திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். காலை 10.31-லிருந்து 11.30 மணிக்குள் அம்மன் தேரில் எழுந்தருளினார் . அதை தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. . இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சித்திரை மாதம் பிறந்து வரும் முதல் செவ்வாய் கிழமையன்று சமயபுரம் அருள்மிகு மாரியம்மனுக்கு தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். பக்தர்களின் துயரினை அழித்து தர்மத்தை காப்பதற்காகவே விரதமிருந்து சித்திரை தேரில் பவனிவரும் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மனை மனதார நினைத்தாலே வாழ்வில் வளம் சேரும்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேரோட்டத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா மார்ச் 12ந் தேதி பூச்சொரிதல் வைபவத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த 7 ந்தேதி முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. சித்திரைத் தேரோட்ட விழாவையொட்டி தினமும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.
இரவில், சிம்மம், பூதம், அன்னம், வெள்ளிக்குதிரை. சேஷ, வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று ஏப்ரல் 18-ஆம் தேதியான இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அம்மன் தேரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்த தேர் திருவிழாவை காண வந்த பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் 3 ஏ டி எஸ் பி,18 டிஎஸ்பி, 25 காவல் ஆய்வாளர்கள், 60 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1267 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக தேர்த் திருவிழா நடைபெறவும் சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் அம்மனுக்கு மாலையணிந்து விரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.