சித்திரை திருவிழா தங்கப் பல்லக்கில் கள்ளழகருக்கு எதிர்சேவை!

சித்திரை திருவிழா தங்கப் பல்லக்கில்  கள்ளழகருக்கு எதிர்சேவை!

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான, வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக, அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் தரித்து தங்கப் பல்லக்கில் மதுரை புறப்பட்டார் கள்ளழகர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு தங்கப் பல்லக்கில் அழகர்மலையில் இருந்து மதுரை மூன்று மாவடி வந்த கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்த்தப்பட்டது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான பட்டாபிஷேகமும், மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தன

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வருகின்ற 05ஆம் தேதி காலை 05.45 முதல் 06.15 மணி அளவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி அழகர்கோவிலில் உள்ள ஸ்ரீகள்ளழகர் திருக்கோவிலில் கடந்த 01ம் தேதி விழா தொடங்கியதையடுத்து, ஸ்ரீகள்ளழகர் என்று அழைக்கக்கூடிய சுந்தராஜபெருமாள் தினமும் தொழுக்கினியான் அலங்காரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

.இதனையடுத்து நேற்று மாலை மதுரை புறப்படுவதற்காக கள்ளழகர் தங்கப் பல்லக்கில் எழுந்தருளினார். கள்ளர் திருக்கோலத்தில் காட்சி தந்த கள்ளழகர், சர்வ அலங்காரம், படை பரிவாரங்களுடன் அழகர்கோயில் அலங்கார மண்டபத்தில் இருந்து இரவு 7 மணியளவில் மதுரை புறப்பட்டார். அவரை வழிநெடுக மக்கள் கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர்.

இந்நிலையில், வைகையாற்றில் எழுந்தருள அழகர்கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர், பொய்கைகரைப்பட்டி, சுந்தரராஜன்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, காதக்கிணறு, கடச்சனேந்தல் வழியாக மூன்று மாவடி வந்தடைந்தார். அங்கு அவருக்கு எதிர்சேவை நிகழ்த்தப்பட்டது.

கள்ளழகரை காண்பதற்கும், அவரை எதிர்கொண்டு அழைப்பதற்கும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர். மூன்று மாவடியில் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி அழகருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com