இந்தியாவில் ரக்ஷாபந்தன் வெகுவிமர்சியாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த பண்டிகை வடமாநிலத்தில் மிகவும் பிரபலம். ரக்ஷாபந்தன் நன்நாளில் சகோதரிகள் தங்கள் சகோதரனின் கையில் ராக்கி கட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடுவார்கள். ரக்ஷாபந்தன் பாதுகாப்பு, அன்பு, மரியாதையை உணர்த்தும் பண்டிகையாகும். தற்போது இந்த பண்டிகை ஜாதி, மதபேதமின்றி, ரத்த பந்தமின்றி ஒருவர் நலனில் அக்கறை கொண்டவர்கள் அவர்களை சகோதர சகோதரியாக ஏற்றுக்கொள்ளும் பண்டிகையாக மாறிவிட்டது.
ஒருமுறை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு கையிலே காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. இதைப் பார்த்த பாண்டவர்களின் மனைவியான திரௌபதி தன் புடவையின் தலைப்பை கிழித்து கிருஷ்ணரின் மணிக்கட்டில் கட்டிவிட்டு கையிலிருந்து வழியும் இரத்தத்தை தடுத்தார். இதனால் மனம் நெகிழ்ந்துப் போன கிருஷ்ணர். 'உன்னை நான் எல்லா விதமான கஷ்டங்களில் இருந்து எப்போதும் காப்பாற்றுவேன்' என்று திரௌபதிக்கு சத்தியம் செய்துக் கொடுத்தார் கிருஷ்ணர்.
இந்த சத்தியத்தின் அடிப்படையில்தான் கௌரவர்களின் சபையிலே திரௌபதி துகில் உரியப்பட்டபோது, அவர் ‘கிருஷ்ணா’ என்று கதறிக் கூப்பிட்டதும் புடவையை வளரவிட்டு திரௌபதியின் மானத்தை காப்பாற்றினார் கிருஷ்ணர். திரௌபதி கிருஷ்ணரின் கையிலே போட்டக் கட்டைதான் ரக்ஷாபந்தன் என்று ஆவணி மாதம் பௌர்ணமி நாளன்று வடஇந்தியாவில் கொண்டாடுகிறார்கள்.
இன்னொரு புகழ்பெற்ற கதையும் உண்டு. விஷ்ணுப்புராணத்தின்படி, பாலி ஒருமுறை விஷ்ணு பகவானிடம் தன்னுடன் தன் அரண்மனைக்கு வந்து தங்கி தன்னைக் காத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொள்வார். அவரின் வேண்டுதலுக்கு இணங்கி விஷ்ணு பகவானும் வைகுண்டத்தை விட்டு பாலியுடன் சென்றுவிடுவார். விஷ்ணு பகவானின் பிரிவை தாங்க முடியாத லக்ஷ்மி தேவி பெண் வேடத்தில் பாலியின் அரண்மனைக்கு சென்று அவரின் கையிலே வண்ணமயமான கயிற்றை அவரின் பாதுகாப்பிற்காக என்று கட்டிவிடுவார்.
இதனால் மனம் மகிழ்ந்த பாலி அந்த பெண்மணிக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்பார். உடனே லக்ஷ்மி தேவி தன் உருவத்திற்கு மாறி தன்னுடைய கணவனான விஷ்ணு பகவானை வைகுண்டத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்பார். அதை பாலியால் மறுக்க முடியாமல் ஏற்றுக்கொள்வார்.
பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கும், சகோதரர்களாக நினைப்பவர்களுக்கும் கையில் ராக்கி கட்டி, திலகமிட்டு ஆரத்தி எடுப்பார்கள். இதை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு ஆணும் அந்த சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலனுக்கும் உறுதுணையாக இருப்பதாக சத்தியம் செய்வதாக அர்த்தம். வடஇந்தியாவில் மட்டுமே பிரபலமாக இருந்த ரக்ஷாபந்தன் தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாக குடும்பங்களில் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியான விஷயமாகும். சகோதர பாசத்தின் அழகான வெளிப்பாடே இந்த ரக்ஷாபந்தன் பண்டிகையாகும்.