இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜகநாதர் கோவிலில் இருக்கும் மரத்தால் ஆன கிருஷ்ணர் சிலையில் வைக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணரின் இதயம் இன்றளவும் துடித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
குருஷேத்திர போரில் தனது 100 புதல்வர்களான கௌரவர்கள் இறந்ததற்கு காரணம் கிருஷ்ணர்தான் என கருதி காந்தாரி கிருஷ்ணரை சபிக்கிறாள். ‘எப்படி என் வம்சம் அழிந்ததோ? அதுப்போலவே உன்னுடைய யாதவக்குலமும் அழிந்துப்போகும்’ என்று சாபம் விட்டாள்.
காலப்போக்கில் காந்தாரியின் சாபம் பழித்தது. கிருஷ்ணரின் யாதவக்குலம் அழிந்தது. இதனால், மனமுடைந்த கிருஷ்ணர் ஒரு மரத்தடியில் ஆழ்ந்த தியானத்தில் இருப்பார். அப்போது அந்த வழியாக வந்த வேடன் ஒருவன் கிருஷ்ணரின் காலை பார்த்து மான் என்று நினைத்து அம்பை எய்து விடுவான். இதனால் கிருஷ்ணர் இறந்து விடுவார். இதையறிந்த பாண்டவர்கள் கிருஷ்ணரின் இறுதி சடங்கை செய்துவிட்டு அவ்விடத்தை விட்டு சென்றுவிடுவர்.
அப்போது அங்கே நின்றுக்கொண்டிருந்த வேடன் ஒரு அதிசயத்தை பார்க்கிறான். கிருஷ்ணரின் முழு உடலும் எரிந்துவிட்டது. ஆனால், அவரது இதயம் மட்டும் எரியாமல் துடித்துக் கொண்டிருந்தது. உடனே வேடன் அந்த இதயத்தை மரத்துண்டில் வைத்து ஆற்றில் விடுகிறான். அது கரை ஒதுங்கிய இடம்தான் ஒடிசாவில் இருக்கும் பூரி ஜெகநாதர் கோவில். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் கிருஷ்ணரின் இதயம் அங்கு இன்றும் துடித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
அந்த பகுதியில் இருந்த அரசன் கிருஷ்ணரின் இதயத்தை பாதுகாக்க கோவில் கட்டி மரத்தால் ஆன சிலை செய்து அதில் பாதுகாப்பாக வைக்கிறார். அதுவே பூரி ஜெகாநாதர் கோவிலாகும். இக்கோவிலில் 12 வருடங்களுக்கு ஒருமுறை கிருஷ்ணரின் இதயம் மாற்றப்படுகிறது.
ஏனெனில், கிருஷ்ணரின் இதயம் மரச்சிலையை அரித்துவிடுவதாக சொல்லப்படுகிறது. கிருஷ்ணரின் இதயத்தை மாற்றி புது மரச்சிலையில் வைக்கும் பண்டிகையின்போது ‘பிரம்ம பதார்த்தா' என்று சொல்லப்படும் கிருஷ்ணரின் இதயத்தை மனிதர்கள் பார்ப்பதோ அல்லது தொடுவதோ ஆபத்து என்று சொல்லப்படுகிறது. அதை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக ஒடிசா அரசாங்கம் அந்த நாளில் இரவில் மின்சாரத்தை துண்டித்து விடுவதாக சொல்லப்படுகிறது. கிருஷ்ணரின் இதயத்தை மாற்றும் பொறுப்பில் இருக்கும் கோவில் பூசாரி நல்ல அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும்.
இவர் கண்கள் மற்றும் கைகள் பட்டுத்துணியால் கட்டப்பட்டிருக்கும். இவரே கிருஷ்ணரின் இதயத்தை மாற்றி புது மரச்சிலையில் வைப்பார். இந்த பண்டிகையை ‘நபகலேபரா’ என்று அழைப்பார்கள். அதாவது ‘புது உடல்’ என்று பொருள். 2015 ஆம் ஆண்டு ஒடிசாவில் நடந்த இந்த பண்டிகையைக் காண 3 மில்லியனுக்கும் அதிகமாக பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்ததாக சொல்லப்படுகிறது. இந்த அதிசயத்தை உணர வேண்டுமென்றால், நீங்களும் இக்கோவிலுக்கு ஒருமுறை சென்று தரிசித்துவிட்டு வாருங்கள்.