80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

Sri Naganathar Temple
Sri Naganathar Templehttps://www.gujarattourism.com

குஜராத் மாநிலம், ஜாம்நகர் மாவட்டத்தின் தாருகாவனத்தில் அமைந்துள்ளது நாகேஸ்வரர் திருக்கோவில். இது துவாரகா நகரத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் இதுவும் ஒன்று. இத்தல இறைவனின் பெயர் நாகநாதர். கருவறையில் மூலவர் தெற்கு நோக்கிய கோலத்தில் லிங்க சொரூபமாக அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் நாகேஸ்வரி. தல தீர்த்தங்களா பீம தீர்த்தம், நாக தீர்த்தம் உள்ளன. நாகநாதர் கோயில் மிகவும் பழைமையானது. ஜோதிர்லிங்க தலங்களில் முதன் முதலில் தோன்றிய தலம் இதுவென்று கூறப்படுகிறது.

நான்கு பக்கமும் உயர்ந்த மதில் சுவர்கள் கொண்டு விசாலமாக அமைந்துள்ளது இக்கோயில். கிழக்கு மற்றும் வடக்கு ஆகிய இரண்டு பக்கங்களில் வாயில்கள் உள்ளன. வடக்கு பக்க வாயில் மட்டும் பெரியதாகவும் புழக்கத்திலும் உள்ளது. கோயில் கோபுரம் வாழைப்பூ போன்று கூம்பு வடிவில் மிக உயரமாகவும் நிறைய சிற்ப வேலைப்பாடுகள் கூடியதாகவும் காட்சி தருகிறது. கோயில் கோபுரத்திற்குக் கீழ் கருவறைக்குள் ஒரு மேடை மட்டுமே உள்ளது. கருவறையின் இடப்பக்கம் மூலையில் மட்டும் ஒரு நான்கடி நீளம், நான்கடி அகலம் உள்ள சுரங்கப்பாதை உள்ளது. அதன் வழியே உள்ளே சென்றால் பூமிக்கு அடியில் ஒரு சிறிய அறையில் மூலவர் நாகநாதர் அருள்பாலிக்கிறார். அந்த சதுரமான துவாரத்தின் வழியே பக்தர்கள் குதித்துதான் இறங்க வேண்டும்.ஏறும்போது தாவியே ஏறி வர வேண்டும்.

பக்தர்கள் கூட்ட நெருக்கடியின் காரணமாக உள்ளே செல்வதும், மேலே ஏறி வருவதும், கூட்ட நெரிசலில் சற்று கஷ்டமாகத்தான் உள்ளது. இந்த பாதாள அறையில் நிற்க முடியாது. மேற்கூரை தலையில் இடிக்கும். எனவே, மூலவரை சுற்றி அமர்ந்துதான் சுவாமியை தரிசிக்க முடியும். லிங்கம் சிறியதாக உள்ளது. வெள்ளியினால் ஆன கவசம் சாத்தி வழிபடுகின்றனர்.

இக்கோயிலின் முக்கிய சிறப்பம்சமாக 80 அடி உயரமுள்ள சிவபெருமான் சிலை உள்ளது. நாகேஸ்வரர் சிவலிங்கமானது, ‘தாருக்கா ஷிலா’ எனப்படும் கல்லால் ஆனது. அதன் மீது சிறிய சக்கரங்கள் அமைந்துள்ளன. இது மூன்று முக ருத்ராட்ச வடிவில் காணப்படுகிறது. நாகேஸ்வரர் மகாதேவ் சிவலிங்கம் தெற்கு நோக்கியும், கோமுகம் கிழக்கு நோக்கியும் உள்ளது. நாமதேவ் என்ற பக்தருக்காக சிவபெருமான் தெற்கு நோக்கி திரும்பி காட்சியளித்ததாகக் கூறப்படுகிறது.

முற்காலத்தில் தாருகாவனம் என புகழ் பெற்று விளங்கிய இந்த வனத்தில் பல ரிஷிகளும், முனிவர்களும் தங்கள் மனைவிமார்களுடன் வாழ்ந்து வந்தனர். தாருகாவன முனிவர்கள் மிகுந்த தவ வலிமை மிக்கவர்களாகவும், அவர்களது மனைவியரின் பதிவிரதத் தன்மையால் மிகவும் கர்வமும் கொண்டிருந்தனர். ‘இறைவன் என்பவன் இல்லை, தவம் செய்வதே சிறந்தது’ என்று பேசித் திரிந்தனர். இதனால் சிவபெருமான் முனிவர்களின் கர்வத்தை அகற்றி அவர்களை நல்வழிக்கு கொண்டு வர எண்ணி அழகிய ஆண் மகனாகத் தோன்றி, ‘பிட்சாம்தேஹி’ என பிட்சாடண மூர்த்தியாக பிச்சை கேட்டு வர முனிவர்களின் மனைவிமார்கள் பிட்சாடன மூர்த்தியின் அழகைக் கண்டு தன்வசம் இழந்து அவர் பின்னே சென்றனர்.

இதையும் படியுங்கள்:
ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?
Sri Naganathar Temple

சிவபெருமான் பிட்சாடனராக வந்து லீலை புரிந்து தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தை போக்கி நாகப்பாம்பின் புற்றுக்குள் நாகத்தின் குடையுடன் காட்சி தந்தமையால் நாகநாதர் எனவும், இத்தலத்திற்கு நாகநாதம் எனவும் பெயர் வந்தது. ஜோதி வடிவமுடன் காட்சி தந்தமையினால் ஜோதிர்லிங்கம் ஆயிற்று.

லிங்க வடிவங்களில் ஜோதிர்லிங்கம் என்பது சிறப்பு வாய்ந்தது. இந்தியா முழுவதும் 12 ஜோதிர்லிங்க திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமான் தன்னை ஜோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாகப் புராணங்கள் சொல்கின்றன. இதனால் திருவாதிரை நாளில் ஜோதிர்லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறந்த நாளாகக் கருதப்படுகிறது.

இந்தக் கோயிலுக்கு செல்ல ஏற்ற நேரம் என்று பார்த்தால் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை ஆகும். சிவராத்திரி இக்கோயிலில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோயில் காலை 6 முதல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com