கார்த்திகை 1ம் தேதி ஆரம்பித்து தை மாதம் 1ஆம் தேதி அன்று மகரஜோதி தரிசனத்தை காணும் வரையிலும் கடுமையான விரதத்தை கடைபிடித்து ஐயப்பனுக்கு விரதம் இருப்பதே மிக சிறந்த விரதம் ஆகும்.
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க முடிவெடுத்துவிட்டால் மாலை அணிந்து விரதம் இருப்பதற்கு முன்பாக முதலில் தன்னுடைய அப்பா அம்மா மற்றும் தன்னுடைய குருசாமியிடம் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தகவல் தெரிவித்து அனுமதி வாங்கி விட வேண்டியது அவசியமாகும்.
மாலையைத் தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். மாலை துளசி மாலையையும் ருத்ராட்சி மாலையையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த மாலைகளில் கண்டிப்பாக 108 மணிகள் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
ஐயப்பன் ஹரிஹர புத்திரன் என்பதால் துளசி மற்றும் ருத்ராட்சம் என இரண்டு மாலையும் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.
மாலை செம்பு, வெள்ளியால் ஆனது என்றால் பல ஆண்டுகளுக்கு அணிந்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மாலையை அணிவதற்கு முன்பாக பூஜை அறையில் சுத்தமான பசும்பாலில் ஊற வைக்க வேண்டும். மாலை அணியும்போது ஐயப்பனின் மூல மந்திரத்தை மனதார சொல்ல வேண்டும்.
அதேபோல் மாலையை கோவிலிலோ அல்லது தன்னுடைய தாயாரின் முன்னிலையிலோ மாலை அணிந்து அவரின் ஆசியை வாங்க வேண்டும்.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரத காலங்களில் கருப்பு நீலம் ஆரஞ்சு காவி போன்ற நிறங்களில் உள்ளது அணிதல் வேண்டும்.
விரதம் இருக்கும்போது மது, சிகரெட் போன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்தக்கூடாது.
விரதம் மேற்கொள்பவர்கள் விரத காலத்தில் அதிகாலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் இதனால் உடலும் மனமும் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும்.
விபூதி, சந்தனம், குங்குமம், போன்றவற்றை தரித்து தினமும் பூஜைகள் செய்து அவரவர் வசதிக்கேற்ப 108 அல்லது 1008 சரண கோஷங்கள் முழங்க வேண்டும்.
விரத காலம் முழுமையும் ஒருவேளை அளவோடு சைவ உணவருந்தி இரவில் பழம் பால் போன்ற இலகு ஆகாரங்கள் உட்கொண்டு உபவாசம் இருக்க வேண்டும்.
மாலை போட்டிருக்கும்போது பகல் நேரத்தில் உறங்குவதை தவிர்க்க வேண்டும். இரவில் தூங்கும்போது தலையணை மெத்தை போன்றவற்றை தவிர்த்து தரையில் வெறும் துண்டு அல்லது எதுவும் விரிக்காமல் படுத்து உறங்க வேண்டும் என்பது ஐதீகம்.
விரத காலத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டாம். மற்றபடி சாதாரணமாக சீகைக்காய் சோப்பு உபயோகிப்பதில் தவறில்லை.
மாலை போட்டுக்கொண்டு விரதம் இருக்கும் சமயத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு அம்மை கண்டிருந்தால் அதை வீட்டில் இருக்கும் பட்சத்தில் மாலையை கழட்டுவது உத்தமம். ஆனால் தாங்கள் வெளியே எங்கும் தங்கி இருந்தால் மாலையை கழட்ட வேண்டிய அவசியம் இல்லை.
முதல் வருடம் மலைக்குச் செல்லும் ஐயப்பன்மார்கள் கன்னி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.
ஐயப்பனை கற்பூர தீப பிரியன் என்று அழைப்பார்கள். ஐயப்பனுக்கு பிடித்தமான ஆராதனையில் தீபாராதனை முக்கியமானது. விரதம் இருந்து வழிபடும் ஒவ்வொரு நாளிலும் பூஜையை தொடங்கும் போதிலிருந்து முடியும் வரை இறைவனுக்கு தீபாரதனையை காட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
சபரிமலை யாத்திரையின்போது வழிப்பாதைகளிலும் கூட மாலை நேரங்களில் எங்காவது கற்பூரமேற்றி ஐயப்பன் சரண கோஷங்களை ஒலித்து வழிபாடு செய்ய வேண்டும் என்பது விதிமுறை.
இருமுடி நீலம் காவி அல்லது கருப்பு நிற துணியில் பூஜை பொருட்களை குருசாமி முன்னிலையின் நிரப்ப வேண்டும். துணியை இரண்டு பகுதிகளாக பிரித்து தேங்காய் பச்சரிசி வாழைப்பழம் அவல் பொரி சந்தனம் பத்தி விபூதி குங்குமம் மஞ்சள் பொடி வெல்லம் கல்கண்டு உண்டியல் காசு ஆகியவற்றை வைக்க வேண்டும். பின் முடியில் தனக்கு தேவையான உணவுப்பொருளை வைத்துக் கொள்ள வேண்டும். சபரிமலை பயணத்தை தொடங்கிய தருணத்திலிருந்து இருமுடி தலையிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்வது சிறப்பான பலனை தரும்.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஆலயத்திற்குள் நுழைந்ததும் தாங்கள் கொண்டு சென்ற நெய் தேங்காய் உடைத்து ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். நெய்யபிஷேகம் செய்ய தேவஸ்தான அலுவலகத்தில் இருந்து ரசிது பெற வேண்டும். அபிஷேகம் செய்த நெய்யை அர்ச்சகர் ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீண்டும் பக்தருக்கு கொடுப்பார். இந்த நெய் ஒரு புனிதமான மருந்து என்பதால் பக்தர்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு வருவர்.