பெண்கள் ருத்ராக்ஷம் அணியலாமா?

பெண்கள் ருத்ராக்ஷம் அணியலாமா?
Published on

ருத்ராக்ஷத்தின் அர்த்தமும் பலன்களும்!

ருத்ர + அக்ஷ = ருத்ராக்ஷம்

அதாவது ருத்ரனின் கண்களிலிருந்து விழுந்த துளிகளே ருத்ராக்ஷமானது. சிவனின் கண்களுக்கு ப்ரீதியானது என்றும் சொல்வர்.

ருத்ராக்ஷம் மலைகளில் காணப்படும் ருத்ராக்ஷ மரங்களிலிருந்து கிடைக்கிறது. இதை ஆங்கிலத்தில் Elaco carpus seeds என்பர். ருத்ராக்ஷ பழங்கள் அல்லது விதைகள் சுத்தப்படுத்தப்பட்டு, நடுவிலே உள்ள துவாரங்களின் வழியே நூலால் இணைக்கப்பட்டு மாலையாக்கி அணிவது மரபு.

நேபாளத்தில் நல்ல வகை ருத்ராக்ஷங்கள் கிடைக்கின்றன. ருத்ராக்ஷத்தில் ஒரு முகம் என்பதிலிருந்து 28 முகங்கள் வரை இருப்பது காணப்படுகிறது.

முகம் என்றால் என்ன? ருத்ராக்ஷத்தில் உள்ள பிரிவு ஆகும். உதாரணமாக ஐந்து முகம் என்றால் ஆரஞ்சு சுளைகள் போல ஐந்து பிரிவுகளை கொண்டிருக்கும். இதேபோல ஆறுமுகம் என்றால் ஆறு பிரிவுகளைக் காணலாம்.

சிவனுடைய உடுக்கையிலிருந்து எழுந்த ஒலிகள் அல்லது சப்தங்கள் அல்லது எழுத்துக்கள் 14. இவற்றிற்கும் ருத்ராக்ஷத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆகவே 14 முகம் வரை உள்ள ருத்ராக்ஷங்களின் பலன்களைத் தெளிவாக நமது நூல்களில் காணலாம்.

ருத்ராக்ஷ ஜாபால உபநிஷத்தில் தரப்பட்டுள்ள பலன்கள் வருமாறு:

ஒரு முகம்: இந்திரிய நலம் பெற்று பர தத்துவத்தில் லயிப்பர்.

இரண்டு முகம்: அர்த்தநாரீஸ்வர ஸ்வரூபம். இதை அணிபவரிடம் அர்த்த நாரீஸ்வரர் அருள் இருக்கும்.

மூன்று முகம்: மூன்று அக்னிகளின் ஸ்வரூபம். இதை அணிந்தால் அக்னி தேவனின் அருள் கிடைக்கும்.

நான்கு முகம்: பிரம்மாவின் வடிவம். இதை அணிந்தால் பிரம்ம பிரீதி.

ஐந்து முகம்: பஞ்ச பிரம்ம ஸ்வரூபம்.

ஆறுமுகம்: கார்த்திகேயரை அதிதேவதையாக உடையது. இதை அணிந்தால் பெருஞ் செல்வமும் சிறந்த ஆரோக்கியமும் ஏற்படும். நல்ல புத்தி, சிறந்த ஞானம், ஸம்பத்து தூய்மை அனைத்திற்கும் இடமானது.

இப்படி பதினான்கு முகம் வரை விளக்குகிறது ருத்ராக்ஷ ஜாபால உபநிஷத்.

நட்சத்திரங்களுக்குரிய முகங்கள் என்னென்ன?

27 நட்சத்திரங்களில் ஒவ்வொன்றுக்கும் உரிய ருத்ராக்ஷங்களையும் ஜோதிட மற்றும் மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

நட்சத்திரத்திற்கான ருத்ராக்ஷங்கள்

நட்சத்திரம்

அணிய வேண்டிய ருத்ராக்ஷம்

அசுவனி, மகம், மூலம்

நவமுகம்

பரணி, பூரம், பூராடம்

ஷண்முகம்

கார்த்திகை, உத்தரம், உத்திராடம்

ஏக முகம், த்வாதச முகம் கெளரி சங்கர்

ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம்

த்வி முகம்

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்

த்ரி முகம்

திருவாதிரை, சுவாதி, சதயம்

அஷ்ட முகம்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

பஞ்ச முகம்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி

சப்த முகம்

ஆயில்யம், கேட்டை, ரேவதி

சதுர் முகம்

வியாதி போக்கும் ருத்ராக்ஷம்

யுர்வேத சாஸ்திரப்படி அணிவதால் தாகம், கோழை, திரிதோஷம், விக்கல், பித்தத்தால் ஏற்படும் அனேக வியாதிகள் தீரும். ‘கணீர் என்ற குரல் வளம் வேண்டுவோர் மற்றும் இயற்கையாக அமைந்த குரல் வளத்தைப் பேணிக்காக்க விரும்புவோர் தொண்டையில் ருத்ராக்ஷம் படும்படி அதை அணிவது வழக்கம். ஓதுவார் ருத்ராக்ஷ்ம் அணிந்தே தேவதாரம் மற்றும் பாடல்களை ஓதுவது மரபு.

ருத்ராக்ஷம் அணிவதால் என்ன புண்யம்?

குறிப்பிட்ட புண்யத்தை ஒரு அலகு என்று வைத்துக் கொண்டோமானால் ருத்ராக்ஷத்தைப் பார்ப்பது லக்ஷ்ம் புண்யம் என்றும், அதை ஸ்பரிசிப்பது கோடி புண்யம் என்றும், அதை அணிவது பத்துக் கோடி புண்யம் என்றும் இதை அணிந்து (இஷ்ட) நாமங்களை ஜபிப்பது நூறு லட்சம் கோடி மற்றும் ஆயிரம் லட்சம் கோடி புண்யம் என்றும் பத்ம புராணம் விவரிக்கிறது.

ருத்ராக்ஷம் எப்போது எப்படி அணியத் தொடங்கலாம்?

ருத்ராக்ஷத்தை கோமூத்திரம் அல்லது கங்கா ஜலம் அல்லது பாலில் முதலில் நனைத்துப் பின்னரே அணிய வேண்டும். வியாழக்கிழமையும் புஷ்ய நட்சத்திரமும் கூடிய சுப நாளில் (வருடத்திற்கு சுமார் இரண்டு முறைதான் வரும்) ருத்ராக்ஷம் தரிப்பது மிக்க நலம் பயக்கும் என்று அற நூல்கள் கூறுகின்றன.

பெண்களும் அணியலாம்!

ருத்ராக்ஷத்தைப் பெண்கள் அணியலாமா?

அணியலாம். (மாதவிலக்குக் காலம் தவிர) என்று புராணமே கட்டளை இடுகிறது.

சிவ புராணத்தில் (அத்தியாயம் 25 சுலோகம் 47) சிவன் பார்வதியிடம், “அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களும் பெண்களும் இதை அணியலாம்” என்று உறுதிபடக் கூறி அருளுகிறார்.

எப்படி வாங்குவது?

ந்தையில் ஐந்து முகங்களை உடைய ருத்ராக்ஷ மணிகளை நான்கு மற்றும் மூன்று முகங்களாக மாற்றி அதிக விலைக்கு விற்று விடுகின்றனர். ஒரே அச்சில் எடுக்கப்பட்ட போலி சிந்தடிக் ருத்ராக்ஷங்களைத் தந்து ஏமாற்றுகின்றனர். ஒரே மாதிரியாக இருந்தாலே அது அச்சில் வார்த்தது என்பதை உடனடியாகக் கண்டுபிடித்து விடலாம்.

ருத்ராக்ஷத்தின் ஸ்பெஸிபிக் கிராவிடி 11 முதல் 16 வரை உள்ளது. இரண்டு தாமிரக் காசுகளின் இடையே நல்ல ருத்ராக்ஷத்தை வைத்தால் அது சுழலும். இன்னொரு எளிய வழி. நல்ல ருத்ராக்ஷத்தை ஏமாறாமல் பரிசோதித்து உரிய விலையைக் கொடுத்து வாங்க வேண்டும். அது பெரிதாக இருக்க இருக்க நல்லது. ஏக முகம் கிடைப்பது அரிது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com