டேய்! உன்னால் கடவுளைக் காட்ட முடியுமா?

டேய்! உன்னால் கடவுளைக் காட்ட முடியுமா?
Published on

கைச்சுவை எழுத்தாளரான பாக்கியம் ராமசாமி என்கிற ஜ. ரா. சுந்தரேசன், கிருபானந்த வாரியாருடனான தமது  அனுபவங்களை நமது தீபம் ஆகஸ்ட் 2013 இதழில் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

கையில் சப்ளாக் கட்டை வைத்துக் கொண்டிருப்பார்.  தலையில் குடுமி. சில சமயங்களில் அதில் பூவும் சூடி இருப்பார். அவருடைய மேனி பொன்னிறமாக ஜொலிக்கும். நல்ல செழுமையான தேகம். ஆனால், பருமனாக இருக்காது. இடுப்பில் கட்டிய பட்டுப் பீதாம்பரம் பளபளக்கும். மேனி பூராவும் வெண்ணீறும் சந்தனமும் பூசி இருப்பார். வாசனை திரவியங்களின் மணம் வீசும். அவரது கம்பீரமான தோற்றத்தைப் பார்க்கும்போது, சட்டை போடாத ஒரு ராணுவ வீரரைப் பார்ப்பது போல இருக்கும். அவரது திடகாத்திரமான தோற்றத்தைப் பார்க்கிற மக்கள் சிலர், ‘வாரியார் ஒரு படி பாலை, ஒரு டம்ளர் பாலாக சுண்டக் காய்ச்சி, தினம் பருகுவாராம்’ என்று தங்களுக்குள்ளேயே பேசிக்கொள்வார்கள்.

பாக்கியம் ராமசாமி
பாக்கியம் ராமசாமி

அவரது தோற்றமே எதிரிகளையும் விஷமிகளையும் மிரள வைக்கும். அவருக்கு யார் எதிரிகள் என்று கேட்கிறீர்களா? கடவுள் எதிர்ப்பு கோஷ்டியினர்தான் அவரது எதிரிகள். அவர்கள் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்து கொள்வார்கள்.  சுவாமிகளுக்கு சங்கடம் ஏற்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இடக்கு மடக்கான கேள்விகளை துண்டுச்சீட்டில் எழுதிக் கொடுத்தனுப்புவார்கள். எப்படிப்பட்ட கேள்வியாக இருந்தாலும், அதற்கு சுவாமிகள் அலட்டிக் கொள்ளவே மாட்டார்.

நான் சென்றிருந்த நிகழ்ச்சி ஒன்றிலும் அப்படி ஒரு சீட்டு வந்தது. சீட்டைப் பிரித்து, அதில் எழுதப்பட்டு இருந்த கேள்வியை சபையில் உரக்கப் படித்தார்.  அந்தக் கேள்வி: ‘டேய்! உன்னால் கடவுளைக் காட்ட முடியுமா?‘ என்பதுதான். சீட்டில் தம்மை மரியாதைக் குறைவாகக் குறிப்பிட்டிருந்தாலும், வாரியார் சுவாமிகள் அதை சட்டை செய்யாமல், மீண்டும் அந்தக் கேள்வியைப் படித்தார்.  பிறகு, ‘சரியான, கோழையான, பயந்தாங்கொள்ளியான  ஆசாமி யாரோ சீட்டு எழுதி அனுப்பி இருக்கிறார். கேள்வியை எழுதினவர் தன் பெயரைக் கீழே எழுதவில்லை. அந்த அன்பர் இந்தக் கூட்டத்தில் எங்கே இருந்தாலும் எழுந்து நின்றால், பதில் சொல்கிறேன்’ என்று கம்பீரமான குரலில் சொன்னார்.  பிறகு, கூட்டத்தின் எல்லா பக்கத்திலும் பார்த்தார்.  அங்கே கூடி இருந்தவர்கள் அனைவருமே, அந்த ஆசாமி யார் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தோடு காத்திருந்தார்கள். ஒருத்தரும் எழுந்திருக்கவில்லை.

சுவாமிகள் தன் தோள் குலுங்க நகைத்துவிட்டு, ‘அந்த அன்பருக்கு தைரியமில்லாமல் போனாலும் பரவாயில்லை. அந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன். அவர் இங்கே உங்கள் எல்லோருக்கும் முன் பாக வந்து,  தனக்கு மூளை இருப்பதை கையில் எடுத்துக்காட்டினால், நான் அவருக்கு கடவுளைக் காட்டுகிறேன். எப்பொழுது வேண்டுமானாலும், அவர் வந்து தனது மூளையைக் காட்டலாம்’  என்றார். அவையில் இருந்த எல்லோரும், விஷமத்தனமான கேள்விக்கு சுவாமிகள் அளித்த சாதுரியமான பதிலைக் கேட்டு மிகவும் ரசித்துக் கைதட்டினார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com