திருப்பதி பெருமாளை ஸ்பரிசித்த கடப்பாரை!

திருப்பதி பெருமாளை ஸ்பரிசித்த கடப்பாரை!

திருமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளை தரிசிக்கச் செல்லும்போது, பிரதான வாயிலின் வலப்பக்கம் ஒரு கடப்பாரை இருப்பதைப் பார்க்கலாம். இந்தக் கடப்பாரையின் பெருமையை பலரும் அறிய வாய்பில்லை. இந்த கடப்பாரை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளை ஸ்பரிசித்த பெருமை கொண்டது என்பது ஆச்சரியமான விஷயம்.

பலநூறு வருடங்களுக்கு முன்பு திருப்பதி திருத்தலத்தில் ஏழுமலையானுக்கு மலர் கைங்கர்ய சேவை செய்யும் பேறு தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியோடு தனது மனைவியோடு வந்தார் ஆனந்தாழ்வான். மலர்கள் பூத்துக்குலுங்க வேண்டுமென்றால் அதற்கு நந்தவனம் முக்கியம் அல்லவா. அதற்காக நிலத்தை சமப்படுத்தி, பண்படுத்தி மலர்ச்செடிகளை நட்டார். அந்த நந்தவனத்துக்கு தமது குருநாதரின் திருப்பெயரே நிலைக்கும்படி, 'ராமாநுஜ நந்தவனம்' என்று பெயர் வைத்தார். (இப்போதும் அந்த நந்தவனம் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.) கோடைக் காலத்தில் நந்தவனம் தண்ணீர் இன்றி வாடிப்போகாமல் இருக்க, குளம் வெட்டி தண்ணீரைத் தேக்க முடிவு செய்தார். அதற்காக ஒரு குளத்தை வெட்டும் முயற்சியில் இறங்கினார் ஆனந்தாழ்வான். இந்தச் சூழ்நிலையில் அவரது மனைவி கர்ப்பம் தரித்திருந்தார்.

'திருக்குளம் வெட்டும் பணியில் அவரது மனைவியும் சேர்ந்துகொண்டார். மண்ணை ஒருபுறமிருந்து மறுபக்கம் கொண்டு சென்று மனைவி கொட்டிவிட்டு வந்தார். கர்ப்பிணிப் பெண் மண் சுமந்து செல்வதைப் பார்த்த ஒரு சிறுவன், அனந்தாழ்வானிடம் தானும் அவருக்கு உதவி செய்வதாகக் கூறினான். ஆனால், அனந்தாழ்வானோ, பெருமாளின் தொண்டுக்கு மற்றவர் உதவியை நாடக்கூடாது எனும் சுயநலத்தில் அந்த சிறுவனை விரட்டிவிட்டு, அவர்கள் இருவர் மட்டும் குளம் வெட்டும் பணியில் ஈடுபட்டனர்.

கர்ப்பிணிப் பெண் கஷ்டப்பட்டு மண் சுமப்பதைப் பார்த்த அந்தச் சிறுவன், ‘தாயே, நான் அவர் எதிரில் மண் சுமந்தால்தானே கோபப்படுவார். அவருக்குத் தெரியாமல் உங்களுக்கு உதவுகிறேன். வளைவுக்கு இந்தப் பக்கம் நான் சுமக்கிறேன். அந்தப் பக்கம் நீங்கள் சுமந்து வாருங்கள்’ என்றான். சிறுவனின் கெஞ்சல் மொழியைக் கேட்ட பிறகு அவளால் மறுக்க இயலவில்லை. கூடையை மாற்றிக் கொடுத்தாள். இப்படியே சிறிது நேரம் வேலை நடந்தது. திடீரென்று அனந்தாழ்வானுக்கு சந்தேகம் எழுந்தது. 'மண்ணைக் கொட்டிவிட்டு சீக்கிரமாகவே வந்து விடுகிறாயே' என்று மனைவியிடம் கேட்க, 'வேகமாகச் சென்று கொட்டி விட்டு வருகிறேன்’ என்று பதில் சொல்லி சமாளித்தாள் மனைவி. சிறிது நேரம் கழித்து, அனந்தாழ்வான் மண் கொட்டியிருக்கும் இடத்தைப் பார்க்க வந்தார். அங்கு சிறுவன் கர்மசிரத்தையாக மண்ணைக் கொண்டு போய் கொட்டிக்கொண்டிருந்தான். இதனால், கோபம் தலைக்கேற, தான் கையில் வைத்திருந்த கடப்பாரையால் சிறுவனின் கீழ்த்தாடையில் அடித்தார். சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் கொட்டியது. கடப்பாரையால் அடிபட்டு ரத்தம் பெருகிய நிலையில், அந்தச் சிறுவன் ஓடிப்போய் மறைந்தான்.

றுநாள் காலை பெருமாளுக்கு தினசரி பூஜைகளைத் தொடங்க அர்ச்சகர்கள் கதவைத் திறந்ததும் அலறினர். பெருமாளின் தாடையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அப்போது, 'அர்ச்சகரே பயப்படவேண்டாம். அனந்தாழ்வாரை அழைத்து வாருங்கள்' என ஒரு அசரீரி கேட்டது. உடனே அர்ச்சகர்கள் அனந்தாழ்வானை அழைத்து வந்தனர்.

பெருமாள் தாடையில் ரத்தம் வடிவதைக் கண்ட அனந்தாழ்வான் துயரத்தில் ஆழ்ந்தார். அப்போது அவருக்கு மட்டும், தான் சிறுவனாக வந்து மண் சுமந்த கோலத்தைக் காண்பித்தார் பெருமாள். ‘சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். தங்களுக்குச் செய்யும் திருத்தொண்டில் அடுத்தவர் உதவியை நாடக்கூடாது என்ற சுயநலத்தில் அந்த சிறுவனை விரட்டினேன். என்னை மன்னித்தருள்க' என்று பெருமாளின் திருப்பாதத்தில் விழுந்து வணங்கினார் அனந்தாழ்வான். அப்போது, ‘பக்தர்களின் கஷ்டத்தைப் போக்கத்தான் நான் இங்கு குடிகொண்டிருக்கிறேன். என் பக்தை ஒருவள் கஷ்டப்படுவதைக் கண்டு வேடிக்கை பார்க்க எனது மனம் எப்படி இடம் கொடுக்கும்' என்று அந்த அசரீரி மீண்டும் ஒலித்தது .

அதைத் தொடர்ந்து பெருமாளின் தாடையில் வழியும் ரத்தத்தை நிறுத்த வழி தெரியாமல் அர்ச்சகர்கள் குழம்பினர். அப்போது, 'சுவாமியின் தாடையில் பச்சைக்கற்பூரத்தை வைத்து அழுத்துங்கள். ரத்தம் வழிவது நின்றுவிடும்' என்றார் அனந்தாழ்வான். அர்ச்சகர்களும் மூலவரின் கீழ்தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைக்க, ரத்தம் வழிவது நின்றது. இதை நினைவுபடுத்தும் விதமாகவே திருப்பதி பெருமாளின் தாடையில் இன்றும் பச்சைக் கற்பூரம் வைக்கும் வழக்கம் தொடர்கிறது.

இப்போது முதலில் சொன்ன கடப்பாரை விஷயத்துக்கு வருவோம். திருப்பதி திருமலையின் தண்ணீர்த் தேவையைத் தீர்த்துவைக்கும் குளமான 'கோகர்ப்ப ஜலபாகம்' என்னும் குளத்தை வெட்ட, பல நூறு ஆண்டுகளுக்கு முன் அனந்தாழ்வானால் பயன்படுத்தப்பட்ட கடப்பாரைதான் அது. பெருமாளின் திருமேனியை ஸ்பரிசிக்கும் வாய்ப்பு அந்தக் கடப்பாரைக்குத்தான் கிடைத்தது என்பதை அறியும்போது அனைவரின் வியப்பு பன்மடங்கு கூடும். திருமலையில் இன்றைக்கு எங்கு பார்த்தாலும் மலர்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனத்தை முதலில் அமைத்த அனந்தாழ்வான்தான், அந்தக் குளத்தையும் ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com