவணன் சபைக்கு வந்தார். அங்கே ராவணன் நவக்கிரகங்களை தனது காலால் மிதித்து அரியனை ஏறுவதை கவனித்தார். அப்போது ராவணனிடம் நாரதர், ‘ராவணா, உனது கட்டளையை மதித்து இந்த நவக்கிரகங்கள் அனைவரும் மேல்நோக்கி படிகளில் படுத்திருக்கிறார்கள். ஆனால், சனி கிரகம் மட்டும் உன்னை அவமதிக்கும் வகையில் கீழ் நோக்கி படுத்திருக்கிறது பார்த்தாயா?’ என்று கூற, ராவணனும் சனி கிரகத்தை மேல் நோக்கிப் படுக்கச் சொன்னான்.

தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதை சனி கிரகம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்காததால், சனி கிரகமும் படிக்கட்டில் மேல் நோக்கியபடி திரும்பிப் படுத்தது. ராவணன் தனது காலால் சனி கிரகத்தை மார்பில் மிதித்து ஏறுகையில், சனி கிரகத்தின் குரூரமான பார்வை ராவணனின் மீது விழுந்தது, அப்போது முதல் ராவணனுக்கு அனர்த்தம் ஆரம்பமாயிற்று. நாரதரும் தான் வந்த வேலை முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் அங்கிருந்துப் புறப்பட்டார். புராணத்தில் காணப்படும் இந்த நிகழ்ச்சியின் மூலம் சனியின் பார்வை நம் மீது விழாமல் இருப்பது சிறந்தது என்பதை அனைவரும் அறியலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com