உங்களுக்கு கடன் பிரச்னையிருக்கா? அப்போ இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள்!

சாரபரமேஸ்வரர்
சாரபரமேஸ்வரர்

அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகில் இன்பமான வாழ்வில்லை. அதுபோல அருள் இல்லாதவர்களுக்கு மேல் லோகத்தில் இன்பமான வாழ்வில்லை என்று திருவள்ளுவர் கூறியிருப்பார்.

பொருள் என்பது நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மிகவும் முக்கியமானதாகும். அதை தேடித்தானே ஓடிக் கொண்டிருக்கிறோம். எனினும் சில நேரங்களில் கடன், அதற்கான வட்டி போன்ற பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம்.

நாம் அனைவருமே கடன் பெற்றவர்கள்தான் என்று சாஸ்த்திரம் கூறுகிறது. ‘தேவரினா’ என்பது கடவுளிடம் பெற்ற கடன்,  ‘ரிஷிரினா’ என்பது முனிவர்களிடம் பெற்ற கடன், ‘பித்ரூரினா’ என்பது முன்னோர்களிடமிருந்து பெற்ற கடன். இப்படி நாம் அனைவருமே கடன் பெற்றவர்கள் தான். இந்த கடனை அடைக்கவில்லை என்றால் திரும்பவும் மறுபிறவி எடுத்து பூமியில் பிறந்து கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று  கூறப்படுகிறது.

கும்பகோணத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, திருச்சேறை. இங்கு அமைந்துள்ள சாரபரமேஸ்வரர் கோவில் கடன் நிவர்த்திக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் பாடல் பெற்ற தளங்களில் ஒன்றாகும். திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் இங்கிருக்கும் சிவபெருமானை வந்து வணங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இறைவனின் பெயர் சாரபரமேஸ்வரர். இறைவியின் பெயர் ஞானாம்பிகையாகும்.

இக்கோவிலில் இருக்கும் ரூணவிமோர்ஷன லிங்கத்தை 11 திங்கள் வழிப்பட்டால் கடன் தீரும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமில்லாமல், குழந்தையின்மை, திருமணத்தடை போன்றவை நீங்கி வாழ்வில் உயர்வு பெறலாம் என்று கூறப்படுகிறது.

இங்கேயிருக்கும் லிங்கத்தை மார்க்கண்டேயர் நிறுவி கடன் பிரச்னை நீங்க வேண்டிக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது. எனினும் கடன் என்று அவர் குறிப்பிடுவது பிறவிக்கடனையும் சேர்த்துதான். மார்கண்டேயர் இங்கே மோக்ஷம் பெற்றார் என்று கூறப்படுகிறது.

சாரபரமேஸ்வரர்
சாரபரமேஸ்வரர்

திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் சாரபரமேஸ்வரருக்கு அபிஷேகம் நிகழ்த்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. 11 திட்கட்கிழமை அபிஷேக பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வணங்கி வந்தால் கடன் நிவர்த்தி ஏற்படும் என்பது மக்களின்  நம்பிக்கையாகும்.

ஆண்டுதோறும் 13,14,15 ஆம் தேதிகளில் மாசி மாதத்தில் இறைவன் மீதும் இறைவி மீதும் சூரிய ஒளி விழும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இக்கோவிலை ‘உடையார் கோவில்’ என்றும் அழைப்பார்கள்.

இக்கோவிலில் சிவபெருமானை ‘செந்நெறியப்பர்’ என்றும் அழைக்கிறார்கள். சிவபெருமான் எல்லோருக்கும் வாழ்வதற்கான நல்வழியினை காட்டுவார் என்று பொருள்.

இக்கோவில் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது பக்தர்கள் கூட்டம் அந்நாளில் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடன் நிவர்த்தி பெறுவதற்கு ஒருமுறையேனும் இக்கோவிலுக்கு சென்று சாரபரமேஸ்வரரை வழிப்பட்டு விட்டு வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com