“உள்ளது...உள்ளவாறு முறைப்படி செய்வதே தர்மமாகும்”

“உள்ளது...உள்ளவாறு முறைப்படி செய்வதே தர்மமாகும்”
Published on

ங்கரர்,ஆங்காங்கே சென்று அத்வைதத்தை நிலைநாட்டவும்,வேறு பல கொள்கைகளையும், சமயங்களையும், அவற்றிலுள்ள தவற்றைக் காட்டி மறுத்து...அவற்றைச் சார்ந்தவர்களை வென்று போராடும் காலம் வந்து விட்டிருந்தது. அவர் எதிர்த்து போராட வேண்டிய தீயசக்திகள்,வேதத்தையே ஆதாரமாகக் கொண்ட வைதீக மார்க்கத்துள்ளேயும்  சில இருந்தன. வேறு சில புறச் சமயவாதிகளும் இருந்தனர். வைதீகமான கொள்கைகள்... வைதீகத்திற்கு மாறுபட்ட கொள்கைகள் ஆகிய இரண்டுமே அப்போது ஒருவகையில் ஏற்றம் பெற்றன. எப்படியெனில்... அவற்றைப் பின்பற்றியவர்களை நேரில் சந்தித்து... அவர்களுடைய சமயக் கொள்கைகளில் இருந்த சில நம்பிக்கைகளையும்...நடைமுறைகளையும் அவற்றில் இருந்த தவறுகளையும் ...முறையற்ற நிலைகளையும் எடுத்துக் கூறி அவர்களை உணருமாறு செய்தார்.

அக்காலத்தில் எல்லா இடங்களிலும் பரவி மிகவும் சக்தியுடன் விளங்கிய ஒரு வைதீகக் கொள்கை பூர்வ மீமாம்சை (வேதத்தின் பொருளை விளக்கி உரைப்பது மீமாம்சை என்ற சாத்திரம்).வேதத்தினை (வழிபாடு) ,ஞானம் (தத்துவம்) என்பவற்றை விளக்குவது ‘உத்தர மீமாம்சை’ என்றும் பெயர் பெற்றுள்ளன).

பூர்வ மீமாசையின் கொள்கைப்படி வேதம் முழுவதற்கும்...நோக்கமும்...பயனும்...மதச்சடங்குகள்-மதம் தொடர்பான கடமைகளான ‘யாகம்‘ போன்ற  கர்மங்கள் என்பவையே. அதுவே, ‘தர்மம்‘ எனப்படுவதாகும்.இது தவிர, ‘ஆத்மா‘ என்றும் ‘பிரம்மம்‘ என்றும் கூறும் அத்வைத தத்துவம் வேதத்தின் நோக்கமும் அன்று... பயனும் அன்று... என்பதாகும்.

மீமாம்சர்கள் வேதத்தைப் பற்றி கொண்டிருந்த இந்த பொருத்தமில்லாத கொள்கையை திருத்துவதே சங்கரர் செய்ய வேண்டியிருந்த முதல் காரியம்.

மீமாசைக் கொள்கையின் பெருந்தலைவரும்... அறிஞருமான குமாரில பட்டர் என்பவர் பிரயாகையில் (அலகாபாத்) இருந்தார். அவர் முழு கடவுளின் அவதாரம் என்பதே பண்டைய மரபு.

பௌத்தர்கள், வேத தர்மத்துக்கு எதிரியாகப் பரப்பி இருந்த சமயக் கருத்துகளை மறுத்து வேத தர்மங்களை நிலை நாட்டவே முருகக் கடவுள் இந்த அவதாரம் எடுத்ததாகக் கூறுவர்.

இந்த குமாரில பட்டர், இளமைப் பருவத்தில் தன்னை ஒரு ‘பொத்தன்‘ என்று சொல்லிக் கொண்டு, ஒரு பௌத்த பள்ளியில் சேர்ந்து படித்தார்.

அப்படி அவர்களுடன் இருந்து,சேர்ந்து கல்வி கற்றால்தான்... “அவர்களுடைய கருத்துக்களை வன்மையுடன் மறுத்துரைக்க முடியும்“ என்றுதான் அவ்வாறு செய்தார். பின்னர் அவர் பௌத்தர்கள் பலரை வாதம் செய்து வென்று...புத்த மதக் கருத்துக்களை விரட்டி அடித்தார்.

பிறகு வேதங்களை சமயக் கருத்துகளுக்குள்ள ஆதாரம் என்பதை நிலை நாட்டி, வேதங்கள் கூறும் யாகம் முதலிய கர்மங்களை “உள்ளது...உள்ளவாறு முறைப்படி செய்வதே தர்மமாகும்“ என்றும் பழையபடி வேரூன்ற செய்தார். இவ்வாறு “வேதம் மற்ற எதனுடைய துணையும் தேவைப்படாமல் தனக்குத் தானே ஆதாரச் சான்றாக இருக்கிறது“ என்பதை நிலைநாட்டி  சாதிக்கும் வகையில் அவர், “வேதத்தைத் தவிர வேறு கடவுளை எங்கும்...எப்போதும் உள்ளவனும்...யாவற்றையும் அறியவனும் ஆன எல்லாம் வல்ல கடவுள் இருப்பதாக கூட- ஒப்புக்கொள்ளத் தேவையில்லை“ என்ற அளவுக்கு போய்விட்டு இருந்தார்.

சங்கரர் காசியில் இருந்து பிரயாகைக்குச் சென்றார். அங்குதான் கங்கையும், யமுனையும்... உள்ளுக்குள்ளாக ஓடும் சரஸ்வதியுமான மூன்று புண்ணிய நதிகள் சங்கமம். அங்கு சென்று குமாரில பட்டரை கண்டு உரையாடி, தனது வேதாந்த கருத்துகளை அவரை ஏற்குமாறு செய்யவும்... முடிந்தால் தான் எழுதியுள்ள பிரம்ம சூத்திர விரிவுரைகளுக்கு மேலும்  விளக்கமாக வார்த்திகம் எனும் செய்யுள் வடிவமான உரையை எழுத வைப்பதற்கும் பிரயாகை சென்றார். பிரயாகையில் குமாரில பட்டர் பற்றி ஒரு அதிர்ச்சி தரும் செய்தி கேட்டு, அவரைப் பார்க்க விரைந்தார்.

அவர் சென்றபோது மீமாம்சவரரான குமாரில பட்டர், தம்மைத்தாமே அழித்துக் கொள்ளும் ஒரு பிராயச்சித்தம் செய்யத் தொடங்கி இருந்தார். அது மிகவும் பயங்கர கழுவாய்.

கீழே நெருப்பை மூட்டி, அதன் மேல் உமியை நிரப்பி,  அதன் மீது படுத்துக் கொண்டிருந்தார். அவர் மேலும் உமியைக் கொட்டி மூடி இருந்தனர். நெருப்புப் பிடித்த உமித்திரள் மெல்ல மெல்ல அவரை எரித்துக் கொண்டிருந்தது. அவர் இந்த கழுவாய் முடிவை தாம் செய்த இரண்டு பாபங்களுக்காக தமக்குத் தாமே தண்டைனையாக விதித்துக் கொண்டிருந்தார்.

வஞ்சனையாக தன்னை பௌத்தன் என சொல்லிக் கொண்டு பௌத்த ஆசிரியர்களிடம் கற்ற பிறகு, அவர்களுடைய சாத்திரக் கொள்கைகளை மறுத்து ஒழித்தது ஒரு பாபம். மற்றொன்று மீமாம்சை சாத்திரத்தைப் பின்பற்றும் வகையில் கடவுள் இல்லையென்று மறுத்து உரைத்தது.

இந்த நிலையில்தான் சங்கரர் அவரை வந்து பார்த்தார்.

தன் உடல் வெந்து கருகும் நிலையில் இருந்தாலும், குமாரிலர் நல்ல தெளிவுடனும், அமைதியுடனும் இருந்தார். அந்த நேரத்தில் சங்கரர் தன்னுடன் இருப்பதற்கு மகிழ்ந்தார்.

உடல் கருக ஆரம்பித்து விட்டதால்... இனி அதிலிருந்து பின் வாங்குவது இயலாத செயல் என்றவர்...தான் சங்கரரின் வேதாந்த முடிவை ஏற்றுக் கொள்வதாகச் சொன்னவர், “பூர்வமீமாம்சை மட்டுமே மனிதன் பயன் பெறுவதற்குப் போதாது என்பதைக் கட்டாயம் நிலைநாட்ட வேண்டும்“ என்று சொல்லி, அவரை மண்டனமிச்சிரர் என்பவரைச் சென்று பார்க்கும்படியும் யோசனை கூறினார்.

அந்த மண்டனர் பிடிவாதமான மீமாம்சக வேதங்களைக் கற்றவர்.சிறந்த வாதப் புலமையும் உடையவர்..அவர் மாகிஸ்மதி எனும் ஊரில் வாழ்பவர்.

சங்கரர் அங்கு பயணமானார்.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com