இந்தியாவில் முக்கியமான நான்கு தலங்களை ‘சார்தாம்’ என்று சொல்வார்கள். அவை: வடக்கே பத்ரிநாதம், மேற்கே துவாரகாநாதம், கிழக்கே ஜகந்நாதம், தெற்கே ராமநாதம். இவற்றில், முதல் மூன்றும் வைணவத் தலங்கள். ராமநாதம் மட்டும்தான் சைவத் தலம்.
சீதாதேவியால் உருவாக்கப்பட்டு ராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமநாத சுவாமியின் பெயரில்தான் கோயில் விளங்குகிறது. எனினும், ஹனுமன் கொண்டு வந்த காசிலிங்கத்துக்குத்தான் முதல் மரியாதை. சீதையை மீட்டுக் கொண்டு திரும்பும்போது, ‘ராவணன் அசுரன் என்றாலும் மகாசிவபக்தன்; ஈஸ்வர பட்டம் பெற்றவன். அவனைக் கொன்ற தோஷம் நீங்க, ராமேஸ்வரத்தில் லிங்கத்தை பிரதிஷ்டைச் செய்து, பூஜை செய்’ என ராமனுக்கு அசரீரி ஒலிக்கிறது. அதன் பொருட்டு பூஜை செய்ய, லிங்கத்தை எடுத்துவர ஹனுமனை காசிக்கு அனுப்புகிறார் ராமபிரான். ஹனுமன் திரும்பி வருவதற்கு நேரம் ஆகிவிடவே, ராமன் கடல் மணலினால் லிங்கத்தைப் பிடித்து, பிரதிஷ்டை செய்து, பூஜையை ஆரம்பித்து விடுகிறார். தாமதமாக லிங்கத்தோடு வந்த ஹனுமனுக்குக் கோபம். அதைப் புரிந்துகொண்ட ராமன், “ஹனுமா, நீ மனம் வருந்த வேண்டாம். நீ கொண்டு வந்த லிங்கத்துக்குத்தான் பூஜை. அதன்பிறகுதான், நான் பிரதிஷ்டை செய்த லிங்கத்துக்கு” என வாக்குத் தருகிறார். அதனால், இன்றுவரைக்கும் ஹனுமன் கொண்டு வந்த லிங்கமூர்த்திக்குத்தான் முதல் பூஜை.
கோயிலின் எதிர்புறம், கிழக்கே இருக்கும் கடல்தான் அக்னிதீர்த்தம். இறந்த முன்னோர்களுக்கு இங்கே திதி, கர்மா செய்தால், புண்ணியம், மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற விசேஷ நாட்களில், அக்னி தீர்த்தக் கடல் ஜனக்கடலாக மாறிவிடுகிறது.
முறைப்படியான தீர்த்தக் குளியலுக்கு அக்னி தீர்த்தமே ஆரம்பம். பிறகுதான் கோயிலின் மூன்று பிரகாரங்களிலும் இருக்கும் 22 தீர்த்தங்களின் தரிசனக் குளியல், லட்சுமி தீர்த்தம், சங்குத் தீர்த்தம், சக்கரத் தீர்த்தம், சேதுமாதவ தீர்த்தம். இதில் மிக முக்கியம், சேது மாதவ தீர்த்தம்; குட்டிக் கடல்போல கோயிலுக்குள் தேங்கிக் கிடக்கிறது.
பன்னிரு ஜோதி லிங்கங்களில், தென்னிந்தியாவில் ஒன்றே ஒன்றுதான்; அவர் ராமநாதர்! காசிக்கு யாத்திரை சென்றவர்கள், ராமேஸ்வரத்துக்கு வந்து ராமநாத சுவாமியைத் தரிசித்தால்தான் காசி யாத்திரை முழுமையடைகிறது. இப்படி ராமேஸ்வரத்தின் சிறப்புகள் அதிகம்.
‘சிவராத்திரியில் பக்தர் கண்விழிக்க வேண்டும் என்று நெறி வகுத்ததில், விஞ்ஞானரீதியான ஆன்மிகப் பயன் உண்டு. அன்று கோள்கள் எல்லாம் ஒரு நேர்க்கோட்டுக்கு வருகின்றன. அப்போது, நமது முதுகுத் தண்டு நிமிர்ந்திருந்தால், கோள்களின் நேர்க்கோட்டு விசையால் தூண்டப்பட்டு அது ஆன்ம எழுச்சிக்கு தூண்டுகோலாக இருக்கிறது. ராமேஸ்வரம் போன்ற புராதன தலங்களில் சென்று வழிபடும்போது, ஆன்ம நலன் மட்டுமல்ல; உடல் நலமும் சீராகிறது’ என்கிறார்கள்.
விரதத்தால் உடல் நலத்தையும், வழிபாட்டால் மன ஒருமைப்பாட்டையும் தந்து, சலன அலைகளில் திண்டாடும் மனித குலத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் ராமநாதர்.
வில்லூன்றி தீர்த்தம்: ராமேஸ்வரம் செல்லும் முன்பு அக்கா மடம், தங்கச்சி மடத்துக்கு இடதுபுறம் 2 கி.மீ. தூரத்தில் இருக்கிறது வில்லூன்றித் தீர்த்தம். (வில்லூண்டி என்று மருவியிருக்கிறது) சீதையின் தாகத்தைப் போக்க ராமன் தன் அம்பால் கடற்கரையைத் துளைத்து நல்லத் தண்ணீர் ஊறும் ஊற்றையும் உருவாக்கினாராம். அந்தத் தீர்த்தத்தைச் சுற்றிலும் கடல்நீர் சூழ்ந்திருக்க, அந்தச் சுனையின் தண்ணீர் மட்டும் தேனாகத் திகிழ்கிறது.