குற்றாலம், தென்காசி ஐந்து கோயில்கள்!

குற்றாலம், தென்காசி ஐந்து கோயில்கள்!

குற்றாலம், தென்காசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் பல உள்ளன. நம்முடைய நாட்டில் பெரும்பான்மையான சுற்றுலாத் தலங்களின் அருகில் கோயில்களைக் காணலாம்.

1. திருக்குற்றாலநாதர் கோயில்:

பேரருவியின் அருகில் உள்ளது இந்த திருக்கோயில். தேவாரப் பாடல் பெற்ற சிவத் தலம். திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகிய நாயன்மார்களும், பட்டினத்தாரும் இந்த கோயிலில் குடிகொண்டிருக்கும் திருக்குற்றாலநாதரைப் பற்றிப் பாடியிருக்கிறார்கள். அருணகிரிநாதர், இங்குள்ள முருகனைப் பற்றிப் பாடியுள்ளார். கோயிலில் மூலவர் திருக்குற்றாலநாதர். திரிகூடநாதர் என்றும் கூறுவார்கள். குழல்வாய்மொழி அம்மன், பராசக்தி என்று இரண்டு அம்மன் சன்னதிகள். பராசக்தி அம்மன் சன்னதி, அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றான தரணிபீடம் எனப்படுகிறது.

திருமால் வடிவிலிருந்த மூர்த்தியை, அகத்திய முனிவர் சிவலிங்கமாக மாற்றியதாக புராணக் கதைகள் உண்டு. பொதுவாக கோயில்கள் வடிவமைப்பு, சதுரம் அல்லது நீண்ட சதுரமாக இருக்கும். ஆனால் இந்தக் கோவில் சங்கு வடிவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலில் மூலவருக்கு பிணி தீர்க்கும் மூலிகைகள், வேர்கள் கொண்டு காய்ச்சப்பட்ட தைல அபிஷேகம் செய்யப்படுகிறது. இது தலைவலி, வயிற்று வலி மற்றும் கொடிய நோய்களை போக்கவல்லது என்பது நம்பிக்கை. இத்தலம் மூன்றாம் நூற்றாண்டிற்கும் முந்தையது ஆகும்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 5 மணி முதல் 12 வரை. மாலை 4 முதல் 8 வரை.

2.  சித்திரசபை:

சிவபெருமானுக்கு உடைய ஐந்து சபைகளில் சித்திரசபை குற்றாலத்தில் பேரருவியிலிருந்து சிறிது தூரத்தில் உள்ளது. சிவன் நடனமாடிய ஐந்து தலங்களில் இதுவும் ஒன்று. சித்திரசபையில் உள்ள சுவரோவியங்கள் கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் உள்ளன. சுவரோவியங்களில் சில :-  சிவன் பார்வதி திருமணம், விஷ்ணுவின் அனந்தசயனம், இராமாயணம், மகாபாரதத்திலிருந்து சில காட்சிகள். பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.

3. காசி விஸ்வநாதர் கோயில்:

கிட்டத்தட்ட எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கோயில். ராஜா பராக்கிரம பாண்டியன் காசிக்குச் சென்று விஸ்வநாதரை தரிசிக்கத் திருஉள்ளம் கொண்டான். அவனுடைய கனவில் தோன்றி சிவபெருமான் ஆணையிட இந்தக் கோயிலைக் கட்டினான். இங்கு, சிவபெருமான் சுயம்புமூர்த்தியாக இருக்கிறார்.  மூலவர் விஸ்வநாதர், அம்பாள் உலகம்மன். இங்கு இறைவனை வழிபட்டால் காசி சென்று வழிபட்ட பலன் உண்டு என்று கூறுவர்.

இந்தக் கோயிலின் இராஜகோபுரம் ஒரு அதிசயம். பக்தர்கள் கோபுர வாசலில் நுழையும் போது, காற்று அவர்களுக்கு எதிர்புறமாக மேற்கிலிருந்து கிழக்காக வீசுகிறது. கோபுர வாசலிலிருந்து இறங்கும் போது, காற்று சுழன்று வீசுவது போன்ற உணர்வு. இறங்கிய பின், உள்ளே செல்லும் போது, கிழக்கிலிருந்து மேற்காக காற்று வீசி, பக்தர்களை உள்ளே தள்ளுகிறது. ஒரு தடுப்பும் இல்லாத நிலையில் இரண்டு எதிர் திசைகளில் காற்று வீசுவதை உணர்வது ஆச்சரியமான அனுபவம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை. மாலை 4 மணி முதல் 8.30 மணி வரை

4. திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில்:

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், இயற்கை எழில் மிக்க குன்றின் மீது அமைந்துள்ளது இந்தக் கோயில். தென்காசி ரயில் நிலையத்திலிருந்து 13 கி.மீ. தொலைவிலும், செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 7 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. அழகான மலையாக இருப்பதால், குமரன் குடி கொண்டிருக்கும் இந்த மலையை “திருமலை” என்று கூறுவார்கள். மேற்குத் தொடர்ச்சி மலை, காவிமலை என்னும் இரண்டு மலைகள் இம்மலையுடன் இணைவதால், இதனை திரிகூடமலை என்றும் சொல்வது உண்டு.

குன்றின் உயரம் 400 அடி. மேலே குமரன் கோயிலுக்குச் செல்ல 544 படிக்கட்டுகள் உள்ளன. மேலே வாகனங்கள் செல்வதற்கும் பாதை அமைத்துள்ளார்கள். இந்தக் கோயிலின் சில முக்கிய சன்னதிகள் – திருமலை முருகன், அடிவார வல்லபை விநாயகர், உச்சிப் பிள்ளையார், சொக்கநாதர் மீனாட்சியம்மன் ஆகியவை. இங்கு வீற்றிருக்கும் குமரனைக் குறித்து “திருமலை முருகன் பிள்ளைத் தமிழ்” என்ற இலக்கியம் உள்ளது. குழந்தை வரம் வேண்டி பாலகுமரனைத் தரிசிக்க வருபவர்கள் பலர்.

இந்த மலைக் கோவிலைச் சுற்றி சிறிய கிராமங்கள், தென்னந்தோப்புகள் உள்ளன. மலை உச்சியிலிருந்து அற்புதமான இயற்கையைப் பார்த்து ரசிக்கலாம். குற்றாலம் வருபவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய கோயில்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:  காலை 6 மணி முதல் 1.30 மணி வரை. மாலை 4.30 மணி முதல் 8.15 வரை

5. மதுரவாணி அம்பாள் கோயில், சாம்பவர் வடகரை:

பாண்டவர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பழமையான கோயில், தென்காசியிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது. சாம்பவர் என்ற மரபினர் சிவன் கோயில் குருக்களாக இருந்தனர். ஆகவே, இந்த கிராமம் சாம்பவர் வடகரை என்ற பெயர் பெற்றது. இங்கு வீற்றிருக்கும் தெய்வங்கள் திருமூலநாதர் மற்றும் மதுரவாணி அம்பாள்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 5 மணி முதல் 10 மணி வரை. மாலை 5 முதல் 8 வரை.

இவற்றைத் தவிர இலஞ்சி முருகன் கோயில், ஆயக்குடி பாலசுப்ரமணிய சுவாமி கோயில் ஆகியவை தென்காசி மாவட்டத்தில் பிரபலமான கோவில்கள். இந்த இரண்டு கோயில்களும் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியத் தலங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com