பிப்ரவரி 18 மகா சிவராத்திரி தினம்! கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் 17ம் தேதி தொடங்குகிறது. இதற்காக பக்தர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். சிவபெருமானுக்கு உகந்த சிவராத்திரி நாளில் அவரது அருள் வேண்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பன்னிரெண்டு சிவாலயங்களுக்கு ஓட்டமாகச் சென்று வழிபடுவதே சிவாலய ஓட்டம் ஆகும். முன்சிறை அருகே திருமலை மகாதேவர் ஆலயத்தில் இருந்து தொடங்கி, திக்குறிச்சி மகாதேவர், திற்பரப்பு வீரபத்திரர், திருநந்திக்கரை நந்தீஸ்வரர், பொன்மனை தீம்பலான்குடி மகாதேவர், திருப்பன்னிப்பாக்கம் மகாதேவர், கல்குளம் நீலகண்டசாமி, மேலாங்கோடு மகாதேவர், திருவிடைக்கோடு மகாதேவர், திருவிதாங்கோடு மகாதேவர், திருப்பன்றிக்கோடு மகாதேவர், திருநட்டாலம் சங்கரநாராயணர், ஆகிய பன்னிரெண்டு சிவாலயங்களுக்கு பக்தர்கள் ஓட்டம் மேற்கொள்வர்.
இந்த 110 கி.மீ. தொலைவு கொண்ட ஓட்டத்தில் பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்பர். இந்த ஓட்டத்தில் பங்கேற்போர் ஆலயங்களில் உள்ள குளங்களில் நீராடி விட்டு, ஆலயங்களுக்குள் செல்ல வேண்டும் என்பதும், கையில் வைத்திருக்கும் விசிறியால் சுவாமிக்கு வீசிற வேண்டும் என்பதும் ஐதீகம். பக்தர்கள் காவி உடை அணிந்து, கையில் விசிறியுடன், ‘கோபாலா... கோவிந்தா... என்ற நாம கோஷத்துடன் ஒவ்வொரு ஆலயமாகச் சென்று சுவாமி தரிசனம் செய்வர்.
இது சம்பந்தமாக இரண்டு கதைகள் உள்ளன! ஒன்று மகாபாரதத்துடன் தொடர்பு உடையது. அதில் தருமரின் யாகத்துக்காக புருஷா மிருகத்தின் பால் பெற பீமன் சென்றதாக உள்ளது. துண்டோதரன் என்ற அரக்கன் தவம் செய்து சிவனிடம் வரம் பெற்று, அந்த வரத்தை அவரிடமே சோதித்துப் பார்க்க முயன்றபோது சிவபெருமான், ‘கோபாலா... கோவிந்தா’ என அழைத்தவாறு ஓடியதாகவும் இறுதியில் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அசுரனை அழித்ததாகவும் மற்றொரு கதை உள்ளது.
இதில் மகாபாரதத்துடன் தொடர்புடைய கதையில் புருஷா மிருகத்தின் பால் பெறச் சென்ற பீமன், கிருஷ்ணரின் உபதேசப்படி ருத்ராட்சங்களை போட்டுச் சென்ற இடங்களே சிவத் தலங்களாயிற்று என்றும், துண்டோதரன் கதையில் சிவபெருமான் பதுங்கி இருந்த இடங்களே சிவத் தலங்களாயிற்று என்றும் நம்பப்படுகிறது.
சிவாலய ஓட்டத்தின் முதல் கோயிலான முன்சிறை மகாதேவர் ஆலயத்தில் சந்தனமும், ஓட்டம் நிறைவடையும் திருநட்டாலம் சங்கரநாராயணர் ஆலயத்தில் வீபூதியும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருநட்டாலம் ஆலயத்தில் சுவாமி சிவன்-விஷ்ணு என்று சங்கரநாராயணராக எழுந்தருளியுள்ளது சைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக உள்ளது.
ஓட்டமாகவும், நடந்தும் செல்வோரும் பிப்ரவரி 17ம் தேதி பிற்பகலில் தொடங்கி, 19ம் தேதி அதிகாலை நிறைவு செய்வர். வாகனங்களில் செல்வோர் 18ம் தேதி காலையில் தொடங்கி, 19ம் தேதி அதிகாலையில் நிறைவு செய்வர்.