பௌர்ணமியில் அம்பிகை பூஜை!

பௌர்ணமியில் அம்பிகை பூஜை!
Published on

– பொ.பாலாஜிகணேஷ்

முழு நிலவு காணும் பௌர்ணமி தினங்களில் அம்பிகையை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது என்று சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீ சக்ர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு நித்யைகளாக மகா திரிபுரசுந்தரியாக பூரண ஒளியுடன் பௌர்ணமியன்று திகழ்வதாகப் புராணங்களும் சாஸ்திரங்களும் கூறுகின்றன.

ஒளிமயமான அன்னை பராசக்தியை, பௌர்ணமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்யும்போது அம்பிகையின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று விசேஷமான பலன்கள் நமக்குக் கிடைக்கின்றன.

கிரகங்களின் அதிர்வு பெற்ற நாள் பௌர்ணமியாகும். ஏழு கிரகங்களுக்குரிய நாட்கள் சேரும்போது (வாரத்தில் ஞாயிறு, திங்கள் என்று எந்த நாளில் பௌர்ணமி வருகிறதோ) அதற்கேற்ப மனிதனின் அறிவு, புத்தி, மனம் மற்றும் சரீரத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

துர்கையென்றால் துக்கங்களை அழிப்பவள் எனப் பொருள். பௌர்ணமியில் அன்னை துர்கா தேவி, 'ஸ்ரீ சந்திரிகா' எனப் பெயர் கொண்டு பிரகாசித்து அருள்பாலிக்கிறார். துர்கா தேவியை பௌர்ணமியில் முறைப்படி வழிபட்டு வந்தால் விரும்பியதெல்லாம் நிறைவேறும்.

இனி, வாரத்தின் ஒவ்வொரு கிழமையிலும் வரும் பௌர்ணமியில் அம்பிகையை வழிபட்டால் என்னென்ன சிறப்பான பலன்கள் கிட்டும் என்று சித்தர்கள் கூறியவற்றில் இருந்து சிலவற்றைக் காண்போம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பௌர்ணமியன்று அம்பிகைக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, செந்தாமரை மலர்கள் சூட்டி, செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இன்று செவ்வாழைப்பழம், சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாகப் படைத்து வழிபடுவது சிறப்பு. இவ்வாறு வழிபடுவதால் தீராத நோய்கள் தீரும். மேற்கொண்டு எந்த நோயும் ஒருவரை அணுகாது.

திங்கட்கிழமைகளில் வரும் பௌர்ணமியன்று அம்பிகைக்கு ஆரஞ்சு நிற ஆடையணிவித்து, மந்தாரை, மல்லிகை மலர்கள் சாத்தி, இதே மலர்களினால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். செய்யும் தொழிலில் உயர்வு மற்றும் வேலை வாய்ப்பு கிட்டும்.

செவ்வாய்க்கிழமைகளில் வரும் பௌர்ணமி நாட்களில் அம்பிகைக்கு
வெண் பட்டாடை அணிவித்து, செவ்வரளி பூ மற்றும் சிவப்பு நிற பூக்களினால் அர்ச்சனை செய்து, சித்திரான்னம், தேன், பழங்களை நிவேதனமாகப் படைத்து வழிபட வேண்டும். இதனால் வறுமை நீங்கும். கடன் தொல்லை ஒழியும். கிரக தோஷங்கள், பில்லி, சூனியம் அகலும்.

புதன்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தில் அம்பாளுக்கு பச்சைப் பட்டாடை அணிவித்து, முல்லை, நறுமணமுள்ள மலர்களால் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சனை செய்து, பால் பாயசம், பழ ரசங்கள், பஞ்சாமிர்தத்தை நிவேதனமாகப் படைத்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டால் அறிவு வளரும், கல்வியில் அளப்பரிய முன்னேற்றம் காணலாம். ஞாபக சக்தி அதிகரிக்கும். சந்தான பாக்கியம் கிட்டும்.

வியாழக்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தில் அம்பிகைக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து, மஞ்சள் நிற (பொன்நொச்சி, பொன்னரளி) நறுமணமுள்ள மலர்களால் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.
சுண்டல், தயிர் சாதம், பழங்கள் நிவேதனமாகப் படைத்து வழிபட வேண்டும். இதனால் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணத் தடைகள் அகலும்.
சகல விதமான தடைகளும் நீங்கும். தேர்வுகளில் வெற்றி கிட்டும்.

வெள்ளிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி நாட்களில் அம்பிகைக்கு பொன்னிற ஆடை அணிவித்து, மல்லிகை மலர்கள் சூட்டி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து, முக்கனிகள், கல்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனமாகப் படைத்து வழிபடவும். இதனால் திருமணத் தடைகள் அகலும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். பண வரவு அதிகரிக்கும். வாராக் கடன்கள் வசூலாகும்.

சனிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தன்று அம்பாளுக்கு நீல நிற ஆடை அணிவித்து, மருக்கொழுந்து, நீலநிற காக்கணம் (சங்குப்பூ) சாத்தி, அதே மலர்களால் அர்ச்சித்து, காய்கறிகள், எள் அன்னம், பால், தேன், தயிர், நெய், கற்கண்டு ஆகியவற்றை நிவேதனமாகப் படைத்து வழிபடவும். இதனால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும். கடன் பிரச்னை தீரும். நோயில்லா வாழ்வு கிட்டும்.

பொதுவாக, பூரண நிலவு தினமான பௌர்ணமியில் உண்மையான பக்தியுடன் முறைப்படி அம்பிகையை பூஜை செய்து வழிபாடு செய்பவர்கள் கிரக தோஷங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம் என்பது ஆன்றோர் அருள்வாக்கு.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com