திங்கள் இரவு மட்டும் திறக்கப்படும் அதிசய சிவன் கோவில் பற்றி தெரியுமா?

Pothu Avudaiyar Temple
Pothu Avudaiyar TempleImage Credits: Dailythanthi

சிவன் கோவில் என்றாலே  அதிசயத்திற்கு பஞ்சம் இருக்காது. இதுவரை எண்ணற்ற அதிசயம் நிறைந்த, ஆச்சர்யம் தரக்கூடிய சிவன் கோவில்களை பற்றி பார்த்திருப்போம். ஆனால் இரவு மட்டும் நடைத்திறந்து பக்தர்களுக்கு அருள் புரியும் சிவன் கோவில் பற்றி தெரியுமா?  அந்த அதிசயக்கோவிலை பற்றித்தான் இந்த கட்டுரையில் காண உள்ளோம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை அருகில் பரக்கலக்கோட்டை என்னும் ஊரில் அமைந்திருக்கிறது பொதுவுடையார் கோவில். இக்கோவில் திங்கட்கிழமை மட்டும் வாரத்தில் ஒருநாள் நள்ளிரவில் கோயில் திறக்கப்படுகிறது. இக்கோவிலில் அம்பாள் கிடையாது. சிவபெருமான் வெள்ளால மர வடிவில் காட்சி தருகிறார்.  தை மாதம் தைத் திருபொங்கல் நாள் அன்று மட்டும் அதிகாலையிலிருந்து மாலை 7 மணி வரை நாள் முழுவதும் நடை திறக்கப்பட்டிருக்கும். அன்று சுவாமியின் மீது சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம். சுவாமிக்கென்று தனி விமானம் எதுவுமில்லை.

இங்கு சிவலிங்கம் கிடையாது. வெள்ளால மரமே லிங்கமாக பூஜிக்கப்படுகிறது. வெள்ளால மரத்தில் சந்தனக்காப்பு கட்டி சிகப்பு வஸ்திரம் கட்டி சிவலிங்கமாக பாவித்து வணங்குகிறார்கள். மூலஸ்தானத்தில் ஆலமரத்திற்கு முன்பாக சிவனின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவபெருமான் முனிவர்களுக்கு காட்சி தந்ததன் அடையாளமாக இந்த பாதம் வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

இந்த கோவிலில் திட்கட்கிழமை இரவு 10 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு 11 மணிக்கு அலங்காரம் நடைப்பெறுகிறது. சுவாமியை 12 மணிக்கு தரிசிக்கலாம். சூரிய உதயத்திற்கு முன்பாகவே ஆலயம் மூடப்படுகிறது. சிவராத்திரி, திருகார்த்திகை, அன்னாபிஷேகம் என்று எந்த பண்டிகையும் இங்கே கொண்டாடப்படுவதில்லை. இங்கு சிவனாக கருதப்படும் ஆலமரத்து இலையே பிரசாதமாக கருதப்படுகிறது. பக்தர்கள் இந்த இலையை வீட்டில் கொண்டு வைத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்றும் விவசாய நிலத்தில் இட்டால் விவசாயம் பெருகும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த கோவில் மூடப்பட்டிருக்கும் நேரத்தில் சுவாமி சன்னதியருகே பூஜை நடைப்பெற்று தான் வருகிறது. அங்கிருக்கும் கதவையே சிவனாக பாவித்து பக்தர்கள் வேண்டிக்கொண்டு செல்கிறார்கள். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இந்த மரத்தில் தாலி கட்டி, தொட்டில் கட்டி வேண்டிக்கொண்டு செல்கிறார்கள்.

பெண்கள் முடி வளர்வதற்காக தென்னங்கீற்றால் செய்யப்பட்ட துடப்பத்தை காணிக்கையாக செலுத்துகிறார்கள். தென்னங்கீற்றில் உள்ள குச்சுகளை தங்கள் கைகளால் துடப்பமாக செய்து காணிக்கை செலுத்தும்போது தங்களுக்கும் தென்னங்கீற்று போலவே தலைமுடி வளரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதையும் படியுங்கள்:
நம் தலையெழுத்தையே மாற்றக்கூடிய கோவில் எங்கிருக்கிறது தெரியுமா?
Pothu Avudaiyar Temple

இந்த ஆலயத்தின் தல வரலாறு என்னவென்றால், பரக்கலக்கோட்டை வெள்ளால மரத்தடியில் அமர்ந்தப்படி வான்கோபரும், மகாகோபரும் சிதம்பரத்தை பற்றியும், இரவு தரிசனத்தை பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்படி பேசும் போதுதான் கடவுளை அடைய சிறந்த வழி துறவரமா அல்லது இல்லறமா? என்று பெரும் சண்டை ஏற்பட்டது. உடனே முனிவர்கள் இருவரும் இந்திரனை கூப்பிட்டு இதற்கு பதில் கேட்க, இந்திரனோ தில்லை நடராஜரிடம் கேளுங்கள் அவர்தான் இதற்கு சரியான பதில் அளிப்பார் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். உடனே முனிவர்களும் சிதம்பரம் சென்று சிவபெருமானிடம் இக்கேள்விக்கு பதில் வேண்டி நின்றனர்.

சிவபெருமானோ நீங்கள் இதுவரை தவம் செய்து கொண்டிருந்த வெள்ளால மரத்திற்கு சென்று காத்திருங்கள். இங்கே பூஜைகள் முடிந்த பிறகு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சிதம்பத்தில் பூஜைகளை முடித்து விட்டு பரக்கலக்கோட்டைக்கு சிவபெருமான் வந்து காட்சி தருகிறார். இல்லறமோ, துறவரமோ நெறி பிறழாமல், நேர்மையுடன் ஒருமித்த சித்தனையோடு இருக்க வேண்டும். இதுவே போதுமானது என்று அருளினாராம் சிவபெருமான்.

இங்கேயே இருந்த எங்களை போன்ற முனிவர்களுக்கும், மக்களுக்கும் அருள் புரிய வேண்டும் என்று வேண்டினார்கள் முனிவர்கள். எனவே அங்கேயே ஆலமரத்தில் ஐக்கியமானார் சிவபெருமான். இரண்டு முனிவர்களுக்கும் பொதுவாக இருந்து தீர்ப்பு வழங்கியதால், இந்த சிவபெருமானுக்கு பொது ஆவுடையார் என்ற நாமம் வந்தது. ஆகையால் இத்தகைய அதிசயக்கோவிலுக்கு சென்று ஒருமுறையாவது சிவனை தரிசிப்பது சிறப்பாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com