தெய்வ பிரசாதங்கள்!

தெய்வ பிரசாதங்கள்!
Published on
காஞ்சிபுரம் இட்லி பிரசாதம்
காஞ்சிபுரம் இட்லி பிரசாதம்

* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு, மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்தியம்.

* சீர்காழி, சட்டநாதர் கோயிலில் தேங்காய் உடைப்பதில்லை. அப்படியே மட்டையோடு முழுவதுமாக நிவேதனம் செய்கிறார்கள்.

* மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும் இரவில் பள்ளியறையின்போது கமகமக்கும் சுண்டலும் பாலும் நிவேதனம் செய்யப்படுகிறது.

* மதுரை அழகர்கோயில் தோசை பிரபலமானது. முழு உளுந்தை ஊற வைத்து பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும் தோசைதான் இறைவனுக்கு நைவேத்தியம்.

* சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதம் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய் துருவலும், துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு.

* திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கே தினசரி பிரசாதம்.

* திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரையன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது.

* திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோயிலில் ஆத்மநாதருக்கு புழுங்கலரிசி சோறும் பாகற்காய் கறியுமே பிரசாதம்.

முக்தாபி சூரணம்
முக்தாபி சூரணம்

* ஸ்ரீமுஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்துக்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த பிரசாதம் நோய்களைத் தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகிறது.

* திருச்சி, கோயிலடி அப்பக்குடத்தானுக்கு தினமும் அப்பம் நிவேதனம் செய்யப்படுகிறது.

* குற்றாலம் குற்றாலநாதருக்கும் குழல் வாய்மொழி அம்மைக்கும் நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது. அருவியால் அவருக்கு தலைவலியும், ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த நிவேதனம்.

* திருநெல்வேலி, பூமாதேவி அம்மன் ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று கூட்டாஞ்சோறும் சர்க்கரைப் பொங்கலும் நிவேதனம் செய்வர். துவரம் பருப்பு, அரிசி, காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காய் அரைத்துவிட்டு தயாரிக்கப்படுவதுதான் கூட்டாஞ்சோறு.

* நெல்லையில் உள்ள புட்டாபிரத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி, வெல்லம், ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் புட்டுதான் பிரசாதம்.

* கொல்லூர் மூகாம்பிகைக்கு இரவு அர்த்த ஜாம பூஜையின்போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் மணமிக்க கஷாயம் பிரசாதமாகத் தரப்படுகிறது.

* கேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து, பின்பு பிரசாதமாக தருவர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கும்.

* கேரளம், இரிஞாலக்குடா பரதன் ஆலயத்தில் கத்திரிக்காயால் தயாரிக்கப்பட்ட, ‘வழுதனங்கா’ எனும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

* திருவனந்தபுரத்தில் அருளும் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் சர்க்கரை, பால் மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் பாயசமே பிரசாதமாகும்.

* புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்பிரமணிய சுவாமிக்கு அந்திக்கால பூஜையின்போது சுருட்டு நிவேதனம் செய்யப்படுகிறது.

* தஞ்சாவூரில் உள்ள பங்காரு காமாட்சி அம்மனுக்கு காணும் பொங்கலன்று உடைக்காத முழுத் தேங்காய் நிவேதனம் செய்யப்படுகிறது.

* பூரி ஜகன்னாதருக்கு நாள்தோறும் ஐம்பத்தாறு வகையான பிரசாதங்கள் நைவேத்தியம் செய்யப்படுகின்றன. காலை பதினொரு மணி முதல் ஒரு மணி வரையில் பல பானைகளில் சாதம், காய்கறி, குழம்பு கூட்டு முதலியவற்றை நிவேதனம் செய்கிறார்கள்.

* கோரைக்கிழங்கைப் பக்குவமாகச் சமைத்துப் பகவானுக்குப் படைக்கும் ஒரே தலம் ஸ்ரீமுஷ்ணம்.

* கன்னியாகுமரி அருகே உள்ள பழுவூர் சிவாலயத்தில் உள்ள ஆனந்த நடராஜருக்கு சீனிப்புட்டு படைத்து நைவேத்தியம் செய்வர். பச்சரிசி மாவு, மாச்சீனி, நெய், ஏலக்காய் கலந்து இந்த சீனிப்புட்டு தயாரிக்கப்படுகிறது.

* திருச்செந்தூர் ஆறுமுகப் பெருமாளுக்கு மொச்சை, பாசிப்பருப்பு, உளுந்து, துவரை, கொள்ளு, வெல்லம், பசு நெய் சேர்த்து புதிய மண் பானையில் செய்யப்படும் பிரசாதத்துக்கு, ‘கும்மாயம்’ என்று பெயர்.

* யமுனோத்ரியில் ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது. அங்கு கொஞ்சம் அரிசியையும், சிறிது உருளைக் கிழங்கையும் துணியில் கட்டிக் கொடுக்கிறார்கள். அதை அந்த வெந்நீர் ஊற்றில் சில வினாடிகள் வைத்து எடுக்கிறார்கள். அப்போது முற்றிலுமாக அது வெந்து விடுகிறது. யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு இதையே பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com