செந்தூர் திருப்புகழ் பாமாலை!

செந்தூர் செந்தில் வேலவன்
செந்தூர் செந்தில் வேலவன்
Published on

றுமுகன் மனமுவந்து வீற்றருளும் இரண்டாம் படை வீடு செந்தூர் திருத்தலம். கடல் அலைகள் முருகன் திருவடியை வருடுவதால் திருச்சீரலைவாய் என்றும், அசுரன் சூரபத்மனை வெற்றி கொண்டதால் ஜெயந்திபுரம் என்றும், கடல் (சிந்து) உள்ள ஊராதலின் செந்தில் கந்தமாதனம் என்றும், காந்தமலை எனவும் பலவாறு போற்றப்படுகிறது. நினைத்தாலே முக்தியளிக்கும் திருவண்ணாமலை எப்படி ஆணவம் அற்றோர்க்கே சிவம் விளங்கும் என்பதைக் குறிக்கிறதோ, அதுபோல் திருச்செந்தூர் தலமும், புறவெளியில் அலைகள் மோதி ஓயுங் கடற்கரையில் அமைந்துள்ளதால், அகத்தே எப்போது மன அலை ஓய்கின்றதோ அப்போது ஜோதி முருகன் தோன்றி ஆட்கொள்வான் என்பதைப் புலப்படுத்துகிறது. இதனைக் கருத்தில் கொண்டே அருணகிரியாரும், ‘செந்திலை உணர்ந்து, உணர்ந்து உணர்வுற, திருச்செந்திலை உரைத்து உய்ந்திட, செந்தூர எண்ணத் தெளிதருமே’ என்று உபதேசித்துள்ளார். அருணகிரிநாதர் இத்தலத்தில் திருவடி தீட்சைத் தர வேண்டுமென்று செந்திலாண்டவனை 83 காதுக்கினியப் பாக்களால் வேண்டிப் பாடியுள்ளார். அவர் இத்தலத்தைக் கண்குளிர, உள்ளம் குளிரக் கண்டார்; தோள் குளிரத் தொழுதார்; கோயில் பொலிவைப் பார்த்து ஆனந்தம் கொண்டார்!

அருணகிரிநாதர்
அருணகிரிநாதர்

திருச்செந்தூர் செந்தில்நாதனை கந்த சஷ்டி திருநாளில் பக்தர்கள் சிந்தை மகிழப் போற்றிப் பாடி வணங்கும் அருணகிரியாரின் திருப்புகழ் காண்போம்…

‘இயலிசையி லுசித வஞ்சிக் - கயர்வாகி

     இரவுபகல் மனது சிந்தித் - துழலாதே

உயர்கருணை புரியு மின்பக் - கடல்மூழ்கி

     உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே

மயில்தகர்க லிடைய ரந்தத் - தினைகாவல்

     வனசகுற மகளை வந்தித் - தணைவோனே

கயிலைமலை யனைய செந்திற் - பதிவாழ்வே

     கரிமுகவ னிளைய கந்தப் - பெருமாளே.’

பொருள்: ‘மண்ணுலக இன்பங்களில் திளைத்துக் காலத்தை வீணாக்காமல் உனது உயர்ந்த கருணையால் வரும் பேரின்பக்கடலில் மூழ்கி, உன்னை என் உள்ளத்தில் அறியக்கூடிய அன்பினைத் தந்தருள்வாயாக கந்தப் பெருமானே.’

திருச்செந்தூர் திருத்தலம்
திருச்செந்தூர் திருத்தலம்

வர் செந்திலாண்டவர் திருவடி இன்ப வெள்ளத்தில் திளைத்துப் பல நாட்கள் அங்கு தங்கி வழிபட்டிருக்க வேண்டும் என்பது அருணகிரியாரின் பாடல்கள் மூலம் தெரிய வருகிறது. ‘கொம்பனையார் காது மோது இரு கண்களில்...’ என்று ஆரம்பிக்கும் 53-வது செய்யுளில், ‘நமோ நம என நாளும் உன் புகழே பாடி நான் இனி அன்புடன் ஆசார பூஜை செய்து உய்ந்திட வீணாள் படாதருள் புரிவாயே!’ எனப் பாடுகிறார்.

‘என்னையும் ஒரு பொருளாக எண்ணி ஈடேற வைத்தப் பெருமானே! உன் திருப்புகழையே நான் பாடவும் என் நாட்கள் எல்லாம் பயன்படவும் அருள்வாய்’ என வேண்டுகிறார்.

அது மட்டுமா?

‘தஞ்சந் தஞ்சஞ் சிறியேன் மதி கொஞ்சங் கொஞ்சந்

துரையே யருள் தந்தென்றின்பந்தரு வீடது தருவாயே!’

என்று இரைஞ்சுகிறார். முருகனின் காதுகளில் இவ்வேண்டுகோள் விழாமலிருக்குமா? அவன் எப்படிப்பட்டவன்? ‘வேண்டிய போதடியர் வேண்டிய போகமது வேண்ட வெறாதுதவு பெருமான்’ அல்லவோ?

ன் மனங்கவர் அடியார் முன் குழந்தைத் திருக்கோலத்துடன் கொஞ்சிக் கொஞ்சி நடன தரிசனம் தந்தருளினார். இவ்வழகிய நடனத்தைக் கண்ட அருணகிரிநாதரின் வாயிலிருந்து அருமையான பாடலொன்று வெளிவந்தது...

‘தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும்

     தண்கழல் சிலம்புடன் – கொஞ்சவே

கடம்புடன் சந்த மகு டங்களும்

     கஞ்சமலர் செங்கையும் - சிந்துவேலும்

கண்களும் முகங்களும் சந்திர நிறங்களுஙம்

     கண்குளிர என்றன்முன் - சந்தியாவோ!’

சூரபத்மனை சம்ஹாரம் செய்தபோது செந்தில்நாதன் போர்க்களத்தில் விஸ்வரூபம் கொண்டதையும் அதனைத் திருமாலும் மகேசனும் கண்டு மகிழ்ச்சி அடைந்ததையும் இப்பாடல் விளக்குகிறது.

மேலும் அருணகியார்…

“ஹே, கும்பமுனி கும்பிடும் தம்பிரானே!

கடம்ப மாலையும், அழகிய மணிமகுடமும்,

தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும்,

சூரனை அழித்த வேலும், ஆறுமுகமும், பன்னிரு கண்களும்,

அவற்றில் தோன்றும் குளிர்ந்தப் பேரொளியும் விளங்க,

தண்டை வெண்டையம், கிண்கிணி, சதங்கை, கழல், சிலம்பு எனும்

ஆறு ஆபரணங்களும் திருவடிகளில் கணகணவென்று ஒலி எழுப்பியவாறு

நடனமாடும் இந்த உனது குழந்தைக் கோலத்தை

எப்பொழுதும் என் கண்கள் குளிரக் கண்டு களிக்க அருள்வாய்!’

எனப் பாடி மகிழ்கிறார்.

‘வரியார் கருங்கண் - மடமாதர்

மகவா சைதொந்த - மதுவாகி

இருபோ துநைந்து - மெலியாதே

இருதா ளினன்பு - தருவாயே

பரிபா லனஞ்செய் - தருள்வோனே

பரமே சுரன்ற - னருள்பாலா

அரிகே சவன்றன் - மருகோனே

அலைவா யமர்ந்த - பெருமாளே!’

பொருள்: ‘அழகிய ரேகைகள் உள்ள கரிய கண்களை உடைய இளம் பெண்கள், குழந்தைகள் என்கிற ஆசையாகியப் பந்தத்திலே அகப்பட்டு, பகலும், இரவும் மனம் நைந்து போய் மெலிந்துப் போகாமல் காப்பாற்றி உன் திருவடிகளின் மீது அன்பைத் தந்தருள்வாய், அலைவாய் அமர்ந்த பெருமாளே!’ எனப் போற்றிப் பாடி பரவுகிறார் அருணகிரிநாதர்!

தன்னை அண்டி வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் செந்திலாண்டவன் நம்மைக் காத்தருள, அருணகிரிநாதருடன் சேர்ந்து நாமும் கந்த சஷ்டி திருநாளில் இந்தத் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடி பரவுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com