பஞ்சம் போக்க பீமன் வழிபட்ட சிவாலயம் எங்கே இருக்கிறது தெரியுமா?

அம்பிகையுடன் பீமேஸ்வரர்
அம்பிகையுடன் பீமேஸ்வரர்
Published on

சேலம் மாவட்டம், பரமத்திவேலூர் மாவுரெட்டி திருத்தலத்தில் அமைந்துள்ளது பீமேஸ்வரர் திருக்கோயில். பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமன், பிரதிஷ்டை செய்து வழிபட்ட பெருமை மிக்கது இந்தத் திருத்தல சிவலிங்கம். இக்கோயில் திருமணிமுத்தாற்றங்கரையில் அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்கள் காலத்தில் அஸ்தினாபுரத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் தண்ணீர், உணவு இல்லாமல் மிகவும் கஷ்டத்திற்கு ஆளானார்கள்.

இந்தப் பஞ்சத்தை தீர்க்க என்ன வழி என்று அரச குருவிடம் கேட்டபோது, அசரீரி மூலம் தகவல் ஒன்று வந்தது. பஞ்சபாண்டவர்கள் அனைவரும் வடதிசை நோக்கி செல்ல வேண்டும். அங்கு ஒரு வனத்தில் புருஷாமிருகம் உள்ளது. அது மிகவும் சக்தி வாய்ந்தது. அதோடு, சிவன் அருள் பெற்றது. அதனைப் பிடித்து வந்தால் நாட்டில் நிலவும் கடும் பஞ்சம் தீரும் என்றது அந்த அசரீரி. இதனைக் கேட்ட பஞ்சபாண்டவர்கள் வடதிசை நோக்கி அந்த மிருகத்தைப் பிடித்து வரச் சென்றனர். அந்த மிருகத்தை இவர்களை கடுமையாகத் தாக்கியது.

பீமன் லிங்கப்பிரதிஷ்டை செய்து வழிபட்ட கோயில்
பீமன் லிங்கப்பிரதிஷ்டை செய்து வழிபட்ட கோயில்

அம்மிருகத்துக்கு பயந்து இவர்கள் திருமணிமுத்தாற்றங்கரையில் ஓடிவரும்போது, தருமர் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பாண்டவர்களை துரத்தி வந்த அந்த மிருகம் சிவலிங்கத்தைக் கண்டதும், சிவ பக்தியால் சிவலிங்கத்தை சுற்றி வந்தது. இதனால் அந்த மிருகத்திடமிருந்து தப்பிக்க, திருமணிமுத்தாற்றங்கரையில் ஒன்றன்பின் ஒன்றாக லிங்கப் பிரதிஷ்டை செய்து பாண்டவர்கள் வழிபட்டனர்.

அந்த மிருகமும் ஒவ்வொரு லிங்கமாய் சுற்றி வந்து தனது கோபம் தணிந்தது. இந்த சம்பவம் நடைபெற்ற மாவுரெட்டி என்ற ஊரில் உள்ள லிங்கம் பஞ்சபாண்டவர்களில் பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டதால் இக்கோயிலுக்கு பீமேஸ்வரர் கோயில் என்று பெயர்.

இதையும் படியுங்கள்:
தோசை பிரசாதமாக வழங்கப்படும் கோயில்கள் தெரியுமா?
அம்பிகையுடன் பீமேஸ்வரர்

இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம். பஞ்ச காலத்தில் பீமேஸ்வரரை வழிபட்டால் நல்ல மழை பொழியும் என்பதும் நம்பிக்கை.

இக்கோயில் சேலத்திலிருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் 50 கி.மீ. தொலைவில் மாவுரெட்டி என்ற தலத்தில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com