கடவுட்பற்றும், வழிபாடும் அத்வைத சாதனைக்கு இன்றியமையா அம்சமாகும்.

அத்தியாயம் - 15
கடவுட்பற்றும், வழிபாடும் அத்வைத சாதனைக்கு   இன்றியமையா அம்சமாகும்.
Published on

ங்கரர் வணங்கி வழிபட்ட சைவத்தலங்களில், ராமேஸ்வரம், திருவிடைமருதூர், சிதம்பரம், ஸ்ரீ சைலம், உஜ்ஜயினி, நீலகண்ட க்ஷேத்திரம் எனும் நேபாளம், கேதாரம் போன்றவற்றை நாம் ஏற்கனவே பார்த்தோம். 

தவிர்த்து, சௌராஷ்டிரத்தில் உள்ள சோமநாதர் ஆலயத்திற்கும், கோதாவரி நதி உற்பத்தித் தலமான நாசிக்கில் உள்ள திரியம்பகேஸ்வரர் ஆலயத்திற்கும், மேற்குக் கடலோரத்தில் உள்ள கோகர்ண க்ஷேத்திரத்திற்கும் சங்கரர் சென்று வழிபட்டுள்ளார். 

கர்நாடகத்தில்  மைசூர்ப் பகுதியில் உள்ள ஹரிஹரம் என்ற தலத்திற்குச் சங்கரர் விஜயம் செய்ததைப் பற்றி ஒரு சுவையான கதை உண்டு. 

அந்தக் காலத்தில் ஹரிஹரம் ஒரு வைணவக் கோட்டையாய் இருந்தது. சங்கரர் அங்குச் சென்று தரிசனம் செய்ய விரும்பினார். ஆனால், அங்கு இருந்தவர்கள் சங்கரரின் சந்நியாசிக் கோலத்தையும், அவர் உடலில் அணிந்திருந்த சிவ சின்னங்களான விபூதி, ருத்ராட்சம் போன்றவற்றைப் பார்த்து அவரை உள்ளேவிட மறுத்து விடுகின்றனர். 

அப்போது சங்கரர் மிக விரிவாகப் பேசத் தொடங்கி, சிவன், விஷ்ணு என்று இரு தெய்வங்களுக்கும் வேறுபாடு கிடையாது என்பதை எடுத்துக் கூறி அந்தக் கோயிலின் உள்ளே இருக்கும் மூர்த்தி வடிவம் சிவன், விஷ்ணு இருவரையுமே பிரதிபலிக்கும் ஒன்றுதான் என விவரித்தார். அவர் கூற்றினை ஒப்புக்கொண்ட அதிகாரிகள் கதவைத் திறந்து அவரை உள்ளே அழைத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்த விஷ்ணு பக்தர்கள் அனைவரும் வியப்பு அடையும் வகையில் கோயிலில் இருக்கும் வடிவம் பாதி சிவனாகவும், பாதி விஷ்ணுவாகவும் தோற்றமளித்ததாம். அதுவே ஹரிஹரம் ஆயிற்று  . (ஹரி- விஷ்ணு, ஹர-சிவன்) 

சக்தி வழிபாட்டு முறையான சாக்த சமயம் மிகவும் தரம் கெட்டு, தாழ்ந்து போயிருந்த காலம் அது. அன்னை சக்தி பல கோயில்களில் இரத்த வெறி படைத்த  தெய்வமாக ஆக்கி விட்டிருந்தார்கள். சங்கரர் அங்கெல்லாம் சீர்திருத்தம் செய்து, உக்கிரம் என்று கருதப்பட்ட சக்தியின்  மும்மூர்த்திகளை எல்லாம் (உலகத்தின்) தாய் வடிவமாக, அருள் மிகுந்த தெய்வமாக மாற்றி அமைத்தார். அத்தகைய அகில உலகத் தாய் தெய்வத்தின் கோயில்கள் பலவற்றில் சங்கரர் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். அப்படி செய்ததன் மூலம் அன்னை அனைத்து உலகங்களுக்கும் செய்யும் அருள் சக்தியை வளப்படுத்தினார். 

அலகாபாத்தில் உள்ள தேவி கோயிலிலும் சங்கரர் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்தார். மேற்குக் கடலோரத்து மூகாம்பிகை சந்நிதியில் அந்தக் காலத்தில் சக்தி மிகவும் உக்கிரமமான இயல்புடன் இருந்தாள். 

அந்த சந்நிதி சாக்தர்களுடைய கைப்பிடியில் இருந்தது. அங்கும் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்து. அந்தத் தேவியை அருள் மிகுந்த சாத்வீக தெய்வமாக மாற்றி அமைத்தார்.

திருவொற்றியூர் சந்நிதியிலும் அப்படியே செய்தார். திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி சந்நிதியின் உட்பிரகாரத்தில் சங்கரர் விக்கிரகம் இருக்கிறது. 

சங்கரர், மீனாட்சி அம்மன் கோயிலிலும், திருச்சி மலைக்கோட்டை  கோயிலுக்கும் சென்று வழிபட்டார். அங்கு சுகந்த ‘குந்தளாம்பிகை’ என்ற தேவியின் கோயிலின் கற்சுவரில் சங்கரரின் சௌந்தர்ய லஹரி ஸ்தோத்திரம் செதுக்கப்பட்டுள்ளது. 

சங்கரர் காமாட்சி தேவியின் ஆட்சி அமைந்த காஞ்சி மாநகருக்கு விஜயம் செய்தது  மிகவும் முக்கியமான ஒன்று. 

வீடு பேறு என்னும் உறுதிப்பயனை அடையத் துணை செய்யும் ஊர்களை மோட்சபுரிகள் என்பர். காஞ்சிபுரம் மிகவும் புண்ணியத் தலைமையுள்ள புண்ணிய க்ஷேத்திரம் என்பார்கள். அன்னை பராசக்தி அந்த நகரம் முழுதும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய ஆகாசமாய் வியாபித்திருக்கிறாள். 

சங்கரர் காஞ்சிக்குச் சென்று காமாட்சி கோயிலை அடைந்தபோது அங்கிருந்த ஒரு குகையில் அவர் அன்னையை தரிசனம் செய்தார். அன்னையின் அருட் பெருக்கையும், உலகத்திற்கு நன்மையே செய்யும் அவரது நல்லியல்பையும் வெளிப்படுத்தும் கருணையுடைய சங்கரர் அவளுடைய சந்நிதியின் எதிரே ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். தானே நேரில் அமர்ந்து அந்தச் சக்கரத்தை வரைந்ததாக கூறுகிறது சித்விலாச சங்கர விஜயம். 

ஆனந்தகிரி சங்கர விஜயமும் இதை விவரித்து அதன் சிறப்பம்சங்களை எடுத்துரைக்கிறது.

ங்கரர் இவ்வாறு பல கோயில்களுக்கும் சென்று வழிபட்டதோடு நில்லாமல், பக்தர்களின் நலம் கருதி... பல்வேறு தெய்வங்களின் பெயர்களில் அழகிய துதிப்பாடல்கள் பாடினார். அத்தகைய நூல்களில் புகழ் பெற்றவை "சிவானந்த லஹரி","சௌந்தர்ய லஹரி","ஹரி துதி", மற்றும் "தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்". ஆகியவை. 

சுமார் நூற்றி இருபது துதி நூல்கள் சங்கரர் பெயரில் வழங்குகின்றன. ஆனால், அவை அனைத்துமே  சங்கரர் இயற்றியவை என  கூற முடியாது...என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. அதற்கான காரணங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. 

உதாரணமாக, இந்த நூல்களில் சம்சாரம் என்று, பிறவிக் கடலின் துன்பங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. முதுமைப் பருவத்தின் வேதனைகளையும், இல்லற வாழ்வின் இன்னல்களும் போன்றவை மிகுந்த உருக்கம் வாய்ந்து நெஞ்சத்தைத் தொடும் சொற்களால் வர்ணிக்கப்படுகின்றன. சங்கரர் அவற்றை இயற்றி இருக்க இயலாது என்பது ஒரு வாதம். 

இதற்குத் தெளிவான விடை - பிறவித் துன்பங்களை ஒருவர் தானே நேரில் அனுபவித்துத்தான் உணர முடியும் என்பது அவசியமில்லை .சங்கரர் மண்ணுலக மக்களாகிய நமக்காகவே நாம் அவற்றைப் பாடி பக்தி கொள்வதற்காகவே இவற்றை அருளினார். ஆகவே நாம் உணர்ந்து உருகிப் பேசும் சொற்களைக் கையாண்டிருக்கிறார். 

அத்வைதியான சங்கரர், பல்வேறு பெயரும், வடிவமும் உடைய தெய்வங்களைத் துதித்துப் பாடியது அவருடைய சித்தாந்தத்துக்கு பொருத்தமற்றது என்றும் நாம் கூறுவதற்கில்லை. ஏனென்றால் அத்வைதம் கடவுள் கொள்கைக்கு முரண்பட்டதோ அல்லது  கடவுள் இல்லை என்ற நாத்திகக் கோட்பாடோ அன்று. கடவுட்பற்றும், வழிபாடும் அத்வைத சாதனைக்கு ஒரு இன்றியமையா அம்சமாகும். 

 சில துதி நூல்கள் சங்கரர் பெயரால் வழங்கினாலும் அவை அவர் பெயரால் இயற்றப்படாதவை என்று கூறலாம். அப்படியே ஆனாலும்  சங்கரரே இயற்றியவை என ஐயத்திற்கு இடமின்றி ஏற்கப்பட்டுள்ள சில நூல்களில் அவர் கடவுளின் பல்வேறுபட்ட வடிவங்களையும், பெயரையும் போற்றி பாடித்தான் இருக்கிறார். அதற்குக் காரணம் பக்தனாய் இருக்கும் ஒரு சாதகன், குறுகிய நெறிகளையும், வறட்டுக் கொள்கைப் பிடிவாதங்களையும் அகற்றி நடுநிலைமையையும், ஒருமைப்பாட்டையும் கொண்ட தத்துவத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்பதே. 

சங்கரரின் பாஷ்யங்கள் என்னுன் விரிவுரைகள் அனைத்தையும் அவரே செய்தனையவா என்பது பற்றிய கேள்விக்கே இடமில்லை. 

உபநிஷத்துகள் - பகவத் கீதை, பிரம்ம சூத்திரம் என்ற மூன்றும் வேதாந்தத்தின் அடிப்படையான மூன்று நூல்கள்,பத்து உபநிஷத்துகளே தலைமையானவை. 

ஈசோபநிஷத், கேனோபநிஷத், கடோபநிஷத், பிரச்னோபநிஷத், முண்டோகோபநிஷத், சாந்தோகியோபநிஷத், பிரகதாரண்யக உபநிஷத். இவற்றில் கடைசி இரண்டும் அளவில் மிக நீண்டவை. சங்கரர் இந்த பத்துக்கும் விரிவுரை எழுதினார். சில உபநிஷத்துகளுக்கும் உரை எழுதியுள்ளார். 

பகவத் கீதை உரையில்... அவர் அந்த நூலின் உட்கருத்தை அறுதியிட்டுக் கூறும் போது - உபநிஷத்துகளைப் போலவே கீதையும் கர்ம சந்நியாசத்தையே போதிப்பதாகக் காட்டுகிறார். 

செயல்களை அறவே துறத்தல் - அதாவது செயல்களின் கருவி காரணங்களுடன் தன்னை இணைத்து உணராமை - இதுவே கர்ம சந்நியாசம். 

மேலும் "ஸங்கத் யாகம்" அதாவது... செயல்களின் பயனை விரும்பாது துறத்தல்  என்பது மட்டும் போதாது. செயல்களை செய்வது தானே என்ற எண்ணத்தையும் துறக்க வேண்டும் என எடுத்துக் காட்டுகிறார். பிரம்ம சூத்திர பாஷ்யத்தில்... அந்த நூல் வாயிலாக வியாசர் போதிப்பது அத்வைதமே என நிறுவ முயல்கிறார். அந்த பாஷ்யங்களைத் தவிர வேறு பல அத்வைத கையேடுகளையும் சங்கரர் இயற்றியுள்ளார். மேலே கூறிய பாஷ்யங்களை பிரஸ்தானங்கள் என்றும், பின் கூறியவற்றை பிரகரணங்கள் என்றும் புகழ் பெற்றவை, "உபதேசஸாஷஸ்ரி", "விவேக சூடாமணி", "ஆதம்போதம்" ஆகியவை. 

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com