தேம்பே ஸ்வாமிகள் கொடுத்த தேங்காய்!

ஷீரடி ஸ்ரீ சாயி – பக்தித் தொடர்

தேம்பே ஸ்வாமிகள் கொடுத்த தேங்காய்!

அத்தியாயம் - 9 - புண்டலிக் ராவ்

 ஸ்ரீ சாயி சத் சரித்திரம் என்னும் ஆழ அகலங்கள் கொண்ட கடலில் மூழ்கி முத்துக் குளித்தால் சம்சார சாகரத்தில் உழலும் மானிடர்களுக்கு மனத் தெளிவும் அமைதியும் கிடைப்பது சத்தியம்.  பாபாவின் வார்த்தைகள் மிகச் சுருக்கமாக இருந்தாலும் ஆழ்ந்த அர்த்தமுள்ளவை. அவற்றில் ஆழம் மிகுந்த தத்துவங்கள் பொதிந்திருக் கின்றன. ஆன்மிகத் தேடலில் ஈடுபடுபவர்களுக்கு இது எளிமையான வடிவத்தில் ஒரு பகவத் கீதை.

'அவனின்றி ஓர் அணுவும் இயங்காது'. 'ஆட்டுவிப்பவன் அவன். ஆடுபவர்கள் நாம்'.  அன்றாடம் நம் வாழ்வில் நடப்பவைகள் அனைத்தும் இறைவன் எண்ணப்படி நடக்கின்றன.  இதெல்லாம் உண்மையா?

சத்சரித்திரத்தில் ஒரு அருமையான கதை. ஒரு சிட்டுக்குருவியைப் போல ஒரு பக்தரை ஷீரடிக்கு இழுத்து கடவுளின் கைகளில் நாம் வெறும் கருவிதான் என்பதை மிக அழகாக நமக்கு உணர்த்துகிறார் பாபா இந்தக் கதையின் வாயிலாக.

தேம்பே ஸ்வாமிகள்
தேம்பே ஸ்வாமிகள்

ஸ்ரீ வாசுதேவானந்த சரஸ்வதி என்கிற தேம்பே ஸ்வாமிகள் ஒரு சமயம் கோதவரி நதிக்கரையில் இருக்கும் ராஜமகேந்திரபுரத்துக்கு வந்து தங்கியிருந்தார்.  இவர் கர்னாடகாவில் பிறந்தவர்.  இவர் ஒரு மாபெரும் ஞானி. சமஸ்க்ருத பண்டிதர்,  தத்தாத்ரேயரின் பக்தர்.  பகவான் தத்தாத்ரேயருக்காக மான்காவ் என்னும் இடத்தில் அவர் ஒரு கோயில் கட்டினார்.  அவர் 'தத்த புராண்', 'தத்த மஹிமா' போன்ற 19 நூல்களை எழுதியுள்ளார்.

நாந்தேட் நகரத்தில் வசித்து வந்த வக்கீல் புண்டலிக்ராவும் மற்றும் சில பக்தர்களும் அவரை தரிசிப்பதற்காக ஒரு குழுவாக அங்கு வந்து சேர்ந்தனர். காலை நேரத்தில் கோதாவரி நதி தீரத்தில் ஸ்வாமிகள் தரிசனம் கிடைத்தது. ஸ்வாமிகளை பயபக்தியுடன் ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்தனர்.  இயல்பான குசலப்ரசனம் முடிந்த பிறகு ஷீரடி பற்றிய பேச்சு வந்தது.

பாபாவின் பெயரைக் கேட்டவுடனே ஸ்வாமிகள் இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு. "நான் பொதுவாக யாரையும் வணங்குவதில்லை.  ஆனால், சாயியின் விஷயத்தில் விதிவிலக்கு உண்டு.  அவர் என் சகோதரர்.  அவரிடத்தில் எனக்கு மட்டற்ற அன்பு உண்டு"  என்றார்.  பிறகு ஒரு தேங்காயை புண்டலிக்ராவிடம் கொடுத்து, "நீங்கள் ஷீரடிக்குச் செல்லும்போது இந்தத் தேங்காயை என் வணக்கங்களுடன் என் சகோதரரிடம்  என் சார்பில் அர்ப்பணித்து விடுங்கள்!" என்றார்.  புண்டலிக்ராவ் தேங்காயையும், செய்தியையும் பாபாவிடம் எடுத்துச் செல்ல சம்மதித்தார்.  பாபாவைச் சகோதரன் என்று இந்த ஸ்வாமிகள் அழைப்பது சரியே.  ஏனென்றால் அவருடைய வைதீக சம்பிரதாயப்படி அக்னிஹோத்ரம் என்ற புனித நெருப்பை இரவும் பகலும் அவர் காத்து வந்ததைப் போலவே பாபாவும் தமது அக்னிஹோத்திரத்தை அதாவது துனியை மசூதியில் எப்போதும் எரிய விட்டுக்கொண்டிருந்தார்.

சீக்கிரமாகவே புண்டலிக் ராவிற்கு நான்கு நண்பர்களுடன் சேர்ந்து ஷீரடிக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.  அவர்கள் தங்களுக்கு வேண்டிய சாமான்களையும், கூடவே  தேம்பே ஸ்வாமிகள் கொடுத்த தேங்காயையும் மறக்காமல் எடுத்துக்கொண்டு சாயி தரிசனத்துக்கு ஆனந்தமாகப் புறப்பட்டனர்.  மன்மாட்டில் இறங்கிய போது கோபர்காவ் வண்டி கிளம்ப இன்னும் நேரம் இருந்ததால் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள அருகிலிருந்த ஓடைக்குத் தண்ணீர் பருகச் சென்றனர். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் என்று குழுவில் ஒருவர் சொன்னார்.  மற்றொரு நண்பர் தன்னிடமிருந்த 'சிவ்டா' என்கிற அவல் பலகாரப் பொட்டலத்தை வெளியே எடுத்தார். அந்தப் பலகாரத்தைச் சாப்பிட்டு விட்டு தண்ணீர் பருகலாம் என்று எண்ணினார்கள். ஆனால், அவல் அதிகக் காரமாக இருந்தது.  குழுவில் ஒருவர் தேங்காயை உடைத்து தேங்காய்ப் பூவை அதனுடன் கலந்து விடலாம் என்று  யோசனை சொல்ல, அவ்வாறே செய்தனர்.  தேங்காய்  துண்டுகள் கலந்த  சுவையான 'சிவ்டா'வை உண்டு தண்ணீர் குடித்தனர். தேங்காய் என்று சொன்னவுடனே தேங்காய் வந்தது. அது யாருடையது என்கிற கேள்வியே எழவில்லை.  வயிறு பசித்ததால் எல்லாவற்றையும் மறந்து போனார்கள்.  அதன் பிறகு ஷீரடி செல்ல கோபர்காவ் ரயிலில் ஏறி தத்தம் இடத்துக்குப் போய் அமர்ந்த பின்னும் யாருக்கும் நினைவு இல்லை.  வண்டியில் அமர்ந்த  பிறகே புண்டலிக்ராவிற்கு தேங்காயைப் பற்றிய நினைவு வந்து தூக்கி வாரிப் போட்டது..  தேங்காய் உடைக்கப்பட்டு உண்ணப்பட்டு விட்டது என்பதை உணர்ந்த புண்டலிக்ராவிற்கு உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது.   பாபா பாதங்களில் சமர்ப்பிக்க இருந்த தேங்காயைத் தாங்கள் உண்டது அவருக்குச் செய்யப்பட்ட அபசாரம் என்று நினைத்து மனம் வருந்தினார். இப்பேர்ப்பட்ட தவறைச் செய்து விட்டோமே என்று  பயந்து நடுங்கிப் போனார்.

'ஒரு மஹான் தன் சகோதரனான மற்றொரு மகானுக்குக் கொடுத்தனுப்பிய தேங்காயை உண்டு எவ்வளவு பாபத்தை மூட்டை கட்டிக்கொண்டு விட்டோம்? தேங்காய் இல்லாமல் நான் எந்த முகத்துடன் பாபாவைப் பார்ப்பேன்?'  ஷீரடி நெருங்க நெருங்க வருத்தத்திலும், பயத்திலும்  புண்டலிக்ராவின் உடம்பு நடுங்கலாயிற்று.

புண்டலிக்ராவும் நண்பர்களும் ஷீரடியில் இறங்கி  பாபா தரிசனத்துக்கு வந்தார்கள்.  பாபாவுக்கு  தேம்பே ஸ்வாமிகள் தேங்காய் அனுப்பியுள்ள செய்தி கம்பியில்லா தந்தி மூலம் எப்பொழுதோ வந்து விட்டது. பாபா அவராகவே தமது சகோதரன் தனக்கு அனுப்பியுள்ள பொருளைக் கொடுக்கும்படி புண்டலிக்ராவிடம் கேட்டார்.   அவர் பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு, "உங்களிடம் மன்னிப்பை வேண்டுவதல்லாமல் வேறு மார்க்கம் எனக்கு இல்லை. தேங்காயை நினைவாக கொண்டு வந்த போதிலும், பசி தீர்க்க ஓடைக் கரைப் பக்கம் சென்றதும் எல்லோரும் அதனை மறந்து விட்டோம்.  பலகாரம் செய்ய இந்தத் தேங்காயை உடைத்து அவலுடன் சாப்பிட்டோம். நீங்கள் கருணைக் கடல்! நான் குற்றவாளி! உத்தமரான அந்த மகானின் வாக்கை அலட்சியம் செய்து உங்களுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டிய தேங்காயை நான் சாப்பிட்டேன்.  இந்த பாபத்துக்கு ஏதாவது பரிகாரம் உண்டா? என்னை மன்னித்து உங்களருகில் அரவணைத்துக்கொள்ளுங்கள். மற்றொரு தேங்காயை அதற்குப் பதிலாக கொடுத்து விடுகிறேன்!" என்று  கூறினார்.

இந்த வார்த்தைகளைக் கேட்டு நகைத்த பாபா "'எத்தனை தேங்காய்களைக் கொடுத்தாலும் என் சகோதரன் கொடுத்தனுப்பிய அந்தத் தேங்காய்க்கு ஈடு இணையாகாது" என்று கூறினார்.

"இனிமேல் இதற்காக நீ வருத்தமடைய தேவையில்லை.  எனது விருப்பத்தின் காரணமாகவே தேங்காய் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டு முடிவில் உடைக்கப்பட்டு உண்ணவும் பட்டது. நடக்க வேண்டியது நடந்து முடிந்துவிட்டது.  அநாவசியமாக 'நான் செய்தேன்' என்று  செயல்களின் கர்த்தாவாக உன்னையே நீ ஏன் ஆக்கிக் கொள்கிறாய்?  நற்கருமங்களையோ தீயச் செயல்களையோ செய்யும் கர்த்தாவாக உன்னை நீயே எண்ணிக்கொள்ளும் உணர்வை அனுமதிக்காதே. நான் கர்த்தா அல்ல என்ற அகங்காரமற்ற பாவத்தை பழக்கப்படுத்திக்கொண்டு எந்தச் செயல் செய்தாலும் எந்தத் தொந்திரவும் இருக்காது. எல்லாம் கடவுள் சங்கல்பம் என்று உணர்ந்து எல்லா வற்றிலும் முழுமையாக அகங்காரமற்றிரு. அதனால் உன் ஆன்மிக முன்னேற்றம் துரிதமடையும்" என்றார். பாபாவின் வார்த்தைகள் புண்டலிக்ராவை சமாதானப் படுத்த அவர் வேதனை மெல்ல மெல்லக் குறைந்து மனது அமைதியானது. பாபாவின் உபதேசத்தினால் அவர் மனதிலிருந்த பயம் மறைந்தது.  

எத்தகைய அழகான ஆன்மிக போதனையை பாபா இந்நிகழ்ச்சியின் மூலம் உணர்த்தியிருக்கிறார்.  பாபாவின் வார்த்தைகள் ஆழ்ந்த அர்த்தமுள்ளவை.  அவற்றில் ஆழம் மிகுந்த தத்துவங்களும் மறைபொருளும் பொதிந்துள்ளன.

இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட ஸ்ரீ வாசுதேவானந்த சரஸ்வதி என்னும் தேம்பே சுவாமிகளும் ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவும் வாழ்வில் ஒரு முறை கூட நேரில் சந்தித்ததே இல்லை என்பது மற்றொரு ஆச்சரியகரமான உண்மை.

வாழ்வில் நடப்பதெல்லாம் இறைவன் சங்கல்பமே, எல்லாவற்றையும் நடத்தி வைப்பவர் அவர்தான். நாமெல்லோரும் இறைவனின் கைகளில் வெறும் கருவியே என்பதை சத்சரித்திரம் மூலம் உணரும்போது நம் உள்ளத்தில் மேன்மேலும் அடக்க உணர்வே மேலோங்குகிறது.   

(அருள் பெருகும்)          

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com