அம்மையப்பன் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் பற்றி அறிவோமா?

அம்மையப்பன் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் பற்றி அறிவோமா?
Published on

1. ஆன்மிகவாயிலாக  பெண் உரிமை குறித்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆலயம். ஆணும் பெண்ணும் சரிநிகர் சமமே என்று உணர்த்திட சிவனும் பார்வதியும் இரண்டறக் கலந்து அம்மையப்பனாக  எழுந்தருளியிருக்கும் உலகின் ஒரே தலம். சிவதலமும் வைணவத்தலமும் ஒன்றாக அமைந்து ஆன்மிக ஒற்றுமைக்கு சான்றாக மலை வடிவில். இறைவன்  வீற்றிருக்கும் சிறப்பு மிக்க தலம்.

2. தம்பதிகளின் ஒற்றுமை பெருகி வாழ்வில் சுகம் கிடைக்க இங்கு வீற்றிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் உதவுகிறார். தம்பதிகளின் நலனுக்காகவே இங்கு கேதார கவுரி விரதம் புரட்டாசியில் 21 நாட்கள்  கடைப் பிடிக்கப்பட்டு வருவது சிறப்பு.

3. சிவ வடிவமான ஓங்கார வடிவம் என்பதால் முக்தியளிக்கும் திருவண்ணாமலையின் அத்தனை பலன்களும் திருச்செங்கோடு கிரிவலம் நல்கும். கார்த்திகைத் தீபத் திருவிழாவின்போது அர்த்தநாரீஸ்வரர் தீபம் ஏற்றிய பின்தான் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படும் என்பதே இதற்கு சான்று. 

4. இம்மலைக் கோயில் அடிவாரத்திலிருந்து 650 அடி உயரத்தில் 1206 படிகளைக் கொண்டு அமைந்துள்ளது. செம்மலை, மேருமலை, நாகாசலம், கோதைமலை, தந்தகிரி, கொங்குமலை, பிரம்மகிரி, சோணகிரி, வந்திமலை, அரவகிரி, வாயுமலை எனப் பல பெயர்களுண்டு. தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களில் நான்காவது தலம்.

5.   அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான விறல்மிண்ட நாயனார் பிறந்த பெருமை கொண்டது இத்தலம். ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள் போன்றவர்கள் இங்கு வசித்து வந்ததாக ஆன்மிக தகவல்கள் உண்டு. மாடமாளிகைகளுடனும்  செடிகொடிகளுடனும் பசுமையாக  இருந்த இத்தலக் குன்றானது இயற்கையிலேயே செம்மை நிறத்தில் அமைந்ததால் ‘கொடிமாடச் செங்குன்றம்’ என அழைக்கப்பட்டு, ‘திரு’ என்ற அடைமொழியும் சேர்க்கப்பட்டு பின்னாளில் மருவி ‘திருச்செங்கோடு’ ஆகியது.

6.   சிவப்பிரகாசர் என்ற இயற்பெயர் கொண்ட சிவனடியாரான காளத்திநாதர் சுவாமிகளின் மடம் இக்கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ளது. புகழ் பெற்ற இவர் திருசெங்கோட்டுக்கு முதன்முதலில் வந்தபோது ‘தங்கஅலரி’ எனும் மலர்ச்செடியை கொண்டுவந்து பல இடங்களில் நட்டு வளர்த்து வந்தார். இன்றும் இவ்வகை மலர்கள் அங்கு பூத்திருப்பதைக் காணலாம். இவரின் சமாதியும் திருச்செங்கோடு அருகில் உள்ளது.  

7.   சிற்பங்களுடன் அழகுற அமைந்திருக்கும் திருமுடியார் மண்டபம், தயிலி மண்டபம், தேவரடியாள் மண்டபம், அறுபதாம்படி மண்டபம், இளைப்பாறும் மண்டபம், சிங்கத்தூண்மண்டபம், செங்குந்தர் மண்டபம், கோபுரவாசல் மண்டபம் போன்ற மண்டபங்கள் தெய்வங்களுக்காக மட்டுமின்றி பக்தர்கள் வழிபடுவதற்கு வசதியாகவும் கட்டப்பட்டுள்ளது.

8.   இக்கோயிலின் கருவறையில் அர்த்தநாரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். இங்கு தரப்படும் பிரசாதங்களுள், இறைவனின் பாதங்களுக் கடியில் கோடைகாலத்திலும் வற்றாமல் சுரக்கும் சுனை நீரே மிகவும் முக்கியமானது. இந்த தீர்த்தத்தை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் தொடர்ந்து 21 நாட்கள்  அருந்தும் பக்தர்களின் நோய்கள் குணமாவதை  இங்கு கண்கூடாக காணலாம்.

9.   ஒவ்வொரு திசையிலிருந்து பார்க்கும்போது வெவ்வேறு தெய்வத்தோற்றங்களில் இம் மலையில் காட்சி அளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பு. ஆண் பெண் உருவம், யானையின் தோற்றம், நாகர் படம் எடுப்பது போன்ற தோற்றம், நந்தி உருவம், காளைமாட்டு வடிவம், ஆஞ்சேநேயர் தோற்றம், கைலாயமலை போன்ற பல்வேறு தோற்றங்களை பல்வேறு திசைகளில் இருந்து காணமுடியும்.

10.     வைகாசி விசாகத் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. திருச்செங்கோடு நகரம் முழுவதும் முதல் நிகழ்ச்சியான கொடியேற்றம் முதல் 14 நாட்கள் வரை விரதம் வழிபாடு என ஆன்மிகக் கொண்டாட்டங்கள் நிகழும். இறைவனின் தரிசனத்தை அழகு மிகு தேரில் காண சுற்றியுள்ள நகரங்களில் இருந்தும் மக்கள் திரளாகக் கூடுவது சிறப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com